Tuesday, 22 December 2009

திவ்யா என் காதலியே !செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை

சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த  ரயிலில் வழக்கம்போல பிரசன்னா அலுவலகம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான்.அன்றைய தினம் ரயில் பெட்டி மிகவும் வெறிச்சோடி போயிருந்தது.காலையில் இருந்தே அவனுடைய மனம் மிகவும் அமைதியற்று இருந்தது.மெதுவாக ரயில் பெட்டியின் உள்ளே நடக்க தொடங்கிய பிரசன்னா குளிரில் நடுங்கியபடி,மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த இளம்பெண் ,அச்சு அசலாய் அவன் காதலி திவ்யாவின் உருவத்தை ஒத்திருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான்.அவளின் நிலை உணர்ந்து தன்னுடைய குளிராடையை அவளின் மேல் போர்த்திவிட்டான்.எந்த சலனமும் இன்றி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் முக வாட்டம் அவள் மிகுந்த பசியோடு இருப்பதை நன்கு உணர்த்தியது.தனக்காக வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தை அவளின் முன் பிரித்து வைத்தான்.அளவிடமுடியாத பசியோடிருந்த அந்த பெண் உணவை கண்டதும் அதி விரைவாக அந்த உணவை உண்ண தொடங்கினாள்.


பிரசன்னாவின் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின.பிரசன்னா மிக்க வசீகரமான அழகுடையவன்.கல்லூரியில் அவன் இயல்பின் பால் கவரப்பட்டு பலரும் அவன் மேல் மையல் கொண்டு காதலை வெளிப்படுத்திய போதும் பிரசன்னா யாருடைய மனதும் புண்படா வண்ணம் அவர்களின் காதலை மறுத்துக்கொண்டிருந்ததான்.அவன் இறுதியாண்டில்நுழைந்தபோதுமுதலாமாண்டு மாணவியாய் வந்த திவ்யாவை கண்டதும் மனஉறுதி எல்லாம் காணாமல் போக கண்டான்,அவனுக்கு திவ்யாவின் மேல் தீராத காதல் உண்டாயிற்று..பிரசன்னா வெளிப்படுத்திய காதலை திவ்யா மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட போது பிரசன்னாவின் மகிழ்ச்சி பன்மடங்காக பல்கி பெருகியது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்களின் காதல் கிழைத்து தழைத்து பெருமரமாக வேரூன்றியது.நன்கு படித்து முடித்து இருவரும் நல்ல வேலையில் சேர்ந்தும் விட்டிருந்தனர்.இருவருடைய குடும்பமும் அவர்களின் காதலை முழுமையாக அங்கீகரித்து திருமணத்திற்கு இசைவும் தெரிவித்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திடீரெனெ ஒரு சாலை விபத்தில் திவ்யா இறந்து போனபோது பிரசன்னாவிற்கு வாழ்வே சூன்யமாகிபோனது.அவன் முகம் புன்னகையற்று போனது. அவன் நாட்கள் நரகமாக நகர தொடங்கின.அவன் தாயின் வற்றாத கண்ணீர் தான் பிரசன்னாவின் மனதை இளக்கி அவனை இயல்பு வாழ்விற்கு திரும்ப வைத்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திவ்யாவை போன்றே வயதும் உருவமும் உள்ள ஒரு பெண்ணை மனநிலை சரியில்லாமல், மற்றவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் கண்டதும் பிரசன்னாவிற்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பெண் மிகுந்த அசதியால் பிரசன்னாவின் மடியில் தலை வைத்து உறங்க தொடங்கினாள்.பிரசன்னாவிற்கு தன்னுடைய திவ்யாவே தன்னிடம் திரும்பி வந்துவிட்டதை போன்றதொரு அழுத்தமான உணர்வு மேலோங்கியது.சற்று நேரத்தில் எல்லாம் பிரசன்னா இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது.பிரசன்னா அவளுடைய கைகளை பற்றி அழைக்க அந்த பெண் மறுப்பேதுமின்றி ஒரு குழந்தையாய் அவனை பின் தொடரலானாள்.இனி அந்த பெண்ணிற்கு அழுத்தமான துணையாக பிரசன்னா இருப்பான்.அந்த சிறு ரயில் பயணம் ஒரு மனநிலை சரியில்லாத அபலை பெண்ணின் வாழ்வுக்கு வெளிச்சத்தை உண்டாக்கி இருந்தது.வாழ்வில் எத்தனையோ பேர்களை பிரித்தும்,சேர்த்தும் வைத்துக்கொண்டிருந்த அந்த ரயில் ஒரு நீண்ட சப்தமெழுப்பியபடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது.


---சே.தரணிகுமார்Sunday, 20 December 2009

காதல்


சின்னசாமியின் குடும்பம் சற்றே பெரியது .அவருக்கு மொத்தம் ஐந்து பெண்கள்.அவர் பொறுப்பில்லாத குடிகாரராக இருந்தபோதும் அவருடைய பெண்கள் பொறுப்பானவர்களாக இருந்ததினால் அவர் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்காமல் இருந்தது.வாணி அவருடைய மூன்றாவது பெண்.வாணி மிகவும் நல்ல குணம் கொண்டவள்.மிகவும் இரக்க சிந்தை கொண்டவள். அந்த குடியிருப்பு பகுதி அனைவருக்கும் வாணி செல்லமான பெண்ணாக இருந்தாள்.குடும்ப சூழலால் வாணியால் எட்டாம் வகுப்பிற்க்கு மேல் படிப்பை தொடர இயலவில்லை.அந்த குடும்பத்தில் மூத்த பெண்ணிற்கு மட்டுமே திருமணம் முடிந்திருந்தது. வாணியும் அவளுக்கு அடுத்திருந்த சகோதரியும் அந்த ஊரில் இருந்த ஒரு காலனி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றியதோடு தனக்கு அடுத்திருந்த இளைய சகோதரிகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.


மதனை சந்திக்கும்வரை வாணியுடைய வாழ்க்கை தெள்ளிய நீரோடையாகவே சென்று கொண்டிருந்தது.மதன் அந்த ஊரில் ரயில்வே மின்மயமாக்கல் பணியின் நிமித்தமாக தற்காலிகமாக தங்கி இருந்தான்.எதேச்சையாக ஒருநாள் வாணியை கோவிலில் பார்த்த மதன் பார்த்த நொடியே தன்னுடைய மனதை வாணியிடம் பறிகொடுத்துவிட்டான். மதன் இயல்பிலேயே மிக இனிமையாக பழக கூடியவன்.அவனுடைய வசீகரமான தோற்றமும்,இனிமையான புன்னகையும் எவரையும் அவன் மெல் மையல் கொள்ள வைக்கும் காரணிகளாக இருந்தது.தனக்கு மேல் ஒரு திருமணமாகாத சகோதரி இருக்கும் நிலையில் தான் காதல் வயப்படுவது சரிதானா என்று முதலில் தவித்த வாணியால், இறுதியில் மதனுடைய காந்த காதல் பார்வையின் முன்பு ஒன்றுமே செய்ய இயலாமல் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளும் படி ஆகி போனது.

அவர்கள் காதல் மிக மிக பரிசுத்தமானதாக இருந்தது.கண்ணியம் மிக்கதாக இருந்தது.பெரும்பாலும் அவர்கள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வரும் சந்தர்ப்பங்களிலேயே தங்கள் மனங்களை பறிமாறிக்கொள்ளலாயினர்.வாணி மதனை தன்னுடைய கணவனாகவே மனதில் வரித்திருந்தாள்.ஒருநாள் மதன் வேலைக்கு சென்றுகொண்டிருந்த சமயத்தில் சிறு குழந்தைகளின் பள்ளிகூட வகுப்பறைக்குள் நாக பாம்பு ஒன்று நுழைந்து விட அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க மிக்க துணிச்சலுடன் வகுப்பறைக்குள் நுழைந்த மதன் அந்த கொடிய பாம்பை கொன்று குழந்தைகளின் அச்சத்தை போக்கினான்.அப்போது அங்கிருந்த ஊர் பெரிசுகள் சிலர் அன்று நாக பன்சமி என்றும் இந்த நாளில் நாக பாம்பை கொள்பவர்கள் மரணமடைவார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள்.


மறுநாள் ரயில்வே நிலையத்தில் கையில் அலை பேசியில் பேசிக்கொண்டே நான்கைந்து தண்டவாளங்கள் இருக்கும் பகுதியை கடந்த மதன் ஒரு தண்டவாளத்தில் மெதுவாக வரும் ரயிலை கவனித்தவன் மற்றொரு தண்டவாளத்தில் வந்த விரைவு ரயிலை கவனிக்க தவறியதால் அந்த ரயிலில் சிக்கி துண்டு துண்டாக சிதறி போனான்.மதன் வெளி ஊரை சேர்ந்தவன் என்பதால் ஊரில் இருப்பவர்களுக்கு அவனுடைய இறப்பு என்பது வேடிக்கை பார்க்கும் விஷயமாக மட்டுமே ஆகி போனது.செய்தி அறிந்த வாணி வேரறுந்த கொடியாக துவண்டு போனாள்.அவளுக்கு மதனுடைய உடலை பார்க்க கூட இயலாமல் போனது.துடிதுடித்து போன வாணிக்கு இந்த உலகமே இருண்டு போனது.மதன் இல்லாத வாழ்வை அவளால் சிறிது கூட கற்பனை செய்ய முடியவில்லை.

அன்று இரவு முழுமையும் மதனை எண்ணி தவித்த வாணி அவன் இல்லாத உலகில் வாழ விருப்பமின்றி அதிகாலையில் ஊருக்கு ஒதுக்குபுரமாக இருந்த வயல்வெளி கிணற்றில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டாள். அடுத்த இரண்டு நாட்கள் வாணியை காணாது தவித்து தேடிக்கொண்டிருந்த அவளுடைய குடும்பத்திற்கு அவள் இறந்து போய் கிணற்றில் பிணமாக மிதக்கும் செய்தி பேரிடியாக இருந்தது.அவள் இறந்ததின் காரணம் அவளுடைய நெருங்கிய நட்புகளுக்கு அன்றி வேரெவெருக்கும் சிறிதும் தெரியாமலேயே போனது.

அந்த ஊரை சேர்ந்த சுப்ரமணி தொட்ட விஷயதிற்கு எல்லாம் தானும் பயந்து அடுத்தவர்களையும் பயமுறுத்தும் இயல்பு கொண்டவர். வாணி இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு அவள் இறந்த கிணற்றின் வழியாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் சுப்ரமணி வந்து கொண்டிருந்த போது கூட்டத்தை விட்டு பிரிந்து தன் தாயை தேடி அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருந்த ஒரு ஆட்டு குட்டியின் கழுத்தில் கிடந்த சலங்கைகளின் ஒலி அந்த நிசப்தமான நேரத்தில் அவருக்கு வாணி என்னும் பேயின் கால் சலங்கை ஒலியாக கற்பனையாக பயமுறுத்தியது.இப்படியாக பலரின் கற்பனையின் விளைவாக வாணி என்னும் அன்பான பெண் கொடூரமான பேயாக சித்தரிக்கப்பட்டுவிட்டாள்.அந்த கிணற்றிற்கு வாணி கிணறு என்று பெயரும் வந்து விட்டது.


இந்த உலகில் காதலிப்பது ஒருவனாகவும் கரம் பிடிப்பது வேரொருவனாகவும் சிறிதும் மன உறுத்தலின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகை படத்திற்க்காக புன்னகையோடு காட்சி கொடுக்கும் பெண்கள் மத்தியில் மனதால் மட்டுமே கணவனாக வரித்து வைத்திருந்த தன்னுடைய அன்பு காதலனின் பிரிவை தாங்க இயலாமல் தன்னுடைய உயிரை துறந்த வாணி என்னை பொறுத்தவரை காதல் தேவதையாக மட்டுமே தெரிகிறாள்.அவள் இறந்து போன கிணற்றின் பக்கம் செல்வதற்கு எனக்கு என்றும் அச்சம் வந்ததே இல்லை.
சே.தரணிகுமார்

LinkWithin

Related Posts with Thumbnails