Sunday, 8 November 2009

வீண்பழி


ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெரிய குடும்பம் எங்கள் ஊரில் டென்ட் அமைத்து தங்கி  இருந்தது. அவர்கள் ராஜ வைத்தியம் என்னும் வைத்திய முறையை கொண்டு பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அவர்கள் பணம் என்பது  குறிக்கோளாக   இல்லாமல் ,அவரவர் வசதிக்கேற்ப  வைத்தியத்திர்க்கான   பணத்தை பெற்று கொண்டார்கள். மிகவும்  
 இயலாதவர்களுக்கு கூடுமானவரை இலவசமாகவே  வைத்தியம் பார்த்தனர். அவர்கள் ஊருக்கு வந்த  இரண்டு மாதங்களில்   சுற்றுவட்ட  பகுதிகளில்  எண்ணற்ற  நோயாளிகள் அவர்களால் பலனடைந்து இருந்தனர்.


 ஊருக்கு வெளியில் இருந்த ஆலமரத்தடியினில் அவர்கள் தங்கி இருந்த இடத்தை மிகவும் சுத்தமாக பராமரித்து, சம்பாதிக்கும் பணத்தை கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கருகில்  இருந்த பம்பு செட் வீட்டில் இருந்த வயதான பெண்மணியை யாரோ நகைகளுக்காக கொலை செய்து விட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ளலாயினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பிணம் இருந்த இடத்தை முகர்ந்த மோப்ப நாய் நேராக ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே வந்து அமர்ந்து கொண்டது. பின்னர் அது சாலையின் பக்கம் சென்று படுத்து  கொண்டது.


எதையுமே மேலோட்டமாகவே சிந்தித்து, ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு பழகி போன காவல்துறையினர்,உடனே அங்கிருந்த ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் ஆறுபேரை விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்று விட்டனர். மீதமிருந்த பெண்களும்  குழந்தைகளும் மிகவும் கலக்கமுற்று கதறி அழ தொடங்கினர். இறந்து போனவரின் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்களின் வைத்தியத்தால்  பலன்பெற்ற  ஊர்மக்களும் ,   நடந்த சம்பவத்தை நேரில் கண்டது போல  அந்த அப்பாவிகளை பழித்து கூறலாயினர். நியாயமற்ற முறையில் வீண்பழி சுமத்தும் ஊரார்களின்  முன்பு அந்த பெண்களும் குழந்தைகளும் நடு நடுங்கியபடி பரிதவித்து நின்று கொண்டிருந்தனர்.


காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் காவல்துறையினரால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். கொலை செய்ததை ஒப்புக்கொள்ளும்படி கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டனர். அன்று மறுநாள் அந்த ஊரை சேர்ந்த வேலப்பன் எதேச்சையாக பக்கத்து டவுன் கடைவீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பரிச்சியமான அடகு கடைகாரர் அவரை அழைத்து , அங்கு நின்றுகொண்டிருந்த இறந்து போன பெண்மணியின்  பேரனான   தியாகுவை காட்டி ,''இவர் உங்கள் ஊர்காரர் என்று சொல்கிறார் , நகை விற்பதற்காக வந்திருக்கிறார் , இவரை  உங்களுக்கு  தெரியுமா? ''  என்று அவர் கேட்டவுடன் கலவரமாகிபோன தியாகு உடனே அவர்கையில் இருந்த நகையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சட்டென்று நகர்ந்து விட்டான்.


வேலப்பனுக்கு உண்மை புரிந்து போனது .பழக்கவழக்கம் சரியில்லாத தியாகு தான், தனது பாட்டியை நகைக்காக கொன்று இருக்கலாம் என்று அனுமாநித்தவராய் நேரே தன்னுடைய ஊர் காவல் நிலையம் சென்று நடந்தவற்றை கூறியவுடன்,அப்பாவிகளை அழைத்து வந்து குற்றவாளிகளாய் சித்தரித்து வழக்கை முடித்து கொள்ளும் காவல்துறை விழித்து கொண்டு தியாகுவை கைது செய்தது. பத்து பவுன் நகைக்காகவே தான் பாட்டியை கொலை செய்ததாக தியாகு உண்மையை ஒப்புக்கொண்டான். கொலை செய்த பின்னர் சிறிது நேரம் ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே தான் அமர்ந்துவிட்டு பிறகு சாலைக்கு வந்து பேருந்தில் ஏறி டவுனுக்கு சென்றதாக தியாகு சொன்னவுடன் தான் காவல்துறைக்கும் ஊர்மக்களுக்கும் மோப்ப நாய் டென்ட் அருகே சென்று அமர்ந்ததின்  காரணம் புரிந்தது.


காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் திரும்பி வந்ததும் , பரிதவித்து போயிருந்த  அவர்கள் குடும்பத்து பெண்கள் அவர்களை கண்ணீருடன்   கட்டி தழுவி   கொண்டனர் . அன்றைய இரவே அவர்கள் அந்த இடத்தை காலி செய்து  விட்டு எங்கோ போய் விட்டனர்.மறுநாள் வெறிச்சோடி போயிருந்த அந்த இடத்தை கண்ட ஊர்மக்கள்  '' பாவம்  இப்படி வீண்பழியால்  துன்பப்பட்டு விட்டார்களே ''  என்று யாரோ, யாருக்கோ  துன்பம் தந்ததை  போல,  ஒன்றும் அறியாத அப்பாவிகளை போல   வழக்கம் போல உச்சு  கொட்டினார்கள்.
 ----சே.தரணிகுமார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails