Thursday, 1 October 2009

மூக்குத்தி”சிவா இன்னைக்கு ஞாபகமா என் மூக்குத்தியை சரி பண்ணிட்டு வந்துடுப்பா” என்று உடைந்த மூக்குத்தியை காலேஜ் கிளம்பும் என்னிடம் அம்மா பொட்டலமாக தந்தபோது ஒன்றுமே மறுத்து சொல்ல இயலவில்லை! பாவம் அம்மா! நினைவு தெரிவதற்கு முன்பே செத்துப்போன அப்பாவின் போட்டோ கூட நான் பார்த்தது இல்லை. எனக்கு எல்லாமே அம்மா தான். இரண்டாம் கல்யாணத்திற்க்கு என் அப்பாவின் உறவுகளே அங்கீகாரம் தந்தபோதும் பிடிவாதமாக மறுத்து என்னை ஆளாக்குவதே லட்சியம் என்று ஐந்தாம் கிளாசே படித்த என் அம்மா சித்தாள் வேலைக்கும் வயல் வேளைக்கும் சென்று கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி என்னை கஷ்டபடாமல் வளர்ப்பவள். என்ன கஷ்டம் வந்தாலும் என் படிப்பிற்கு எந்த குறையும் வைத்தது இல்லை எனக்கும் அம்மாவின் கஷ்டம் தெரிவதால் நானும் எந்த வீண் செலவும் செய்வது இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் சுலபமாக டிப்ளமோ சேர முடிந்தது. இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது. உடனே வேலைக்கு போய் அம்மாவை கஷ்டப்படாமல் உட்காரவைத்து நன்கு கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு உண்டு.


நினைவுகளில் இருந்து மீண்டு, அம்மா தந்த பொட்டலத்தை பார்த்தேன். அம்மாவிடம் இருக்கும் ஒரே தங்க நகை இந்த சின்ன மூக்குத்தி மட்டும் தான். மூன்று நாட்களாக சரி செய்து கொண்டு வரும்படி அம்மா கேட்டும், இந்த சிறிய பொருளுக்காக தட்டான் கடைக்கு செல்வதற்கு கூச்சமாக இருந்தது இன்று மறுக்க முடியாததாகிவிட்டது. இவ்வாறு யோசித்துக்கொண்டே காலேஜ் நோக்கி சைக்கிளை மிதிக்க துவங்கினேன்.


காலை வகுப்புகள் முடிந்து லன்ச்பெல் அடித்ததும், வழக்கம் போல நன்பர் குழாமுடன் சாப்பிட அமர்ந்தேன் அப்போது என் நன்பன் சுரேஷ் “டேய் சிவா நாங்க ஒரு புரோக்ராம் போட்டிருக்கோம்டா. இன்னைக்கு வெள்ளிகிழமை நாளைக்கு செகண்ட் சாட்டர்டே லீவு, சோ நாம எல்லோரும் ஏலகிரிக்கு பிக்னிக் போறோம் தலைக்கு 300 ரூபாய்தான் ஷேர்” என்று சொன்னதும் தூக்கி வாரி போட்டது எனக்கு. உடனே இன்னோரு நன்பன் தமிழ் “ இத்தோட எத்தனையோ முறை பிக்னிக் போயிருப்போம் ஆனா ஒரு தடவை கூட நீ வரலை இந்த தடவை கட்டாயம் வர்ர” என்றதும் என்னுள்ளும் ஆசை துளிர் விட்டது.


மதிய வகுப்புகளில் கவனம் பதியவே இல்லை. எப்படியாவது பிக்னிக் போக முடியாதா என்று மனம்  ஏங்கியது. ஏதோ நினைவாக பாக்கட்டில் கை வைத்தபோது அம்மாவின் மூக்குத்தி பொட்டலம் கையை உறுத்தியது. உடனே மனம் கோனல் மாணலாய் சிந்திக்க ஆரம்பித்தது. இதை விற்றால் நிச்சயம் 300 ரூபாய் கிடைக்கும். அம்மா கேட்டால் தொலைந்து போய்விட்டது என்று சொல்லி விடலாம். நம்முடைய வார்த்தையை நிச்சயம் அம்மா நம்பி விடுவாள் இவ்வாறு எண்ணிக்கொண்டே மேல் பாக்கட்டில் இருந்த மூக்குத்தி பொட்டலத்தை பாண்ட் பாக்கட்டில்  பத்திரப்படுத்திக் கொண்டேன்.


காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்து உள்ளே போகாமல் வெளி திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். வேலையிலிருந்து தாமதமாக வீட்டிற்கு வந்த அம்மாவுக்கு நான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டு ஆச்சர்யம்! இவன் இப்படி இருக்க மாட்டானே! வந்தவுடன் பாடப்புத்தகத்துடன் அறைக்குள் அமர்ந்து கொண்டிருப்பவன் இப்படி வெளியிலேயே இருக்கிறானே என்று. அம்மா அருகில் வந்து “சிவா என்னடா உடம்பு முடியலையா? என்ன பண்ணுது? ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்று என் முகத்தை படம் பிடித்தவளாக அம்மா கேட்டாள். நானும் தயங்கி தயங்கி “அம்மா நீ தந்த மூக்குத்தி பொட்டலம் காணலம்மா!  வழியில் எங்கயோ தவறவிட்டுட்டேன் என்று சோகமாய் நடித்து சொன்ன போது அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது கண்களில் நீர் எட்டிப்பார்க்க “சரி விடு ராசா நமக்கு குடுப்பினை அவ்வளவுதான் ! சரி நீ உள்ளே வா என்று உள்ளே சென்ற அம்மா புழகடைப் பக்கம் சென்று விசும்புவது சன்னமாக கேட்டது. அன்று இரவு நானும் சாப்பிடவில்லை எவ்வளவு வற்புறுத்தியும் அம்மாவும் சாப்பிடவில்லை.


மறு நாள் காலை பிக்னிக் போகும் ஜாலியில் ஷேவிங் செய்து கொண்டிருந்த என்னை அம்மா சந்தோஷ குரலோடு அழைத்தது  ஆச்சர்யமாக இருந்தது, நான் போவதற்குள் என்னிடம் வந்த அம்மா “சிவா என் மூக்குத்தி தொலைஞ்சி போகலடா உன் பாக்கெட்டில் தான் இருந்தது துவைக்க எடுத்தப்ப பார்த்தா நீ உன் பாக்கெட்ல இதை வச்சிருக்கிறது தெரிஞ்சது. நீதான் எங்கேயோ தடவிப் பார்த்துட்டு தொலைஞ்சிடுச்சின்னு தப்பா பிரிஞ்சுகிட்ட. சிவா இந்த மூக்குத்தி, உங்கப்பா ரோட்டில அடிபட்டு கிடந்த ஒரு குழந்தைக்கு தன்னுடைய ரத்தம் குடுத்து காப்பாத்தினப்ப அந்த குழந்தையோட அப்பா அம்மா ரொம்ப வற்புறுத்தி குடுத்த பணத்துல தனக்கு செலவு பண்ணிக்காம எனக்கு முதன்முதலா ஒரு நகையா இத வாங்கிட்டு வந்தாரு. உங்க அப்பா ஞாபகமா எங்கிட்ட அவரு போட்டோ கூட இல்ல. இருக்குற ஒண்ணே ஒண்ணு இந்த மூக்குத்தி மட்டும் தான். இது என்கூட இருக்குறப்ப உங்கப்பாவே கூட இருக்கற மாதிரி எனக்கு தோணும். இது தொலைஞ்சிடுச்சின்னு நீ சொன்ன உடனே என்னால தாங்க முடியல. ஆனா பார்த்தியா உங்கப்பா நம்பள விட்டு போகல” என்று உற்சாகமாய் சொன்ன அம்மாவின் முகத்தை பார்க்கவே வெட்கமாய் இருந்தது எனக்கு.


காலேஜ் முடிந்ததும் மூக்குத்தியை விற்க மார்வாடி கடைக்கு போனபோது ஏதோ திருட்டு நகை வாங்கியதாக கடையை போலிஸ் சோதனை போட்டுக் கொண்டிருந்ததால் நாளை காலை விற்கலாம் என்று திரும்பியதற்கு கூட அப்பாவின் ஆத்மா தான் கரணமோ என்று முதன்முதலாய்  ஆத்மார்த்தமாய் உணர்ந்தேன்.


எனக்காக எண்ணற்ற தியகங்களை செய்த அந்த உயர்வான ஜீவனுக்கு இருக்கும் ஒரே சந்தோசத்தையும் பறிக்கும் அளவுக்கு பாவியாக இருந்தோமே   என்று சாட்டையடிப்பட்டது போல் மனம் வலித்தது.


நன்பர்கள் சொன்ன அதே எட்டு மணிக்கு மூக்குத்தி பொட்டலத்தோடு வீட்டைவிட்டு கிளம்பினேன் விற்றுவிட்டு ஏலகிரி செல்வதற்காக அல்ல, சரிசெய்து விட்டு வீட்டிற்கு வருவதற்காக.


- சே.தரணி குமார்

1 comment:

KALYANARAMAN RAGHAVAN said...

நல்ல கரு. தேவையில்லாத வார்த்தைகளை எடிட் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

ரேகா ராகவன்.
http://www.anbesivam2009.blogspot.com/

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails