Thursday, 1 July 2010

  கலைஞரே உங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏதாவது பாராட்டு விழாக்களில் கலந்துகொண்டு மற்றவர்கள் உங்களை முகத்துக்கு நேராக புகழ்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் போபியா இருக்கிறது.உங்கள் ஆவலுக்கு தீனியாய் உங்கள் கட்சியின் மண்டல மாநாடுகள் ,நன்றி அறிவிப்பு மாநாடுகள், கலைத்துறை விழாக்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம், ஆனால் இம்முறை உங்கள் போதைக்கு ஊறுகாயாக தமிழை நீங்கள் பயன்படுத்திக்கொண்டது உண்மையில் முற்றிலும் தவறானது.


செம்மொழி மாநாடு ……… ஒற்றை வரியில் சொல்வதானால் புளியாதரைக்குள் முட்டையை வைத்து அதை பிரியாணி என்று விற்ற கதை தான் நடந்தேறியுள்ளது.கவியரங்கிலும்,கருத்தரங்கிலும் பேசிய பலரும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களை பாராட்டி மகிழ்விக்க வேண்டுமே என்று படாத பாடுபட்டார்கள்.நீங்கள் காலையில் எழுவது, பல் துலக்குவது, முரசொலி அலுவலகம் போவது முதல் உங்களின் முதுகுவலி வரையிலான செய்திகளே அந்த கவிஞர்களின் கருத்தரங்க பேச்சுக்களின் கருப்பொருளாகி போனது.உச்சகட்டமாக உங்கள் வாயில் ஊறுவது உமிழ் நீரல்ல அது தமிழ் நீர் என்று உளறும் அளவுக்கு கவியரங்கம் தரம் தாழ்ந்து போனது.உங்களை புகழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தால் அவர்களால் தமிழை அந்த அளவுக்கு கண்டு கொள்ள முடியாமல் போய்விட்டது.தன்னைப்பற்றி எதோ பேசப்போகிறார்கள் என்று ஆவலாய் வந்த தமிழன்னை கட்டாயம் கண்ணீர் சிந்தி விட்டு மாநாட்டை புறக்கணித்திருப்பாள்.

மாநாட்டின் போக்கு இப்படித்தான் போகும் என்பதை கணிக்க இயலாத அயல்நாட்டு பெண்மணி ஒருவர், இந்த மாநாடு தமிழன்னைக்கு அணிவிக்கப்பட்ட ஒரு புதிய ஆபரணம் என்று அவசரத்தில் புகழ்ந்து விட்டார். ஆனால் பின்னர் தான் உணர முடிந்தது, அது அழகிய ஆபரணம் அன்று அது தமிழன்னைக்கு உறுத்தலும், வேதனையும் தரும் தேவையற்ற ஆபரணம் என்று. இல. கணேசன் சற்று மாற்றான கருத்தை வெளியிட்டு பேசியது உங்களை சங்கடப்படுத்தியிருக்கும் ஆனால் அவர் பேசியதில் உண்மை இருந்தது.எவ்வாறு சுதந்திரம் பெற்று தந்ததை காங்கிரஸ் கட்சி மட்டுமே உரிமை கொண்டாட முடியாதோ, அதை போல தமிழை செம்மொழியாக்கியதின் முழு உரிமையை கலைஞர் மட்டுமே கொண்டாடமுடியாது, பருதிமாற்கலைஞர் முதல் எண்ணற்றோரின் முயற்சிகள் அதில் அடங்கியிருக்கிறது, ஆனால் இந்த துதிபாடிகள் ஏனோ கலைஞரை மட்டுமே அதற்கு காரணம் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

கலைஞரே உங்களுக்கு என்ன எல்லா பேரப்பிள்ளைகளும் ரெட் ஜெயண்ட் மூவீஸ், நைன் க்ளொவ் மூவீஸ்,சன் பிக்சர்ஸ், என்று அழகான ஆங்கிலத்தலைப்புகளில் பட நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள் ( ஊருக்கு மட்டுமே உபதேசம் …..வீட்டில் எல்லாம் ஆங்கில தலைப்பு தான் ) , அவர்களிடம் சொல்லி பிரம்மாணமான செட் போட்டு பெரிய படமாக இதை எடுத்திருக்கலாம், வீணாக அரசு பணத்தை இதற்கு விரயம் செய்வானேன்?

கலைஞரே நீங்கள் ஒன்றும் ராஜராஜ சோழன் இல்லை,தற்போது நடப்பது மன்னர் ஆட்சியும் இல்லை. உங்கள் வெற்றியின் வீர பராக்கிரமத்தை பறை சாற்றுவதற்கு நீங்கள் படும் பாடு புரிகிறது.இதே கூட்டத்தை தமிழினம் கடந்த வருடம் இலங்கையில் அழிந்த போது கூட்டி ,அதை தடுக்க போராடியிருந்தால்,உண்மையிலேயே உங்களை ஒட்டுமொத்த தமிழினமும் தங்கள் இனத்தின் தலைவராக தலையில் வைத்து கொண்டாடி இருந்திருக்கும்.இனத்தின் துன்பத்தை கலைய தவறிய நீங்கள் எந்த வகையில் அதன் தலைவராக உங்களை நீங்களே முடி சூட்டிக்கொள்ள முடியும்?

நடந்தது செம்மொழி மாநாடு அல்ல கலைஞர் புகழ் மாநாடு.
வாழ்க தமிழ்…….வாழ்க கலைஞர்

-------------சே.தரணிகுமார்

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails