பல்லவி பருவம் எய்தும் வயதுடைய பருவ பெண்.எப்போதும் தேனீயை போல மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும் பல்லவிக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.பல்லவியின் தாய் தந்தை இருவரும் விவசாய கூலிகளாக இருந்தனர்.பல்லவி பள்ளிக்கு செல்லும் நாட்கள் தவிர்த்து,ஏனைய விடுமுறை நாட்களில் பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்றுவருவாள். வேர்கடலை அறுவடை காலங்களில் அவளுடைய உழைப்பின் நிமித்தமாக சேரும் கடலை அந்த குடும்பத்தின் வருடாந்திர தேவைக்கு போதுமானதாக இருந்தது.அப்படியானதொரு வேர்கடலை அறுவடை காலம் ஒன்று முடிந்த தருவாயில் கிடைத்த வேர்கடலையை வெயிலில் உலர்த்தும் வேலையில் பல்லவியின் குடும்பம் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அவர்கள் இருக்கும் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் பிள்ளைகள் மூவரையும் காவலுக்கு வைத்துவிட்டு பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.அந்த ஊரில் எரியும் தீப்பந்தத்தை காட்டி குரங்குகளை விரட்டுவது வாடிக்கையாக இருந்ததினால் பல்லவியிடமும் ஒரு தீப்பந்தத்தை தயார் செய்து அவள் பெற்றோர் தந்து விட்டிருந்தனர். பின்மதியப்பொழுதில் சட்டென்று ஒரு பெரிய குரங்கு கூட்டம் உலர்ந்து கொண்டிருந்த வேர்கடலையை ஆக்கிரமித்து நாசம் செய்ய தொடங்கியது.பல்லவியும் அவள் தம்பியும் , தங்கையும் மூலைக்கொருவராய் ஓடி ஓடி விரட்டியும் குரங்குகள் சட்டை செய்யாததால் தீப்பந்தத்தை பற்ற வைத்து குரங்குகளை நோக்கி காட்டி விரட்டியதும் குரங்குகள் ஓட தொடங்கின.அப்போது பல்லவியின் தம்பி அவளிடமிருந்த தீப்பந்தத்தை வாங்கி கொண்டு குரங்குகளை நோக்கி மேலும் ஓட தொடங்கினான்.எதிர்பாராவிதமாக அவன் கல் இடறி விழுந்ததில் அவன் கையில் இருந்த தீப்பந்தம் தவறி அருகில் இருந்த வைக்கோல் போர் மீது விழுந்ததும் அருகில் இருந்தவர்கள் வந்து அணைப்பதற்குள் முழு வைக்கோலும் சடசடவென எரிந்து சாம்பலாகி போனது.
விவரமறிந்து அங்கு வந்த பல்லவியின் பெற்றோர் செய்வதறியாது கலங்கி பரிதவித்து போயினர். காரணம் அந்த வைக்கோல் போர் மிகவும் முரட்டுதனமான பார்வதி அம்மாளின் குடும்பத்தாருடையது.பார்வதி அம்மாளை கண்டு அந்த மொத்த ஊருமே அச்சம் கொள்ளும். அவர் வாயின் வசவு வார்தைகளுக்கு யாருமே தப்ப முடியாது.பல்லவியின் குடும்பம் பயந்தது போலவே பார்வதி அம்மாள் விவரமறிந்து உக்கிர கோலமாக தனது பரிவாரங்களுடன் பல்லவியின் வீட்டருகே வந்து சத்தம் போட தொடங்கினார்.எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவரின் வாயின் வசவு வார்த்தைகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.கடைசியாக பல்லவியின் தாய் அந்த வைக்கோல் போருக்கு இணையான பணத்தை தருவதாக ஊரார் முன்னிலையில் ஒப்புக்கொண்ட பிறகும் சிறிது நேரம் வசை பாடிவிட்டே பார்வதி அம்மாள் இடத்தை காலி செய்தார்.
இது நடந்து ஒரு வாரம் கடந்திருந்தது. பார்வதி அம்மாளின் மூத்த மகளுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.பார்வதி அம்மாள் தன்னுடைய பதினைந்து சவரன் காசு மாலையை உருக்கி மகளுக்கு வேண்டிய நகைகள் செய்ய திட்டமிட்டிருந்தார்.அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பார்வதி அம்மாளின் காசு மாலை கோவில் முற்றத்தில் அறுந்து விழுந்து விட்டது.பார்வதி அம்மாள் அதை அறிந்திருக்கவில்லை. சற்று அங்கு வந்த பல்லவியின் கையில் அது கிடைத்தது. அது யாருடையதென்று அவள் அறியாததால் நேரே சென்று தன் தாயிடம் அதை கொடுத்து விட்டாள்.அதை பல்லவியின் தாய் பார்வதி அம்மாளின் கழுத்தில் பலமுறை பார்த்திருந்ததால், அதை எடுத்துக்கொண்டு நேரே அவர் வீட்டிற்கு செல்ல தொடங்கினார்.அதற்க்குள் பார்வதி அம்மாள் பெருத்த கூக்குரலோடு நகை தொலைந்து போனதற்காய் ஒப்பாரி வைத்து அழ தொடங்கி இருந்தார்.ஊரே அவர் வீட்டருகே திரண்டிருந்தது.பல்லவியுடன் அங்கு வந்த அவளின் தாய் காசு மாலை கோவிலின் அருகே விழுந்து கிடந்த விவரத்தை சொல்லி அதை பார்வதி அம்மாளின் கையில் ஒப்புவித்தார்.பார்வதி அம்மாள் உணர்ச்சி பெருக்கோடு பல்லவியிடமும், அவள் தாயிடமும் நன்றி கூறினாள்.அப்பொழுது திரண்டிருந்த ஊரார் முன்பு, பார்வதி அம்மாளிடம், ‘’சில நூறு ரூபாய் பெருமானமுள்ள அந்த வைக்கோல் போர் எரிந்து போனதற்காக , அதற்குண்டான பணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகும் ஊரார் முன்பு என்னுடைய குடும்பத்தை இகழ்ந்து பேசி , எங்களுடைய வறுமையை ஏளனம் செய்தீர்களே, நாங்கள் வறுமையிலும் செம்மையாய் வாழ நினைப்பவர்கள்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் அற்ப புத்தி கொண்டவர்கள் அல்ல இனியாகிலும் அடுத்தர்களின் இயலாமையை ஏளனமாக பார்க்காதீர்கள் ‘’, என்று சொன்னவுடன் பார்வதி அம்மாள் வெட்கி தலை குணிந்து நின்றது, அன்று வைக்கோல் போர் எரிந்ததற்காக பார்வதி அம்மாள் வசை பாடிய போது பல்லவியின் குடும்பத்தார் அவமானத்தால் தலை குணிந்து நின்றதை விட இன்று பார்வதி அம்மாளின் நிலை ஊரார் முன்பு கேவலமாக இருந்தது.
----சே.தரணிகுமார்
1 comment:
அருமை நண்பரே! என் தொடர் கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://eluthuvathukarthick.wordpress.com/
Post a Comment