சடங்கு சம்பிரதாயம் என்று கடந்த பதினைந்து நாட்களாக நடத்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரு காட்சி பொருளாக மட்டுமே நடமாடிய பவித்ராவுக்கு வாழ்க்கையே மிக இருண்டு போனதாக தோன்றியது. நகருமில்லாத கிராமமும் இல்லாத அந்த ரெண்டும் கெட்டான் ஊரில் பவித்ராவின் கணவன் ரவி தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பிறகு, கடந்த பதினைந்து நாட்களாக பவித்ராவுக்கு ஏராளமான சடங்குகள் நடத்தப்பட்டு நேற்றோடு அவளுடைய பூவும் பொட்டும் நிரந்தரமாக அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
மூன்றாம் வகுப்பும், ஒன்றாம் வகுப்பும் படிக்கும் தன் இரண்டு பெண்குழந்தைகளோடு இந்த உலகில் எப்படி காலம் தள்ளபோகிறோம் என்ற கேள்வி அவள் முன்னாள் பூதாகரமாய் நின்று அவளை மிரட்டியது.பவித்ராவும், ரவியும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள் ,கடந்த வருடம் முன்பு வரை மிக இனிமையாக சென்று கொண்டிருந்த அவர்கள் இல்லறத்தில் சமீபத்தில் தான் வீணான சச்சரவுகள் தோன்ற ஆரம்பித்தன.ரவி காதல் திருமணம் செய்துகொண்டது அவனது வீட்டாருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் உறவுகள் மிகவும் சீர்கெட்டு போனது.இந்த திருமணம் பவித்ராவின் வீட்டிலும் கோபத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மட்டும் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
ரவியின் வீட்டு நிலவரம் முற்றிலும் மாறாக இருந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகும் அவர்களின் கோபம் தனியவே இல்லை ,இறுதியாக கடந்தவருடம் ரவியின் அப்பா தன்னுடைய சொத்துக்களை பிரிக்கும்போது மீதம் இருக்கும் இரு மகன்களுக்கு மட்டுமே சேரும்படி எழுதிவிட்டது ரவியின் மனதில் பெருத்த தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் அவன் தன்னுடைய குடும்ப உறவுகளை முற்றிலும் அறுத்துக்கொண்டான் .பவித்ரா மட்டும் தன்னுடைய உறவுகளோடு புழங்குவது அவனுள் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது இது நாளாவட்டத்தில் ரவியின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை புகுத்தி விட்டது.இதனை பவித்ராவிடம் வெளிப்படையாக பேசாமல் வேறு வேறு காரணங்களுக்காக சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.
தன்னுடைய அன்பான கணவன் ,இப்படி வீணாக சண்டையிடுவதின் காரணங்களை ஆராயாமல், அவனுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லாமல் , அவளும் ரவியுடன் வாக்குவாதம் செய்ததுடன் தேவையற்று , கணவன் மனைவி பிரச்சனையை தன்னுடைய வீடு வரை எடுத்து சென்றுவிட்டாள் . இதனால் இன்னும் வெறுப்புற்ற ரவியின் போக்கு முற்றிலுமாக மாறதொடங்கியது
இவர்களுடைய இந்த பிரச்சனைகளால் குழந்தைகளின் இயல்பான சந்தோஷங்கள் யாவும் முற்றிலும் அழிந்துபோனது.அவர்களுடைய படிப்பும் மந்தமானது.எப்போது அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டு கொள்வார்களோ என்ற பயத்துடன் அந்த பிஞ்சுகள் அஞ்ச தொடங்கின. குழந்தைகளை பற்றி கவலைப்படாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும் மனோபாவம் இன்றி , தாங்கள் காதலித்து திருமணம் புரிந்தவர்கள் என்பதை முற்றிலும் மறந்து , இருவரும் நிரந்தர எதிரிகள் போல தங்களின் சண்டைகளை தொடர்ந்துகொண்டிருந்தனர்.
கடந்த இருபத்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய பிரச்சனையில்,பவித்ரா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட , நான்கு நாட்களுக்கும் மேலாக பொறுத்து பார்த்த ரவி,பவித்ரா திரும்ப வராததால் ,தன்னுடைய பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளும் பக்குவம் இன்றி,தன்னை நம்பி இந்த உலகில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,சுயநலத்தின் உச்சகட்டமான தற்கொலையை தேர்ந்து எடுத்துக்கொண்டான்.
ரவியின் மரணம் பவித்ராவின் மனதில் கிழைத்து, தழைத்து பெருமரமாக வேரூன்றி இருந்த வீம்பையும் வீராப்பையும் அடியோடு புரட்டி போட்டுவிட்டது.கணவனுடன் பேசி பிரச்சனையை தீர்த்துகொள்ளாமல், இப்படி தான் நடந்து கொண்டதனாலேயே ரவி இப்படி மனம் வெறுத்து இத்தகைய முடிவை எடுதுக்கொண்டுவிட்டானே என்ற குற்ற உணர்வு அவளை சித்ரவதைக்குள்ளாக்கியது
கணவனை இழந்த இளம் பெண்கள் என்னதான் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் அவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கருப்பொருட்களாக மாற்றி அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இந்த சமூகம் கற்பிப்பதை பவித்ரா நன்கு அறிவாள்.வயது வித்தியாசமின்றி வக்கிர பார்வைகளோடு அலையும் ஒரு சில ஆண்களால் கணவனை இழந்த பெண்களுக்கு அதே ஊரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் பவித்ராவுக்கு தெரியும்.தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம், தன்னுடைய கண்களின் கண்ணீர் தீரும்வரை தன் தாயின் மடியில் படுத்து அடிக்கடி கொட்டி தீர்த்து கொண்டாள்.
சிறிது காலம் கழித்து தொலை தூர ஊரில் முதியோர் இல்லமும் சிறார் பள்ளியும் இணைந்த காப்பகத்தில் பவித்ரா அலுவலக வேலையில் சேர்ந்து விட்டாள். தன் வேலை நேரம் போக மீதம் இருக்கும் நேரங்களில் அங்கு இருக்கும் வயதான முதியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறாள் .பவித்ரா தன் இரு குழந்தைகளோடு காப்பக குடியிருப்பிலே தங்கி இருக்கிறாள் . பவித்ராவின் குழந்தைகள் இப்போது நன்கு படிக்கிறார்கள் . பவித்ரா தன் குழந்தைகளுக்கு குடும்பத்தையும் , சமூகத்தையும் அனுசரித்து வாழ்வதை மிக அழகாக பயிற்று வருகிறாள் .தன்னை போலன்றி தன் குழந்தைகள் எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பவர்களாக வளர்வது கண்டு பவித்ரா மிகுந்த மனநிறைவோடு இருக்கிறாள் .
விட்டுகொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை .
கெட்டுபோகிறவர்கள் விட்டுகொடுப்பதில்லை .
--சே.தரணி குமார்.
.
4 comments:
அட கதை நல்லா இருக்கே!
thankx pradeep
ம்ம்ம் அருமை
நன்றி திரு.ஞானசேகரன் அவர்களே
Post a Comment