Friday, 13 November 2009

தியாகம்

சூரியன் மலை முகடுகளை முத்தமிடும் ரம்மியமான மாலை பொழுது ஒன்றில் சரவணன் தனது காதலை யாமினியிடம் வெளிப்படுத்தினான். சரவணனும் யாமினியும் சிறு வயதில் ஒன்றாக பயின்றவர்கள். பின்னர் சரவணன் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டாலும் அவன் யாமினியுடனான தனது நட்பு சிதையாமல் கவனமுடன் பார்த்துக்கொண்டான். முதன்முதலாய் யாமினியை பார்த்த நிமிடம் முதல் அவனுள் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு அவள் மீது ஏற்பட்டிருந்தது. யாமினியின் தந்தை புத்தகப்பிரியர் என்பதால் அதையே காரணமாக கொண்டு , தன வீட்டிற்கு வரும் வார, மாத பத்திரிக்கைகளை எல்லாம் அவருக்கு தருவதை வழக்கமாக வைத்து,அதன்மூலம் யாமினியுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி கொண்டான்.

சரவணன் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், தனது காதலை யாமினியிடம் முதன் முதலாய் வெளிப்படுத்தினான். அந்த காதலை யாமினியும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவுடன் சரவணன் சிறகுகள் முளைத்து வானில் பறப்பதை போன்று அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். காதல் உணர்வு அவன் மனமெங்கும் நிறைந்து இருந்ததால் யாமினியுடன் இருக்கும் தருணங்களில் அவனுக்கு இந்த உலகமே வசப்பட்டு விட்டதை போன்று மட்டில்லாத மகிழ்ச்சியில் திளைத்தான். அவர்கள் காதலை அவர்களன்றி வேறொருவரும் அறியா வண்ணம் இருவரும் மிக கவனமுடன் பார்த்துக்கொண்டார்கள்.பலநேரம் கண்களாலேயே அவர்களின் மனங்களை பரிமாறிக்கொண்டார்கள். காதலில் கண்களால் பேச தொடங்கி விட்டால் வார்த்தைகள் செயலற்றதாகி விடுகிறது. ஆழமான உணர்வுகளை கூட கண்கள் மிக எளிதாக பிரியமானவர்களுக்கு எடுத்துச்சொல்லி விடுகிறது.

சரவணன் கல்லூரியில் மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த   சமயத்தில் சற்றும் எதிர்பாராவிதமாக யாமினியின் தாய் இறந்து போனபோது, யாமினியின் நிலையை கண்டு சரவணன் மிகவும் பரிதவித்து போனான். அவளின் தாயுடைய மரணம் அவளின் வாழ்வையே திசை மாற்ற காரணமாகி விட்டது. நடந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து யாமினி மீளும்முன்பே,அவளுடைய தந்தை மிகவும் உடல்நிலை பாதிப்புள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது யாமினி அனலிடை புழுவாக துடிதுடித்து போனாள். அந்த தருணத்தில் உறவுகளால் சூழப்பட்டிருந்த யாமினியிடம் ஆறுதல் சொல்லி தேற்றவும் சரவணனால் இயலாமல் போனது. மருத்துவர்கள் யாமினியின் தந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

நெடுநாட்களாக யாமினியை தன்னுடைய உதவாக்கரை தம்பிக்கு மணமுடிக்க ஆவல் கொண்டிருந்த,அவளுடையஅக்கா மிருதுளாவின் கணவன், இதையே சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு , தன் தம்பிக்கும் , யாமினிக்குமான திருமணத்திற்கு நிர்பந்தபடுத்த தொடங்கினான். ஒருவேளை இது நடைபெறாவிட்டால் மிருதுளாவை நிரந்தரமாக விலக்கி வைத்து விடுவேன் என்று அவன் விடுத்த மிரட்டலால் யாமினியின் உறவுகள் அரண்டு போயின. இந்த பேச்சுக்கள் யாமினியின் தந்தையின் காதுகளை எட்டியபோது , அவருக்கு தன் உடல் நிலை இருக்கும் நிலையில், மகளின் திருமணம் என்ற கேள்விக்குறிக்கு விடை கிடைத்த சந்தோஷத்தில், தனது செல்ல மகளின் ஆழமான காதலை சற்றும் அறியாதவராதலால் உடனே இதற்க்கு சம்மதித்து உறுதி கூறிவிட்டார். அடுத்த வாரமே திருமணம் நடத்துவது என்று முடிவாகி போனது.

 சரவணனை தனிமையில் சந்தித்து நடந்த  நிகழ்வுகளை கூறி கண்ணீர் சிந்திய யாமினியை கண்டு சரவணன் செய்வதறியாமல் கலங்கி நின்றான். அவன் மனமெங்கும் யாமினியே நிறைந்திருந்ததால் , அவள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவது என்ற உறுதியோடு இருந்தான். யாமினி சரவணனை  காட்டிலும் மிக தெளிவானவள். எல்லா சூழலிலும் யாமினி எடுக்கும் முடிவுகளே இதுவரை சரியாக அமைந்திருந்தது. மறுநாள் அதே இடத்தில் தன்னை சந்திக்கும்படி சொல்லிவிட்டு யாமினி சென்று விட்டாள்.
 
அன்றைய இரவு சரவணனுக்கு மிகவும் நீண்டதாக  தோன்றி  அவனை மிகவும் துன்புறுத்தியது. சுவர்க்கோழிகளின் சாதாரணமான  சத்தம் கூட அவனுக்கு   மிக பூதாகரமாக கேட்டது. அவனுள் கவிதை பொங்க வைக்கும் நிலவின் ஒளி அன்றைய தினம் அவனுக்கு வெம்மையாய் சுட்டது. யாமினியுடன் நட்பும் காதலுமாய் நகர்ந்த நாட்களின் நினைவுகள் அவன் மனத்திரையில் காட்சிகளாய் விரிந்து கொண்டே இருந்தது. காலையில் அம்மாவின் குரலை கேட்ட பிறகே தான் இரவு முழுதும் உறங்காமலேயே இருந்து விட்டதை சரவணன் உணர்ந்தான்.

யாமினி வருவதற்கு நெடுநேரம் முன்பே அவள் சொன்ன இடத்தில் அவளுக்காக  காத்திருந்த  சரவணனின் மனதில் குழப்பங்களே அதிகம் அணிவகுத்திருந்தன. ஆனால் யாமினியின் சொல்லுக்கு  முழுமையாக  கட்டுப்படுவது என்பதில் மட்டும் அவன்  தெளிவாக இருந்தான். யாமினியற்ற வாழ்க்கை  என்பது அவனுக்கு இருள் சூழ்ந்ததாகவே  மனதிற்கு பயம் தந்தது. எப்போதும்  புன்னகையுடன் சரவணனை  எதிர்கொள்ளும்  யாமினியின்  முகம் அன்று மிகவும் இறுக்கமாக இருந்தது. இரவு முழுமையும் அவளும் உறங்காமலேயே இருந்திருப்பாள் என்பதை அவள் விழிகள் சொல்லின. நெடுநேரம் வரை  பேச்சற்றவர்களாக  ஒருவரை ஒருவர் இயலாமையுடன்   பார்த்துக்கொண்டிருந்தனர்.   உணர்வுகளின் பெருக்கால் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
 
யாமினி தான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நம்புகிறாயா? என்று சரவணனை கேட்ட போது அவன் அதை மவுனமாய்   ஆமோதித்தான் .யாமினி தற்போதைய சூழலில் அவர்கள் பிரிவது ஒன்றே அனைவருக்கும் நன்மை பயக்கும்  என்பதால்  திருமணத்திற்கு இசைவு தெரிவிக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தாள்.  ஒருவேளை இதை தவிர்த்து சரவணனை கரம் பிடித்தால், அவர்களால் அந்த ஊரில் உறவுகளை எதிர்த்து வாழ இயலாமல் போகும், அந்த நிலையில் சரவணனது  பொறியாளர்  ஆகும்   கனவு நிச்சயம் தகர்ந்து போகும்.எங்கோ ஒரு ஊரில் எதோ ஒரு வேலை செய்து கொண்டு வாழ்வை நிலை நிறுத்தி கொள்ள போரடவேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இவர்கள் இப்படி முடிவு எடுப்பார்களேயானால் ,மருத்துவமனையில் இருக்கும் யாமினின் தந்தைக்கு நிச்சயம் ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும். அவளுடைய அக்கா மிருதுளா, கணவனால் கை விடப்பட்டு வீட்டிற்கு வந்து விடும் சூழல் வரும் .பல்வேறு தரப்பிலும் குடும்பத்தினரது வெறுப்பையும், சாபத்தையும் பெற்று தொடங்கும், புது வாழ்வு எந்த வகையிலும் மன நிறைவானதாக இருக்காது என்பதை சரவணனுக்கு யாமினி முழுமையாய் உணர்த்தினாள். இதை எல்லாவற்றையும் விட சரவணன் வாழ்வில் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்ற எண்ணமே யாமினிக்கு மேலோங்கி இருந்ததால் தன்னுடைய ஆசைகளை பலி கொடுக்கும் முடிவுக்கு அவள் வந்து விட்டிருந்தாள். 
 
அவளின் மன உணர்வுகளை  முழுமையாய் உணர்ந்த சரவணனுக்கு அவளின் முடிவை எதிர்த்து பேச நா எழவில்லை.அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆதங்கமே அவனின் மனதை ஆட்கொண்டிருந்தது.  பெண்கள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களின் மன உணர்வுகளுக்கு சமாதி கட்டிவிட்டு , குடும்பதினர்களுக்காக சிலுவை சுமக்க தயாராகி விடுகிறார்கள் . இந்த பரந்த உலகை பெண்களின் அர்பணிப்பும் , தியாகமுமே தாங்கி  நிற்கிறது.  அவர்கள் எளிதாக மற்றவர்களுக்காக விட்டு கொடுக்க முன்வருகிறார்கள் . ஆயினும் பெண்மையின் மேன்மையை சமுதாயம் இன்றளவும் அரைகுறையாகவே புரிந்து கொண்டிருக்கிறது.

விரைவாக யாமினியின் திருமணம் நடந்து முடிந்தது. அவள் மனமெங்கும் உணர்வுகளின்   சூறாவளி  வீசிக்கொண்டிருந்ததால் அவளின் முகம் புன்னகையற்று போய் விட்டது. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு படிக்காத மாப்பிள்ளையை கல்யாணம் செய்து , அக்காவின் வாழ்வையும்  காப்பாற்றி  விட்டதாக உறவுகள் அவளை கொண்டாடின.சரவணனுக்கும், தந்தைக்கும், அக்காவிற்கும் ஒருசேர  தன்னுடைய இந்த முடிவால் நன்மை ஏற்பட்டதால் யாமினி சிறிதளவு ஆறுதல் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.பல வருடங்களுக்கு பிறகு சரவணன் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருக்கிறான். திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்த சரவணனை யாமினியின் சொல் தான் இறுதியில் பணிய வைத்தது.  இன்று அவனுக்கு அன்பான மனைவியும் அழகான குழந்தைகளுமாய் நல்ல சூழலில் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யாமினிக்கு தான் வாழ்க்கை அத்துணை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவளின் கணவனின் சரியற்ற போக்கால் அவள் மிகுந்த சிரமங்களிநூடே தனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறாள் . சரவணனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருப்பதே அவளுக்கு ஒரே மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. தனக்கு நல்ல வாழ்வு அமைய காரனாக இருந்த யாமினியின் தற்போதைய நிலை தான் பல நேரங்கள் சரவணனது சந்தோஷங்களை ஊனமாக்கி விடுகிறது.
.

வாழ்க்கை எத்துணை புதிரானது? அது பல்வேறு கால கட்டங்களில் மனதிற்கு பிடித்தவர்களை சேர்ப்பதும், பிரிப்பதுமாய் தன்னுடைய கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டே இருக்கிறது. வெகு சிலருக்கு மட்டுமே அது அவர்களின் வசப்பட்டதாய் அமைந்து விடுகிறது.  எண்ணிலடங்காத பேர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வாழ்நாள் முழுமையும் அவர்களை வருத்தம் கொள்ள வைத்து விடுகிறது.

--சே.தரணிகுமார் 

Monday, 9 November 2009

மனிதாபிமானம்

வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து  சென்னைக்கு  வேலைக்கு சென்று வருபவர்களுக்கு  ஏலகிரி விரைவு ரயில் என்பது வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்று. இரண்டு மணி முதல் எட்டு மணி வரை தினமும் பிரயாணம் செய்யும் அவர்கள் ஏலச்சீட்டு, மாதசீட்டு நடத்துவது முதல் இசைக்குழு அமைத்து பாடுவது என்று பல குழுக்கள் அமைத்து அந்த ரயில் பயண நேரத்தை பல்வேறு வகையாக பயன்படுத்தி கொண்டனர்.காலை ஐந்து மணிக்கு புறப்படும் அந்த ரயில் ஒன்பது மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்த பதினைந்து நிமிடங்களுக்குள் மொத்த கூட்டமும் அலுவலக நேரம் காரணமாக அதி விரைவாக கலைந்து விடும். எனக்கும் இரண்டு வருடம் அந்த ரயில் பயண அனுபவம் கிட்டியது.

ஒருமுறை அந்த ரயிலின் காலை நேர பயணத்தில் எங்களோடு பார்வையற்ற நபர் ஒருவர் பயணம் செய்தார். அவர் மிக இனிமையாக பேசியதால் அவரை சுற்றிலும் இருப்பவர்கள் அவருடன் பேசுவதற்கு மிக்க  ஆவல் கொண்டனர். அவர் தன் மகளின் திருமண விஷயமாக திருவேற்காடு வரை செல்வதற்காக அந்த ரயிலில் வந்து கொண்டிருந்தார். அவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் , உடனிருப்பவர்களை தனக்கு திருவேற்காடு செல்லும் பேருந்திற்கு வழி காட்டுமாறு பலமுறை சொல்லிக்கொண்டே வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் வழக்கம் போல மொத்த கூட்டமும் குறுகிய நேரத்தில் காணாமல் போனது. தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்கிய அந்த பார்வையற்ற நபர் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தார்.

அதுவரை அவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்த   பலருக்கும்,  அந்த விழியிழந்த  நபர் வழி காட்ட வேண்டி விடுத்த  தாழ்மையான கோரிக்கை, உதவும் மனம் துளி   கூட இல்லாததால் எல்லோருக்கும் மிக
 எளிதாக மறந்து போயிருந்தது.சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் வரும் கதாபாத்திரங்களின் துயரம் கண்டு கண்ணீர் சிந்தி மனதார இரக்கப்படும் மக்கள்,  நிஜ வாழ்வில்  துன்பப்படுபவர்களுக்காக  உண்மையிலேயே இரக்கம் கொள்ள  துணிவதே  இல்லை. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் துயரம் எத்துணை கற்பனையானதோ அதுபோல  இந்த மக்களின் இரக்க சிந்தனையும் கற்பனையான ஒன்றாகவே
 இருக்கிறது. இந்த நவீன  உலகில் மனிதாபிமானம் என்பது  அரிதான பொருளாகிவிட்டது.

நான் அவருடன் பேசவில்லை என்றாலும் நடந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்ததால்  , எனக்கு அவருடைய தேவை புரிந்தது. நான் அவருடைய கரம் பற்றி மெதுவாக ரயில்நிலையம் வெளியே அழைத்து வந்து , சுரங்கபாதையிநூடே  சாலையை கடந்து  எதிர்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் திருவேற்காடு செல்லும் பேருந்து வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தேன். தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தாமதமாக செல்லும்போது உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய அலுவலக நேரம் ஒன்பது முப்பதிற்கு  தொடங்கிவிடும். என்னுடைய உயரதிகாரி மிகவும் சிடுசிடுப்பானவர். எனக்கு இன்று நிச்சயம் திட்டு விழும் என்பதை உணர்ந்திருந்தும் , அந்த பார்வையற்ற நபரை பரிதவிக்க விட்டு சென்று விட மனம் ஒப்பவே இல்லை.

திருவேற்காடு  செல்லும் பேருந்து வந்ததும் , அதில் அவரை ஏற்றிவிட்டு நடத்துனரிடம் அவரின் நிலையை விளக்கி , அவரை பத்திரமாக திருவேற்காடு நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கேட்டுக்கொண்டு, பிறகு நான் செல்லவேண்டிய இடத்திற்கு பேருந்து பிடித்து அலுவலகம் அடையும்போது மணி பத்து முப்பதை தொட்டிருந்தது. , ஒரு விழியற்ற நபருக்கு வழி காட்டி அவருடைய கலக்கத்தை போக்கிய மனநிறைவு என்னுள் நிறைந்திருந்ததால் வழக்கம் போல எனது உயரதிகாரி பாடிய வசை சொற்கள் அன்று மட்டும் எனக்கு தவறான அர்த்தம் கொண்டதாக  தோன்றவே இல்லை.

--சே.தரணிகுமார்

Sunday, 8 November 2009

பிரிவு

பிரபுவை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமுள்ளதாய் அப்போது தோன்றியது. பிரபுவுக்கு துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும் இருந்தனர். பிரபுவுக்கும் அவன் மனைவி அமிர்தாவுக்கும் சந்தோசம் என்பது அந்த ஒரு மாத கால வாழ்க்கைதான். பதினோரு மாதங்கள் அந்த ஒரு மாதத்தின் நினைவுகளிலேயே கழிந்துவிடும். பிரபுவுக்கு அலுவலக ரீதியான அழுத்தம் அதிகம் . அமிர்தாவுக்கு குழந்தைகளையும் , வீட்டையும் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அலைபேசி மூலமாகவே அவர்களது அந்தரங்கங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். செல்லமான சிணுங்கல்களும், சண்டைகளும், சமாதானங்களும் அலைபேசி மூலமாகவே அன்றாடம் அரங்கேறும்.

முப்பது நாட்கள் விடுப்பு பிரபுவுக்கு மிகவும் போதாமல் இருந்தது. ஊருக்கு வரும் முப்பது நாட்களில் ,முதல் பத்து நாட்கள் உறவினர்களின் நல விசாரிப்புகளிலேயே வீண் விரயம் ஆனது. இடையில் இருக்கும் பத்து நாட்களில் மட்டுமே அவனுக்கென்று நேரம் செலவழிக்க நேரம் ஏதுவாகியது. அந்த பத்து நாட்களில் ஏதேனும் உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ திருமணம், விசேஷம் என்று வந்துவிட்டால் விடுப்பில் வந்தது மன நிறைவில்லாமல் போனது. கடைசி பத்து நாட்கள் வேலைக்கு திரும்பவேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் அந்த நாட்கள் அத்துணை ரசிக்கும்படியாக இருந்ததில்லை.

வெளிநாட்டிற்கு குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில் , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் குழந்தையின் மனதை போல கலக்கமாய் இருக்கின்றது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தங்களால் , தன் சுய உணர்வுகளை கூட வெளிக்காட்டமுடியாமல் ,மாய திரைகள் மூலம் அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு திரையிட்டு கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குடும்பத்தின் மீது பற்று கொண்ட எவருக்கும் வீட்டை விட்டு பிரிந்து செல்வது அத்துணை சுலபமான ஒன்றாக இருந்ததில்லை. கண்களின் கண்ணீரை அவர்கள் மிகுந்த சிரமங்களூடே மறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மனைவியின் கடைசி நேர தழுவல்களில் மறைந்திருக்கும் வலி மிகுந்த மன உணர்வை வார்த்தைகளில் அத்துணை சுலபமாய் வர்ணித்துவிட முடியாது. தந்தையை பிரியும் குழந்தைகளின் ஏக்கங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாய் தோன்றுவதை பார்க்கும் போது , எல்லாவற்றையும் உதறி விட்டு அவர்களுடனேயே இருந்து விட முடியாதா? என மனம் பேராவல் கொள்கிறது. ஊரிலிருந்து திரும்பி வரும்போது விமானத்தில் எடை குறைவாக அனுமதிப்பதின் காரணம் அவர்களின் மனம் மிகவும் கணமாக இருப்பதாலா ? என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஊருக்கு கிளம்புகிற முந்தைய நாளில் பிரபு வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை கண்ட தாய் கோழி ஒன்று விடுத்த அபய குரலை கேட்ட கோழி குஞ்சுகள் தன் தாயின் இறகுகளின் உள்ளே வசதியாய் மறைந்து கொண்டன. பின்னர் அருகில் வந்த பருந்தை மூர்க்கமாக கொத்துவதர்க்காக தாய் கோழி எத்தனித்தது. வீட்டினுள் இருந்து ஆட்கள் ஓடிவரவும் பருந்து அங்கிருந்து பறந்து விட்டது. பிரபுவின் வீட்டில் எப்போதும் நிறைய கோழிகள் இருக்கும். மின்சாரத்தால் குஞ்சுபொரிக்கப்பட்ட கோழிகளையும் அவர்கள் வளர்த்து இருக்கிறார்கள். ஒருமுறை வாங்கப்படும் குஞ்சுகளில் கால் பங்கு கூட வளர்ந்து பெரிய கோழிகள் ஆவது கடினம். அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் , தங்களை கொத்த வரும் பறவை போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பக்குவம் அந்த குஞ்சுகளுக்கு தெரியாததும் இதற்க்கு காரணமாய் இருந்தது. தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகள் எப்போதும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தன. இரை தேடி தருவது முதல்,ஆபத்து நேரங்களில் எல்லாவிதமாகவும் முயன்று தன் குஞ்சுகளை தாய் கோழி காப்பாற்றுவதால் , அந்த குஞ்சுகள் கூடுமானவரை எல்லாமும் வளர்ந்து பெரிய கோழிகள் ஆயின.

பருந்து சென்ற பிறகும் நெடுநேரம் வரை இதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த பிரபுவை அவனுடைய குழந்தைகளின் அன்பான அழைப்பு, சிந்தனையில் இருந்து மீள வைத்து. இந்த அழகான குழந்தைகள் மின்சார கோழி குஞ்சுகளை போல இல்லாமல் , தாய் கோழியுடன் வளரும் குஞ்சுகளை போல பாதுகாப்பாகவும், அன்புடனும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் மனோ வலிமையுடன், தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் வளர வேண்டும் என்று பிரபுவின் மனம் உறுதியாய் எண்ண தொடங்கியது.

பெரியவர்களிடம் ஆசி பெற்று ,மனைவியின் கரம் பற்றி ஆறுதல் சொல்லி ,குழந்தைகளை வாரி மார்போடு அணைத்து முத்தமிடும் பிரபுவை , இனி பதினோரு மதங்கள் கழித்தே காண முடியுமென்று ஒட்டுமொத்த உறவுகளும் எண்ணிக்கொண்டு அவனுக்கு மௌனமாய் விடை கொடுத்தது . ஆனால் துபாய் சென்று, உடனடியாக விசாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பி வர இருக்கும் பிரபுவுக்கு இந்த எண்ணம் வர காரணமாய் இருந்த அவர்கள் வீட்டு தாய் கோழி , இது பற்றி ஏதும் அறியாது , தோட்டத்தின் மூலையில் தன் குஞ்சுகளுக்கு இரையை சீய்த்து கொடுத்து கொண்டிருந்தது.

--சே.தரணிகுமார்

வீண்பழி

ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெரிய குடும்பம் எங்கள் ஊரில் டென்ட் அமைத்து தங்கி  இருந்தது. அவர்கள் ராஜ வைத்தியம் என்னும் வைத்திய முறையை கொண்டு பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அவர்கள் பணம் என்பது  குறிக்கோளாக   இல்லாமல் ,அவரவர் வசதிக்கேற்ப  வைத்தியத்திர்க்கான   பணத்தை பெற்று கொண்டார்கள். மிகவும்  
 இயலாதவர்களுக்கு கூடுமானவரை இலவசமாகவே  வைத்தியம் பார்த்தனர். அவர்கள் ஊருக்கு வந்த  இரண்டு மாதங்களில்   சுற்றுவட்ட  பகுதிகளில்  எண்ணற்ற  நோயாளிகள் அவர்களால் பலனடைந்து இருந்தனர்.

 ஊருக்கு வெளியில் இருந்த ஆலமரத்தடியினில் அவர்கள் தங்கி இருந்த இடத்தை மிகவும் சுத்தமாக பராமரித்து, சம்பாதிக்கும் பணத்தை கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கருகில்  இருந்த பம்பு செட் வீட்டில் இருந்த வயதான பெண்மணியை யாரோ நகைகளுக்காக கொலை செய்து விட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ளலாயினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பிணம் இருந்த இடத்தை முகர்ந்த மோப்ப நாய் நேராக ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே வந்து அமர்ந்து கொண்டது. பின்னர் அது சாலையின் பக்கம் சென்று படுத்து  கொண்டது.

எதையுமே மேலோட்டமாகவே சிந்தித்து, ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு பழகி போன காவல்துறையினர்,உடனே அங்கிருந்த ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் ஆறுபேரை விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்று விட்டனர். மீதமிருந்த பெண்களும்  குழந்தைகளும் மிகவும் கலக்கமுற்று கதறி அழ தொடங்கினர். இறந்து போனவரின் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்களின் வைத்தியத்தால்  பலன்பெற்ற  ஊர்மக்களும் ,   நடந்த சம்பவத்தை நேரில் கண்டது போல  அந்த அப்பாவிகளை பழித்து கூறலாயினர். நியாயமற்ற முறையில் வீண்பழி சுமத்தும் ஊரார்களின்  முன்பு அந்த பெண்களும் குழந்தைகளும் நடு நடுங்கியபடி பரிதவித்து நின்று கொண்டிருந்தனர்.

காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் காவல்துறையினரால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். கொலை செய்ததை ஒப்புக்கொள்ளும்படி கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டனர். அன்று மறுநாள் அந்த ஊரை சேர்ந்த வேலப்பன் எதேச்சையாக பக்கத்து டவுன் கடைவீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பரிச்சியமான அடகு கடைகாரர் அவரை அழைத்து , அங்கு நின்றுகொண்டிருந்த இறந்து போன பெண்மணியின்  பேரனான   தியாகுவை காட்டி ,''இவர் உங்கள் ஊர்காரர் என்று சொல்கிறார் , நகை விற்பதற்காக வந்திருக்கிறார் , இவரை  உங்களுக்கு  தெரியுமா? ''  என்று அவர் கேட்டவுடன் கலவரமாகிபோன தியாகு உடனே அவர்கையில் இருந்த நகையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சட்டென்று நகர்ந்து விட்டான்.

வேலப்பனுக்கு உண்மை புரிந்து போனது .பழக்கவழக்கம் சரியில்லாத தியாகு தான், தனது பாட்டியை நகைக்காக கொன்று இருக்கலாம் என்று அனுமாநித்தவராய் நேரே தன்னுடைய ஊர் காவல் நிலையம் சென்று நடந்தவற்றை கூறியவுடன்,அப்பாவிகளை அழைத்து வந்து குற்றவாளிகளாய் சித்தரித்து வழக்கை முடித்து கொள்ளும் காவல்துறை விழித்து கொண்டு தியாகுவை கைது செய்தது. பத்து பவுன் நகைக்காகவே தான் பாட்டியை கொலை செய்ததாக தியாகு உண்மையை ஒப்புக்கொண்டான். கொலை செய்த பின்னர் சிறிது நேரம் ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே தான் அமர்ந்துவிட்டு பிறகு சாலைக்கு வந்து பேருந்தில் ஏறி டவுனுக்கு சென்றதாக தியாகு சொன்னவுடன் தான் காவல்துறைக்கும் ஊர்மக்களுக்கும் மோப்ப நாய் டென்ட் அருகே சென்று அமர்ந்ததின்  காரணம் புரிந்தது.

காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் திரும்பி வந்ததும் , பரிதவித்து போயிருந்த  அவர்கள் குடும்பத்து பெண்கள் அவர்களை கண்ணீருடன்   கட்டி தழுவி   கொண்டனர் . அன்றைய இரவே அவர்கள் அந்த இடத்தை காலி செய்து  விட்டு எங்கோ போய் விட்டனர்.மறுநாள் வெறிச்சோடி போயிருந்த அந்த இடத்தை கண்ட ஊர்மக்கள்  '' பாவம்  இப்படி வீண்பழியால்  துன்பப்பட்டு விட்டார்களே ''  என்று யாரோ, யாருக்கோ  துன்பம் தந்ததை  போல,  ஒன்றும் அறியாத அப்பாவிகளை போல   வழக்கம் போல உச்சு  கொட்டினார்கள்.

 ----சே.தரணிகுமார்

Friday, 6 November 2009

அரவணைப்பு

பிரபுவை  அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய  ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும்   மிகவும்  அர்த்தமுள்ளதாய்  அப்போது  தோன்றியது.  பிரபுவுக்கு  துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும்  இருந்தனர். பிரபுவுக்கும் அவன் மனைவி அமிர்தாவுக்கும் சந்தோசம் என்பது அந்த ஒரு மாத கால வாழ்க்கைதான். பதினோரு மாதங்கள் அந்த ஒரு மாதத்தின் நினைவுகளிலேயே கழிந்துவிடும். பிரபுவுக்கு அலுவலக ரீதியான அழுத்தம் அதிகம் . அமிர்தாவுக்கு குழந்தைகளையும்  , வீட்டையும் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அலைபேசி மூலமாகவே அவர்களது அந்தரங்கங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். செல்லமான சிணுங்கல்களும், சண்டைகளும், சமாதானங்களும் அலைபேசி மூலமாகவே அன்றாடம் அரங்கேறும்.

முப்பது நாட்கள் விடுப்பு பிரபுவுக்கு மிகவும் போதாமல் இருந்தது. ஊருக்கு வரும் முப்பது நாட்களில் ,முதல் பத்து நாட்கள் உறவினர்களின் நல விசாரிப்புகளிலேயே வீண் விரயம் ஆனது. இடையில் இருக்கும் பத்து நாட்களில்  மட்டுமே அவனுக்கென்று நேரம் செலவழிக்க  நேரம்   ஏதுவாகியது. அந்த பத்து நாட்களில் ஏதேனும் உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ திருமணம், விசேஷம் என்று வந்துவிட்டால் விடுப்பில் வந்தது மன நிறைவில்லாமல் போனது. கடைசி பத்து நாட்கள் வேலைக்கு திரும்பவேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் அந்த நாட்கள் அத்துணை ரசிக்கும்படியாக இருந்ததில்லை.

வெளிநாட்டிற்கு  குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில்  , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும்  குழந்தையின்  மனதை போல  கலக்கமாய்  இருக்கின்றது.  குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தங்களால் , தன் சுய உணர்வுகளை கூட வெளிக்காட்டமுடியாமல் ,மாய திரைகள் மூலம் அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு திரையிட்டு கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குடும்பத்தின் மீது பற்று கொண்ட எவருக்கும் வீட்டை விட்டு பிரிந்து செல்வது அத்துணை சுலபமான ஒன்றாக இருந்ததில்லை. கண்களின் கண்ணீரை அவர்கள் மிகுந்த சிரமங்களூடே மறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மனைவியின் கடைசி நேர தழுவல்களில் மறைந்திருக்கும் வலி மிகுந்த மன உணர்வை வார்த்தைகளில் அத்துணை சுலபமாய் வர்ணித்துவிட முடியாது. தந்தையை பிரியும் குழந்தைகளின் ஏக்கங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாய் தோன்றுவதை பார்க்கும் போது , எல்லாவற்றையும் உதறி விட்டு அவர்களுடனேயே இருந்து விட முடியாதா? என மனம் பேராவல் கொள்கிறது. ஊரிலிருந்து திரும்பி வரும்போது விமானத்தில் எடை குறைவாக அனுமதிப்பதின் காரணம் அவர்களின் மனம் மிகவும் கணமாக  இருப்பதாலா ? என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஊருக்கு கிளம்புகிற  முந்தைய நாளில் பிரபு வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை கண்ட தாய் கோழி ஒன்று விடுத்த அபய குரலை கேட்ட   கோழி குஞ்சுகள் தன் தாயின் இறகுகளின்  உள்ளே  வசதியாய் மறைந்து கொண்டன. பின்னர் அருகில் வந்த பருந்தை மூர்க்கமாக கொத்துவதர்க்காக   தாய் கோழி எத்தனித்தது. வீட்டினுள் இருந்து ஆட்கள் ஓடிவரவும் பருந்து அங்கிருந்து பறந்து விட்டது. பிரபுவின் வீட்டில் எப்போதும் நிறைய கோழிகள் இருக்கும். மின்சாரத்தால் குஞ்சுபொரிக்கப்பட்ட   கோழிகளையும் அவர்கள் வளர்த்து இருக்கிறார்கள்.  ஒருமுறை  வாங்கப்படும் குஞ்சுகளில் கால் பங்கு கூட வளர்ந்து பெரிய கோழிகள் ஆவது கடினம். அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் , தங்களை கொத்த வரும் பறவை போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும்  பக்குவம் அந்த குஞ்சுகளுக்கு தெரியாததும் இதற்க்கு  காரணமாய் இருந்தது. தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகள் எப்போதும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தன. இரை தேடி தருவது முதல்,ஆபத்து நேரங்களில் எல்லாவிதமாகவும் முயன்று தன் குஞ்சுகளை தாய் கோழி   காப்பாற்றுவதால் , அந்த குஞ்சுகள் கூடுமானவரை எல்லாமும் வளர்ந்து பெரிய கோழிகள் ஆயின. 

பருந்து சென்ற பிறகும்  நெடுநேரம் வரை இதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த பிரபுவை அவனுடைய  குழந்தைகளின் அன்பான அழைப்பு,  சிந்தனையில் இருந்து மீள வைத்து. இந்த அழகான குழந்தைகள் மின்சார  கோழி குஞ்சுகளை போல இல்லாமல் , தாய் கோழியுடன் வளரும் குஞ்சுகளை போல பாதுகாப்பாகவும், அன்புடனும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் மனோ வலிமையுடன்,  தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் வளர வேண்டும் என்று பிரபுவின் மனம் உறுதியாய் எண்ண தொடங்கியது.

பெரியவர்களிடம் ஆசி பெற்று ,மனைவியின் கரம் பற்றி ஆறுதல் சொல்லி ,குழந்தைகளை வாரி மார்போடு அணைத்து முத்தமிடும் பிரபுவை , இனி பதினோரு மதங்கள் கழித்தே காண முடியுமென்று ஒட்டுமொத்த உறவுகளும் எண்ணிக்கொண்டு அவனுக்கு மௌனமாய் விடை கொடுத்தது .  ஆனால் துபாய் சென்று,  உடனடியாக விசாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பி வர இருக்கும் பிரபுவுக்கு இந்த எண்ணம் வர காரணமாய் இருந்த அவர்கள் வீட்டு தாய் கோழி , இது பற்றி ஏதும்  அறியாது , தோட்டத்தின் மூலையில் தன் குஞ்சுகளுக்கு இரையை  சீய்த்து கொடுத்து கொண்டிருந்தது. 

--சே.தரணிகுமார்  

Tuesday, 3 November 2009

கற்பு

 சுகுணா சுமாரான அழகு தான் என்றாலும் பார்க்க திருத்தமாக இருப்பாள். அவளின் அப்பாவும்  அம்மாவும்  விவசாய கூலிகள். சுகுணா அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் அவளுடைய தேவைகள் யாவும் சிரமமின்றி அவளுக்கு கிடைத்து வரலாயின. சுகுணா வளர்ந்து பெரியவள் ஆனதும், அவளுடைய எழிலும் , வனப்பும், ஊரிலுள்ள இளவட்டங்களை உறக்கம் தொலைக்க வைத்தது.சுகுணாவிற்கு இளைஞர்களின் காதல் பார்வை போதை தருவதாக இருந்தது. அந்த ஊரின்  பெரிய விவசாய குடும்பமான பெரியசாமியின் மகன் முரளிக்கும் சுகுணாவுக்கும் காதல் ஏற்பட்டது.

முரளிக்கு உண்மையிலேயே சுகுணாவின் மேல் காதல் இல்லை.அவனுக்கு அவளுடைய தேகம் மட்டுமே தேவையாய் இருந்தது. அவன் சுகுணாவை பயன்படுத்திக்கொள்வது ஒன்றே இலக்காக தன்னுடைய   நடவடிக்கைகளை  மிக சீராக திட்டமிட்டு நடத்திகொண்டிருந்தான் .ஆனால்  தனக்கு அவனுடன் ஏற்பட்ட காதலை மிக புனிதமாக எண்ணிய சுகுணாவோ தனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து விட்டதாக  சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.

முரளி எதிர்பார்த்ததை போல ஒரு சூழ்நிலை அமைந்தது. அவனை நம்பி அவனுடன் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்ற  சுகுணா திரும்பி வரும்போது தன்னுடைய கற்பை இழந்திருந்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு முரளியின் செய்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முதலில் இதை சாதாரணமாக எண்ணிய சுகுணா பின்னர் அவனுடைய முழுமையான புறக்கணிப்பை உணர தொடங்கினாள்.

முரளிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியதை அறிந்த சுகுணா ,மிகவும்   கலக்கமுற்று நேரே அவனுடைய வீட்டிற்கு சென்று அவனுடைய  பெற்றோர்களிடம் நடந்தவைகளை கூறி தன்னை முரளியுடன் சேர்த்து வைக்கும்படி மன்றாடினாள். முரளியின் தந்தை பெரியசாமிக்கு ஜாதி மற்றும் ,அந்தஸ்து பேதங்கள் அந்த ஏழை பெண்ணின் கோரிக்கையை ஏற்க பெரும் தடையாக இருந்தது. திரண்டிருந்த ஊராரின் முன்னிலையில் முரளி ''சுகுணாவுடன் சாதாரண நட்பாக மட்டுமே பேசியதாகவும், காதலிப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை என்றும், அவளுடன் உறவுகொண்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது'' என்று அவன் கூறியபோது ,அவன் சொல்வது பொய் என்பதை உணர்ந்திருந்தும் , பெரியசாமியின் பணம் மற்றும் அதிகார செல்வாக்குக்கு பயந்த ஊர் மக்கள் அந்த அபலை பெண்ணிற்க்காக யாரும் பரிந்து பேச முன் வரவில்லை. பணக்காரவீட்டு பிள்ளையை வீண்பழி சுமத்தி தான் நினைக்கும் வாழ்க்கையை அமைக்க நினைத்தவளாகவே அவளை முரளியின் குடும்பத்தார் வசை பாடினர்.அறிவியல் முன்னேற்றமற்ற அந்த காலத்தில் சுகுணாவிற்கு தன் கூற்றை நிரூபிக்க எந்த வசதியும் இல்லாமல் போனது. தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்த இடத்தை விட்டு நகரபோவதில்லை என்று உறுதி கூரியவளாய் சுகுணா முரளியின்  வீட்டின் முன்பு அமர்ந்து போராட துவங்கினாள்.  அடுத்த இரண்டு நாட்கள் அன்ன ஆகாரமின்றி அந்த பேதை பெண் நடத்திய சத்தியாகிரகம் அந்த கல்மனம் கொண்ட பணக்கார வர்கத்தினரின் முன்பு எடுபடாமல் போனது. ''முரளி என்னும் கயவன்  காமப்பசிக்காக காதலை ஆயுதமாக கொண்டு தன்னுடைய கற்பை சூறையாடி விட்டானே'' என்ற சுகுணாவின் மன குமுறலை பிரதிபலிக்கும் விதமாக வானமும் , இடி மின்னலுடன் தன் பேய்மழையை   கொட்டி தீர்க்க ஆரம்பித்தது.

அதுவரை நடந்த நிகழ்வுகளால் மிகவும் மனமுடைந்து மகளின் மேல்  கோபமாயிருந்த  சுகுணாவின் பெற்றோர்கள் , கொட்டும் மழையில் இறக்கமற்றவர்களின் வீட்டின் முன்பு பரிதவிக்கும் மகளின் நிலையை கண்டு மனம் இறங்கி , வாழ்க்கை போனால் போகிறது , இறுதிவரை தங்களுக்கு மகளாகவே மட்டும் இருந்தால் போதும் என்று கூறி அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

அதன்பின்னர் முரளிக்கு பெரிய வசதியான இடத்தில்   விமரிசையாக திருமணம் நடந்தது. காலங்கள் கடந்தன. முரளியின் பிள்ளைகள் இப்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்கள். தன் தாய் தந்தையின் மறைவுக்கு பிறகு சுகுணா தனிமரமாக உழைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்று வாழ்க்கை ஏதும் அமையவே இல்லை .தன் கற்பை சூறையாடி தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டானே என்று முரளியை நினைத்து வெதும்பும் சுகுணாவின் முகத்தில், எப்போதும் தான் எமாற்றப்பட்டுவிட்டோமே என்ற இயலாமை

குடிகொண்டிருக்கிறது. அவளை காணும் ஊர்மக்களின் முகத்தில், ''இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே'' என்னும் ஆதங்கம் தோன்றுகிறது.ஆனால் இன்றுவரை ஒரு ஏழை பெண்ணை ஏமாற்றி தன் காதல் நாடகத்தின் மூலம் அவளின் கற்பை களங்கப்படுத்தி ,ஏற்றுக்கொள்ள அவள் மன்றாடியபோதும், இரக்கமற்று , அவளை வஞ்சித்த ,குற்றஉணர்வின் சாயல் மட்டும் முரளியின்முகத்தில் இன்றளவும் தோன்றவே இல்லை. முரளி போன்றோர்கள் ஊரில் நிறைய தோன்ற ஆரம்பித்து விட்டார்கள் எனவே சுகுணா போன்றோர்கள் தான் இனி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் .

   ----சே. தரணிகுமார்

LinkWithin

Related Posts with Thumbnails