எப்போதும் சிரித்த முகத்துடன் இனிமையாக பழகும் குமார் ஆசிரியர் கணித வகுப்புகளை இனிமையாக நடத்த கூடியவர் .மாணவர்களின் பிரியத்திற்கு உரியவராகவும் ,மனித நேயம் மிக்கவராகவும் இருந்த குமார் ஆசிரியர் டியூஷன் வகுப்புகள் நடத்தினாலும் ,சிரமமான சூழ்நிலையில் உள்ள மாணவர்களிடம் அவர்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதோடு, அவரால் முடிந்த உதவிகளையும் செய்வதினால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.
எப்போதும் கலகலப்புடன் வகுப்புக்கு வரும் குமார் ஆசிரியர் அன்று மிகவும் இறுக்கமாக இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது.வகுப்பறைக்குள் வந்ததும் நேராக கீதாவின் இருக்கை அருகே சென்ற குமார் ஆசிரியர் ,கீதாவிடம் ''கீதா நீ என்னை பற்றி சுந்தரம் டியூஷன் சென்டெரில் என்ன பேசினாய் ? என்னை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது இதே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்'' என்று எச்சிரிக்கை தொனிக்க சொல்லிவிட்டு , அன்றைக்கான கணித வகுப்புகளை நடத்த துவங்கினார் . ஆனால் நடந்த நிகழ்வால் பாடத்தில் யாருக்கும் மனம் பதியவே இல்லை.
கீதா மிகவும் துடுக்கான பெண் .அவளின் அப்பா தாசில்தாரராக இருப்பதால் கீதாவுக்கு முரட்டு துணிச்சல் சற்று அதிகமாகவே இருந்தது .பனிரெண்டாம் வகுப்பு வருவதற்குள்ளாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களிடம் ஏற்பட்ட மோதல்களால் இதுவரை ஐந்து பள்ளிகளுக்கு மேல் மாறியவள் . அவளுடைய அப்பா தந்த அளவுக்கு அதிகமான செல்லத்தினால், கீதாவின் இயல்புகள் எல்லாம் திரிந்து , அவளிடம் ,எவரையும் மதிக்காத அலட்சிய போக்கே அதிகம் நிறைந்து இருந்தது.
இந்த புது பள்ளியில் சேர்ந்ததும் முதலில் குமார் ஆசிரியரிடம் கணித டியூஷன் வந்துகொண்டிருந்த கீதா , தன்னை தாசில்தாரர் மகள் என்ற அந்தஸ்தோடு நடத்தாமல் எல்லோருடனும் சரிசமமாக நடத்துவதும் , தாமதமாக வரும்போது எல்லாம் மற்றவர்களின் முன்னாள் ஆசிரியர் கடிந்து கொள்வதும் சற்றும் பிடிக்காததால் , வெறுப்புற்று அவளாகவே அதே ஊரில் சுந்தரம் ஆசிரியர் நடத்தி கொண்டிருந்த டியூஷன் க்கு மாறி கொண்டாள் . அங்கு தினமும் அவள் குமார் ஆசிரியரை பற்றி அவதூறாக பேசுவதும் , அவருக்கு சுந்தரம் ஆசிரியரின் அளவுக்கு கணிதத்துவம் இல்லை என்று குறை கூறுவதும் , குமார் ஆசிரியரின் காதுகளுக்கு எட்டியதே , குமார் ஆசிரியர் ,இவ்வாறு வகுப்பறையில் கீதாவை எச்சரிக்க காரணாமாய் அமைந்தது.
உடனே வீட்டிற்கு சென்ற கீதா தன அப்பாவிடம் நடந்தவற்றை தனக்கு சாதகமாக மாற்றி கூறி , குமார் ஆசிரியர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி , மிரட்டியதாக கூறியதை , மகள் மீது கொண்ட பாசத்தினால் ,என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தும் , தாசில்தார் மகளின் வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி , கல்வித்துறை உயரதிகாரிகளிடம் பேசி அன்றே குமார் ஆசிரியரை வேறு வகுப்புகளுக்கு மாற்றும்படி செய்து விட்டார் .
மறுநாள் வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு கணித வகுப்புக்கு குமார் ஆசிரியர் வராமல் வேறு ஆசிரியர் வந்தது அதிர்ச்சியை தந்தது .புது ஆசிரியருக்கோ மாணவர்கள் குமார் ஆசிரியரிடம் கொண்டிருந்த மரியாதையும், தனக்கு ஒத்துழைப்பு தராததும் அவருக்கு அந்த வகுப்பு மாணவர்கள் மீது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிய மாணவர்கள் பாதி பாடங்கள் எடுக்கப்பட்ட நிலையில் வேறு ஆசிரியர் மாற்றுவது சரியல்ல என்றும் குமார் ஆசிரியரே தங்களுக்கு மீண்டும் கணித வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொண்டனர்.
தலைமை ஆசிரியர் நிலைமையை உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததால் மறுநாள் உயரதிகாரிகளின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.மாணவர்கள் அனைவரும் குமார் ஆசிரியர் தவறாக பேசவில்லை , அவர் குற்றமற்றவற்றவர் என்று எவ்வளவோ கூறியும், அதிகார வர்கத்தின் குறுக்குவழி சிபாரிசுகளுக்கு முன்னாள் உண்மை எடுபடாமல் போனது.குமார் ஆசிரியருக்கு இந்த சம்பவத்தால் மிகுந்த அவமானமாகிவிட்டது. அவர் உடனடியாக பணி மாற்றம் பெற்றுக்கொண்டு வேறு ஊருக்கு மாற்றாலாகிவிட்டார்.மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அவர்களால் இந்த நிகழ்வுக்கு காரணமான கீதாவை சற்றும் மன்னிக்க முடியவில்லை .வகுப்பிலும் , வெளியிலும் கீதாவிடம் பேசுவதை ஒட்டுமொத்த மாணவர்களும் மாணவிகளும் அறவே தவிர்த்தனர்.
மாணவர்களும் மாணவிகளும் அந்த வருடம் முழுமையும் கீதாவுடன் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளவே இல்லை. ஆசிரியரை மாற்ற செய்தால் வுகுப்பு நண்பர்கள் தன்னை உயர்வாக நினைப்பார்கள் என்று எண்ணிய கீதாவுக்கு, வகுப்பினரின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு மிக்க வேதனையை தந்தது.இது நாளாவட்டத்தில் அவளுக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது .ஆனால் அவள் திருந்திய போதும் அவளை ஏற்றுக்கொள்ள நண்பர்கள் தயாராக இல்லை.
எப்போதும் நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெரும் அந்த பள்ளியின் அந்த வருடத்திய தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் விகிதமும் சற்று குறைவாகவே அமைந்தது. மாணவர்களுக்கு மனதளவில் ஆசிரியரின் மாற்றம் ஒரு சோர்வை ஏற்படுத்தியதே இதற்க்கு காரணமாக பேசப்பட்டது .
ஒரு சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் தண்டிக்க நினைப்பவர்களோடு சேர்த்து ,இதனை சார்ந்துள்ள சூழலில் உள்ளவர்களும் பாதிப்புக்கு ஆளாக்கபடுகிறார்கள் என்பதை இனியாவது அதிகாரங்களில் உள்ளவர்கள் தயவு செய்து கட்டாயம் உணரவேண்டும்.
--சே.தரணி குமார்.
No comments:
Post a Comment