Tuesday, 6 October 2009

பொய் சத்தியம்


திருவலம்  கிராமம் நகர கலாச்சாரத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு கிராமிய மணம்  சற்றும் மாறாமல் மிக அழகாக இருந்தது .அந்த சிறிய ஊரின் நடுவில்  இருக்கும் அழகிய    மாரியம்மன் கோவில் , அந்த ஊர் மக்களுக்கு காவல் நிலையமாகவும், நீதி மன்றமாகவும், பொழுதுபோக்கு அரங்கமாகவும் , இப்படி சகலமாகவும் இருந்தது. ஊரில் எந்த நிகழ்வு என்றாலும் மக்கள் அந்த மாரியம்மன் கோவில் திடலில் ஒன்று கூடி பஞ்சாயத்தில்  பிரச்சனையை விவாதிப்பது வழக்கம் , கணவன் மனைவி பிரச்சனை முதல் கம்மாய் பிரச்சனை வரை பல  விசயங்களுக்கும்   அங்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது. 

அந்த ஊரில் ஒரு வழக்கம் இருந்தது .யாராவது இருவருக்கிடையே பிரச்சனை என்று  பஞ்சாயத்து  வரை  வரும்போது , பஞ்சாயத்தாரால்  முடிவெடுக்க முடியாத தருணங்களில்  சம்மந்தப்பட்ட இருவரையும் கோவிலின் உள்ளே அழைத்து சென்று அம்மன் முன்னிலையில் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்ய சொல்வது வழக்கம்.இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்ட போது எல்லாம் பிரச்சினைக்குரியவர்கள் , இதற்கான ஆயதம் செய்யப்படும் முன்பே பலமுறை தவற்றை ஒப்புக்கொண்டு பின்வாங்கி இருக்கிறார்கள் ,யாருக்கும்  தெய்வத்தின் முன்பு பொய்சத்தியம் செய்ய துணிவு வந்ததில்லை.
 ஒருநாள் மாரியம்மன் கோவில் திடலில் காலையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது .அந்த ஊரில் கண்ணியமாக வாழும் சண்முகம் என்பவரது மனைவிக்கும் பக்கத்து வீட்டு கேசவன் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக பஞ்சாயத்து கூட்டப்பட்டிருந்தது .முதல் கட்ட விசாரணையில் , சண்முகத்தின் மனைவி இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்ததோடு , கேசவன்தான் தன்னிடம்  தவறாக நடக்க பலமுறை முயன்றதாகவும் அதற்கு இணங்க மறுத்ததாலேயே இவ்வாறு அவதூறு பரப்பி பஞ்சாயத்து வரை வரவழைத்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் குற்றஞ் சாட்டினார்பஞ்சாயத்தார் கேசவனிடம் விசாரித்தபோது, தவறு நடந்தது உண்மை என்றும், குற்றத்தை தான் ஒப்புக்கொள்வதாகவும், இதற்கான தண்டனை எதுவென்றாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறியதால் பஞ்சாயத்தார்  என்ன முடிவு எடுப்பது என்று திணறிய போது சட்டென்று ஒரு யோசனை வந்தது, அதன்படி மாரியம்மன் முன்னிலையில் இருவரும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து தங்கள் வாக்குமூலத்தை சொல்லும்படி முடிவானது.


இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கோவிலின் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்.சண்முகத்தின் மனைவி, முதலில் கற்பூரத்தை அணைத்து, தவறு நடந்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய் என்றும், தவறே நடக்கவில்லை என்றும் கூறி சத்தியம் செய்தார். பின்பு கேசவன் கற்பூரத்தை அணைத்து தவறு நடந்தது உண்மை என்று கூறி சத்தியம் செய்தார் . பின்பு மாரியம்மன் விட்ட வழி என்று அனைவரும் களைந்து சென்று விட்டனர்.
அன்று மாலை கேசவன் தன வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் ஏறி காய்கள்  பறிக்க எத்தனித்தபோது, கிளை முறிந்து அவர் கிழே கிடந்த உறுதியான கல்லில் மீது விழுந்ததில் அவருக்கு கால் எலும்புகள் மிகவும் சேதாரமாகி போனது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவருடைய வலது கால் சற்று ஊனமாகி  அவர் காலை  விந்தி விந்தி நடக்கும்படியாக ஆகிவிட்டது.
கோவிலில் சத்தியம் செய்த அன்றே கேசவனுக்கு இவ்வாறாக ஆனதால் ஊரார் கேசவன் பொய் சத்தியம் செய்ததின் விளைவாகவே அவருக்கு இவ்வாறாக ஆனதாக உறுதியாக நம்பினார்கள்.எது எப்படியோ காலை விந்தி விந்தி நடந்து செல்லும் கேசவனை பார்த்தபிறகு அந்த திருவலம் கிராமத்தில் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன் முன்னால் பொய் சொல்லும் தைரியம் யாருக்கும் வரவில்லை.

- சே . தரணி குமார்

3 comments:

கலையரசன் said...

உங்களுக்கு வருமா?

யாழிசை said...

உங்களின் கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கவும்

செந்தழல் ரவி said...

படங்களோடு சிறுகதை. நன்று....!!!

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails