சுப்ரஜாவின் திருமணம் காலையில் முடிந்து அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.ஒரு அழகான பெண் தன்னுடைய வாழ்க்கை துணையாய் அமைந்த சந்தோஷம் விஜயராஜின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு , ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கும்போதும் அவனை புன்னகை செய்ய சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் நிரந்தர புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது .சுப்ரஜாவின் முகம் சற்றே அவள் மனநிறைவின்றி இருப்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.அதுவும் சற்று முன்பு கணவனுடன் வந்து வாழ்த்து சொல்லிய அவள் தோழி கீதா வந்த பிறகு அவள் முகவாட்டம் கொஞ்சம் கூடித்தான் போனது.விஜயராஜ் இதை கவனித்து விசாரித்தபோது லேசாக தலைவலிப்பதாக கூறி விட்டாள். ஆனால் உண்மையில் காரணம் அதுவன்று.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக தான் அவளின் தோழி கீதாவின் காதல் திருமணம் நடந்து முடிந்திருந்தது.கீதாவின் கணவன் மிகவும் அழகானவாக இருந்ததில் கீதாவின் முகத்தில் கர்வம் தாண்டவமாடிக்கொண்டிருந்தது. சுப்ரஜாவின் கணவன் விஜயராஜ் சுமாராக தன் இருப்பான், இது பெரியவர்களாக பேசி முடித்த திருமணம்.விஜயராஜின் குணத்தையும், தன்மையையும், அவன் குடும்பத்தையும், பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, அவனுக்கே சுப்ரஜாவை பெற்றோர்கள் பேசி முடித்தபோது அவளாள் அவளின் எதிர்ப்பை தெரிவிக்க இயலாமல் போய்விட்டது.சுப்ரஜா சிறு பிராயம் முதலே அழகை அதிகம் ஆராதிப்பவளாக இருந்திருந்தாள்.அவள் தன் தோழியருடன் பேசி செலவிட்ட நேரத்தை விட கண்ணாடி முன்பு அமர்திருந்த நேரமே கூடுதலானது.அத்தகையவளுக்கு ஒரு சுமாரானவன் , கணவனாக வாய்த்த போது,அவளால் அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள இயலாமல் மனதால் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியும், சுப்ரஜாவால் இயல்பு நிலைக்கு வர இயலவே இல்லை.விஜயராஜும் திடீரென்று பெற்றோர்களை பிரிந்து நீண்ட தூரத்தில் இருப்பதால் சுப்ரஜா எப்போதும் கவலையுடன் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்ததினால், அவன் அவளை அதன் நிமித்தம் அதிகம் விசாரிக்கவில்லை.சுப்ரஜாவின் மனநிலையின் காரணமாக அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையும் அத்துணை சோபிக்கவில்லை.சரி அவள் பெற்றோர்களுடன் சிறிது நாட்கள் இருந்து விட்டு வரட்டும் என்று விஜயராஜ் அவளை ஊருக்கு அனுப்பி வைத்தான். ஊருக்கு வந்த அன்று மாலை தன் தோழி கீதாவை வழியில் பார்த்த சுப்ரஜாவிற்கு, கீதா திருமண முறிவுக்காக காத்திருப்பது அறிந்து அதிற்சியாய் போனது.அழகாய் இருக்கிறானே என்று அவனை காதலிக்க தொடங்கிய கீதா அவனின் பின்னனி பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை.திருமணம் முடிந்த பிறகே அவன் வேறொரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவது தெரிய வந்தது.அதை பற்றி அவள் கேட்க ஆரம்பித்ததும்,குடும்பத்தில் சண்டைகள் வெடித்து கீதாவிற்கு தினமும் அடியும் உதைகளுமே மிஞ்சின.இனியும் அவனோடு வாழவே இயலாது என்று விவாகரத்திற்கு கீதா மனு செய்திருந்தாள். கீதா சுப்ரஜாவின் குடும்ப வாழ்க்கையை பற்றி விசாரித்தபோது தான் , சுப்ரஜாவிற்கு, அவள் அழகு என்னும் மாயையின் பொருட்டு, எத்துணை அன்பில்லாதவளாக, கணவனிடம் நெருக்கம் காட்டாமல், நடந்து கொண்டிருந்ததின் அவலம் புரியதொடங்கியது.தான் முரட்டு தனமாக நடந்து கொண்ட போதும் ஒருபோதும் முகம் சுளிக்காது எப்போதும் தன்னை வாஞ்சையுடன் நடத்திய அவள் கணவனை முதன் முறையாக அவளுக்கு மிக்க அழகானவனாய் உணர்ந்தாள்.
பத்து நாட்கள் இருப்பதாக சொன்ன மகள் மறுநாள் காலையிலேயே பெட்டியுடன் கிளம்புவதின் காரணத்தை சுப்ரஜாவின் பெற்றோர்களால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனால் இத்துணை நாட்கள் அழகை ஆராதித்துக்கொண்டிருந்த சுப்ரஜா , இனி அன்பை மட்டுமே ஆராதிப்பவளாக மாறி இருந்தாள்.விஜியராஜை எப்படி எல்லாம் கொஞ்சலாம் என்று யோசித்தவளாக கணவனின் ஊரை நோக்கி பயனித்துக்கொண்டிருக்கிறாள்.
-----சே.தரணிகுமார்
No comments:
Post a Comment