Wednesday, 19 May 2010

பேனா நட்பு














பேனா நட்பு என்ற ஒன்றை பத்தாம் வகுப்பை கடக்கும் போது தெரிந்து கொண்டதும் , அதன் மீது ஒரு அதீத ஈர்ப்பு உண்டாகி போனது.முதல் பேனா நட்புக்கென்று தெரிந்தெடுத்த மூன்று விலாசங்களுக்கும் தபால் கார்டு எழுதி அனுப்பியதை உள்ளூர் நண்பர்களிடத்தில் மிக பெருமையாக பறை சாற்றிக்கொண்டிருந்த மூன்றாம் நாளுக்குள்ளாக கடிதம் அனுப்பிய இரண்டு நபர்களிடமிருந்து பதில் கடிதம் வரப்பெற்றதும் அளவில்லாத மகிழ்ச்சியாகி போனது.


வந்திருந்த இரு பதில் கடிதங்களில் ஒன்றை ஒரு கல்லூரி மாணவர் எழுதி இருந்தார்.அந்த கடிதம் முழுமையும் தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பட்டியலிட்டு , அதை படிப்பவர்களை கண் கலங்கும்படியாக செய்திருந்தார்.அடுத்த கடிதம் ஒரு கல்லூரி ஆசிரியரிடம் இருந்து வந்திருப்பதை முகவரியில் தெரிந்து கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அந்த கடிதம் மிகவும் நேர்த்தியாய்,கவிதை நயத்துடன்,மிக அழகாக எழுதப்பட்டிருந்தது, அவரை பற்றின சுயவிவர குறிப்புகள் எல்லாம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.பதினைந்து வயது சிறுவனாகிய எனக்கு என்னை விட வயது முதிர்ந்த ,ஆசிரியர் பணியில் உள்ள ஒருவர் என் கடிதத்திற்கு பதிலாக நீண்ட விளக்கமான கடிதம் எழுதி இருந்தது,பேனா நட்பின் மேல் எனக்கிருந்த ஆவலை இன்னும் அதிகரிக்க செய்தது.











நான் முதலில் வெறும் தபால் அட்டையில் நான் தங்களுடைய பேனா நட்பை விரும்புகிறேன் என்று மட்டும் எழுதி என்னுடைய முகவரியை எழுதி அனுப்பி இருந்ததால் எனக்கு கடிதம் எழுதிய இருவருக்கும் என்னை பற்றிய முழு விவரங்களுடன் நீண்டதொரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். நான்கு நாட்களுக்கு பிறகு கல்லூரி ஆசிரியரிடமிருந்து மட்டும் ஒரு பதில் கடிதம் கிடைக்கப்பெற்றது.மிக்க ஆவலாய் கடிதத்தை பிரித்து படிக்கதொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதலில் நான் அனுப்பிய தபால் அட்டையில் தரணி என்னும் என்னுடைய பெயரை ஆண்பால் பெண்பால் ஏதும் குறிப்பிடாமல் நான் அனுப்பியதால் என்னை பெண்பாலாக எண்ணி பதில் எழுதியிருந்த கல்லூரி ஆசிரியர், இரண்டாவது கடிதத்தில் என்னை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு ,தன்னுடைய வர்ணனைகள் வீணாய் போன ஆத்திரத்தில், மிகவும் சாடியிருந்தார். அடுத்த நண்பரிடமிருந்து மீண்டும் பதில் ஏதும் வரவே இல்லை.

பிறகு எப்போதாவது ஏதாவது பத்திரிக்கைகளில் பேனா நட்பிற்கான முகவரிகள் பார்க்க நேரும்போது எல்லாம் கல்லூரி ஆசிரியரின் வசவுகள் கட்டாயம் நினைவில் வந்து கொண்டே இருந்ததால் மீண்டும் பேனா நட்பிற்கென யாருக்கும் கடிதம் எழுத இயலாமலேயே போய் விட்டது.



-------------சே.தரணிகுமார்

.

LinkWithin

Related Posts with Thumbnails