சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?
என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும் என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்
என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய் தாக்குகிறது
மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமரை இலை தண்ணீராய்
எனக்கு உலகம்
என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை
சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே
என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே இது விடை தெரியாத கேள்வி
கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?
-சே. தரணி குமார்
Saturday, 3 October 2009
Thursday, 1 October 2009
பிரிவு
ஒரு பட்டுப்போன நட்பின்
வேர்களில் எப்போதும்
மிச்சமிருக்கும் ஒருசில
நினைவெண்ணும் நீர்த்துளிகள்
நட்பின் மரணம் நன்பர்களின்
மரணத்தை விட சோகமானது என்பது
பிரியும் நேரங்களில்
பலருக்கும் புரிவதில்லை
பழைய நினைவு அலைகளில்
நிற்க முடியாமல் தவிக்கும்
எத்தனையோ இதயங்கள்
மீண்டும் நட்பு துளிர்க்காதா
என்று ஏங்கும்
உண்மையான அன்பு எப்போதும்
பகைமை பராட்டு வதில்லை
அவை தற்செயலாய் சூழும் மேகம் போல
குறுகிய இடைவேளைகளில்
அனைத்தும் மன்னிக்கப்படும்
நீளும் மௌனங்கள்
பாலை நிலத்து பகல்கள்
சுட்டெரிக்கும் நினைவுகளால்
மனம் வெதும்பும்
மறப்பதும் மன்னிப்பதும் தான்
கால சூழற்சியை இன்னும்
துரிதப்படுத்துகின்றன
இதயங்களின் பிரிவு
அணுப் பிளவின் தாக்கத்தைவிட
அதிகம் பாதிக்கிறது
சிலர் மட்டும்
பயணித்த சிறகுகளை
அடியோடு மறந்துவிடுகின்றனர்
பலர் இன்னும்
நீளும் இரவுகளின்
நீளம் குறையாதா
எண்ணும் ஏக்கத்தோடு
கால சக்கரத்தினை
கண் கொட்டாமல் பார்க்கின்றனர்.
- சே. தரணி குமார்
மூக்குத்தி
”சிவா இன்னைக்கு ஞாபகமா என் மூக்குத்தியை சரி பண்ணிட்டு வந்துடுப்பா” என்று உடைந்த மூக்குத்தியை காலேஜ் கிளம்பும் என்னிடம் அம்மா பொட்டலமாக தந்தபோது ஒன்றுமே மறுத்து சொல்ல இயலவில்லை! பாவம் அம்மா! நினைவு தெரிவதற்கு முன்பே செத்துப்போன அப்பாவின் போட்டோ கூட நான் பார்த்தது இல்லை. எனக்கு எல்லாமே அம்மா தான். இரண்டாம் கல்யாணத்திற்க்கு என் அப்பாவின் உறவுகளே அங்கீகாரம் தந்தபோதும் பிடிவாதமாக மறுத்து என்னை ஆளாக்குவதே லட்சியம் என்று ஐந்தாம் கிளாசே படித்த என் அம்மா சித்தாள் வேலைக்கும் வயல் வேளைக்கும் சென்று கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி என்னை கஷ்டபடாமல் வளர்ப்பவள். என்ன கஷ்டம் வந்தாலும் என் படிப்பிற்கு எந்த குறையும் வைத்தது இல்லை எனக்கும் அம்மாவின் கஷ்டம் தெரிவதால் நானும் எந்த வீண் செலவும் செய்வது இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் சுலபமாக டிப்ளமோ சேர முடிந்தது. இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது. உடனே வேலைக்கு போய் அம்மாவை கஷ்டப்படாமல் உட்காரவைத்து நன்கு கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு உண்டு.
நினைவுகளில் இருந்து மீண்டு, அம்மா தந்த பொட்டலத்தை பார்த்தேன். அம்மாவிடம் இருக்கும் ஒரே தங்க நகை இந்த சின்ன மூக்குத்தி மட்டும் தான். மூன்று நாட்களாக சரி செய்து கொண்டு வரும்படி அம்மா கேட்டும், இந்த சிறிய பொருளுக்காக தட்டான் கடைக்கு செல்வதற்கு கூச்சமாக இருந்தது இன்று மறுக்க முடியாததாகிவிட்டது. இவ்வாறு யோசித்துக்கொண்டே காலேஜ் நோக்கி சைக்கிளை மிதிக்க துவங்கினேன்.
காலை வகுப்புகள் முடிந்து லன்ச்பெல் அடித்ததும், வழக்கம் போல நன்பர் குழாமுடன் சாப்பிட அமர்ந்தேன் அப்போது என் நன்பன் சுரேஷ் “டேய் சிவா நாங்க ஒரு புரோக்ராம் போட்டிருக்கோம்டா. இன்னைக்கு வெள்ளிகிழமை நாளைக்கு செகண்ட் சாட்டர்டே லீவு, சோ நாம எல்லோரும் ஏலகிரிக்கு பிக்னிக் போறோம் தலைக்கு 300 ரூபாய்தான் ஷேர்” என்று சொன்னதும் தூக்கி வாரி போட்டது எனக்கு. உடனே இன்னோரு நன்பன் தமிழ் “ இத்தோட எத்தனையோ முறை பிக்னிக் போயிருப்போம் ஆனா ஒரு தடவை கூட நீ வரலை இந்த தடவை கட்டாயம் வர்ர” என்றதும் என்னுள்ளும் ஆசை துளிர் விட்டது.
மதிய வகுப்புகளில் கவனம் பதியவே இல்லை. எப்படியாவது பிக்னிக் போக முடியாதா என்று மனம் ஏங்கியது. ஏதோ நினைவாக பாக்கட்டில் கை வைத்தபோது அம்மாவின் மூக்குத்தி பொட்டலம் கையை உறுத்தியது. உடனே மனம் கோனல் மாணலாய் சிந்திக்க ஆரம்பித்தது. இதை விற்றால் நிச்சயம் 300 ரூபாய் கிடைக்கும். அம்மா கேட்டால் தொலைந்து போய்விட்டது என்று சொல்லி விடலாம். நம்முடைய வார்த்தையை நிச்சயம் அம்மா நம்பி விடுவாள் இவ்வாறு எண்ணிக்கொண்டே மேல் பாக்கட்டில் இருந்த மூக்குத்தி பொட்டலத்தை பாண்ட் பாக்கட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்து உள்ளே போகாமல் வெளி திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். வேலையிலிருந்து தாமதமாக வீட்டிற்கு வந்த அம்மாவுக்கு நான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டு ஆச்சர்யம்! இவன் இப்படி இருக்க மாட்டானே! வந்தவுடன் பாடப்புத்தகத்துடன் அறைக்குள் அமர்ந்து கொண்டிருப்பவன் இப்படி வெளியிலேயே இருக்கிறானே என்று. அம்மா அருகில் வந்து “சிவா என்னடா உடம்பு முடியலையா? என்ன பண்ணுது? ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்று என் முகத்தை படம் பிடித்தவளாக அம்மா கேட்டாள். நானும் தயங்கி தயங்கி “அம்மா நீ தந்த மூக்குத்தி பொட்டலம் காணலம்மா! வழியில் எங்கயோ தவறவிட்டுட்டேன் என்று சோகமாய் நடித்து சொன்ன போது அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது கண்களில் நீர் எட்டிப்பார்க்க “சரி விடு ராசா நமக்கு குடுப்பினை அவ்வளவுதான் ! சரி நீ உள்ளே வா என்று உள்ளே சென்ற அம்மா புழகடைப் பக்கம் சென்று விசும்புவது சன்னமாக கேட்டது. அன்று இரவு நானும் சாப்பிடவில்லை எவ்வளவு வற்புறுத்தியும் அம்மாவும் சாப்பிடவில்லை.
மறு நாள் காலை பிக்னிக் போகும் ஜாலியில் ஷேவிங் செய்து கொண்டிருந்த என்னை அம்மா சந்தோஷ குரலோடு அழைத்தது ஆச்சர்யமாக இருந்தது, நான் போவதற்குள் என்னிடம் வந்த அம்மா “சிவா என் மூக்குத்தி தொலைஞ்சி போகலடா உன் பாக்கெட்டில் தான் இருந்தது துவைக்க எடுத்தப்ப பார்த்தா நீ உன் பாக்கெட்ல இதை வச்சிருக்கிறது தெரிஞ்சது. நீதான் எங்கேயோ தடவிப் பார்த்துட்டு தொலைஞ்சிடுச்சின்னு தப்பா பிரிஞ்சுகிட்ட. சிவா இந்த மூக்குத்தி, உங்கப்பா ரோட்டில அடிபட்டு கிடந்த ஒரு குழந்தைக்கு தன்னுடைய ரத்தம் குடுத்து காப்பாத்தினப்ப அந்த குழந்தையோட அப்பா அம்மா ரொம்ப வற்புறுத்தி குடுத்த பணத்துல தனக்கு செலவு பண்ணிக்காம எனக்கு முதன்முதலா ஒரு நகையா இத வாங்கிட்டு வந்தாரு. உங்க அப்பா ஞாபகமா எங்கிட்ட அவரு போட்டோ கூட இல்ல. இருக்குற ஒண்ணே ஒண்ணு இந்த மூக்குத்தி மட்டும் தான். இது என்கூட இருக்குறப்ப உங்கப்பாவே கூட இருக்கற மாதிரி எனக்கு தோணும். இது தொலைஞ்சிடுச்சின்னு நீ சொன்ன உடனே என்னால தாங்க முடியல. ஆனா பார்த்தியா உங்கப்பா நம்பள விட்டு போகல” என்று உற்சாகமாய் சொன்ன அம்மாவின் முகத்தை பார்க்கவே வெட்கமாய் இருந்தது எனக்கு.
காலேஜ் முடிந்ததும் மூக்குத்தியை விற்க மார்வாடி கடைக்கு போனபோது ஏதோ திருட்டு நகை வாங்கியதாக கடையை போலிஸ் சோதனை போட்டுக் கொண்டிருந்ததால் நாளை காலை விற்கலாம் என்று திரும்பியதற்கு கூட அப்பாவின் ஆத்மா தான் கரணமோ என்று முதன்முதலாய் ஆத்மார்த்தமாய் உணர்ந்தேன்.
எனக்காக எண்ணற்ற தியகங்களை செய்த அந்த உயர்வான ஜீவனுக்கு இருக்கும் ஒரே சந்தோசத்தையும் பறிக்கும் அளவுக்கு பாவியாக இருந்தோமே என்று சாட்டையடிப்பட்டது போல் மனம் வலித்தது.
நன்பர்கள் சொன்ன அதே எட்டு மணிக்கு மூக்குத்தி பொட்டலத்தோடு வீட்டைவிட்டு கிளம்பினேன் விற்றுவிட்டு ஏலகிரி செல்வதற்காக அல்ல, சரிசெய்து விட்டு வீட்டிற்கு வருவதற்காக.
- சே.தரணி குமார்
Subscribe to:
Posts (Atom)




