Monday, 9 November 2009

மனிதாபிமானம்

வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து  சென்னைக்கு  வேலைக்கு சென்று வருபவர்களுக்கு  ஏலகிரி விரைவு ரயில் என்பது வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்று. இரண்டு மணி முதல் எட்டு மணி வரை தினமும் பிரயாணம் செய்யும் அவர்கள் ஏலச்சீட்டு, மாதசீட்டு நடத்துவது முதல் இசைக்குழு அமைத்து பாடுவது என்று பல குழுக்கள் அமைத்து அந்த ரயில் பயண நேரத்தை பல்வேறு வகையாக பயன்படுத்தி கொண்டனர்.காலை ஐந்து மணிக்கு புறப்படும் அந்த ரயில் ஒன்பது மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்த பதினைந்து நிமிடங்களுக்குள் மொத்த கூட்டமும் அலுவலக நேரம் காரணமாக அதி விரைவாக கலைந்து விடும். எனக்கும் இரண்டு வருடம் அந்த ரயில் பயண அனுபவம் கிட்டியது.


ஒருமுறை அந்த ரயிலின் காலை நேர பயணத்தில் எங்களோடு பார்வையற்ற நபர் ஒருவர் பயணம் செய்தார். அவர் மிக இனிமையாக பேசியதால் அவரை சுற்றிலும் இருப்பவர்கள் அவருடன் பேசுவதற்கு மிக்க  ஆவல் கொண்டனர். அவர் தன் மகளின் திருமண விஷயமாக திருவேற்காடு வரை செல்வதற்காக அந்த ரயிலில் வந்து கொண்டிருந்தார். அவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் , உடனிருப்பவர்களை தனக்கு திருவேற்காடு செல்லும் பேருந்திற்கு வழி காட்டுமாறு பலமுறை சொல்லிக்கொண்டே வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் வழக்கம் போல மொத்த கூட்டமும் குறுகிய நேரத்தில் காணாமல் போனது. தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்கிய அந்த பார்வையற்ற நபர் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தார்.

அதுவரை அவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்த   பலருக்கும்,  அந்த விழியிழந்த  நபர் வழி காட்ட வேண்டி விடுத்த  தாழ்மையான கோரிக்கை, உதவும் மனம் துளி   கூட இல்லாததால் எல்லோருக்கும் மிக
 எளிதாக மறந்து போயிருந்தது.சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் வரும் கதாபாத்திரங்களின் துயரம் கண்டு கண்ணீர் சிந்தி மனதார இரக்கப்படும் மக்கள்,  நிஜ வாழ்வில்  துன்பப்படுபவர்களுக்காக  உண்மையிலேயே இரக்கம் கொள்ள  துணிவதே  இல்லை. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் துயரம் எத்துணை கற்பனையானதோ அதுபோல  இந்த மக்களின் இரக்க சிந்தனையும் கற்பனையான ஒன்றாகவே
 இருக்கிறது. இந்த நவீன  உலகில் மனிதாபிமானம் என்பது  அரிதான பொருளாகிவிட்டது.

நான் அவருடன் பேசவில்லை என்றாலும் நடந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்ததால்  , எனக்கு அவருடைய தேவை புரிந்தது. நான் அவருடைய கரம் பற்றி மெதுவாக ரயில்நிலையம் வெளியே அழைத்து வந்து , சுரங்கபாதையிநூடே  சாலையை கடந்து  எதிர்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் திருவேற்காடு செல்லும் பேருந்து வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தேன். தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தாமதமாக செல்லும்போது உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய அலுவலக நேரம் ஒன்பது முப்பதிற்கு  தொடங்கிவிடும். என்னுடைய உயரதிகாரி மிகவும் சிடுசிடுப்பானவர். எனக்கு இன்று நிச்சயம் திட்டு விழும் என்பதை உணர்ந்திருந்தும் , அந்த பார்வையற்ற நபரை பரிதவிக்க விட்டு சென்று விட மனம் ஒப்பவே இல்லை.

திருவேற்காடு  செல்லும் பேருந்து வந்ததும் , அதில் அவரை ஏற்றிவிட்டு நடத்துனரிடம் அவரின் நிலையை விளக்கி , அவரை பத்திரமாக திருவேற்காடு நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கேட்டுக்கொண்டு, பிறகு நான் செல்லவேண்டிய இடத்திற்கு பேருந்து பிடித்து அலுவலகம் அடையும்போது மணி பத்து முப்பதை தொட்டிருந்தது. , ஒரு விழியற்ற நபருக்கு வழி காட்டி அவருடைய கலக்கத்தை போக்கிய மனநிறைவு என்னுள் நிறைந்திருந்ததால் வழக்கம் போல எனது உயரதிகாரி பாடிய வசை சொற்கள் அன்று மட்டும் எனக்கு தவறான அர்த்தம் கொண்டதாக  தோன்றவே இல்லை.--சே.தரணிகுமார்

8 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice...

ஆ.ஞானசேகரன் said...

அழகு...வாழ்த்துகள்

கலையரசன் said...

அருமை! தொடருங்கள்...

லெமூரியன் said...

அருமை...

வாழ்த்துக்கள்

யாழிசை said...

நன்றி திரு. லெமூரியன்

யாழிசை said...

நன்றி.திரு.கலையரசன்.

யாழிசை said...

நன்றி.திரு.ஞானசேகரன்

யாழிசை said...

thankx. sri.krishna

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails