Tuesday 3 November 2009

கற்பு



 சுகுணா சுமாரான அழகு தான் என்றாலும் பார்க்க திருத்தமாக இருப்பாள். அவளின் அப்பாவும்  அம்மாவும்  விவசாய கூலிகள். சுகுணா அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் அவளுடைய தேவைகள் யாவும் சிரமமின்றி அவளுக்கு கிடைத்து வரலாயின. சுகுணா வளர்ந்து பெரியவள் ஆனதும், அவளுடைய எழிலும் , வனப்பும், ஊரிலுள்ள இளவட்டங்களை உறக்கம் தொலைக்க வைத்தது.சுகுணாவிற்கு இளைஞர்களின் காதல் பார்வை போதை தருவதாக இருந்தது. அந்த ஊரின்  பெரிய விவசாய குடும்பமான பெரியசாமியின் மகன் முரளிக்கும் சுகுணாவுக்கும் காதல் ஏற்பட்டது.



முரளிக்கு உண்மையிலேயே சுகுணாவின் மேல் காதல் இல்லை.அவனுக்கு அவளுடைய தேகம் மட்டுமே தேவையாய் இருந்தது. அவன் சுகுணாவை பயன்படுத்திக்கொள்வது ஒன்றே இலக்காக தன்னுடைய   நடவடிக்கைகளை  மிக சீராக திட்டமிட்டு நடத்திகொண்டிருந்தான் .ஆனால்  தனக்கு அவனுடன் ஏற்பட்ட காதலை மிக புனிதமாக எண்ணிய சுகுணாவோ தனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து விட்டதாக  சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.



முரளி எதிர்பார்த்ததை போல ஒரு சூழ்நிலை அமைந்தது. அவனை நம்பி அவனுடன் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்ற  சுகுணா திரும்பி வரும்போது தன்னுடைய கற்பை இழந்திருந்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு முரளியின் செய்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முதலில் இதை சாதாரணமாக எண்ணிய சுகுணா பின்னர் அவனுடைய முழுமையான புறக்கணிப்பை உணர தொடங்கினாள்.



முரளிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியதை அறிந்த சுகுணா ,மிகவும்   கலக்கமுற்று நேரே அவனுடைய வீட்டிற்கு சென்று அவனுடைய  பெற்றோர்களிடம் நடந்தவைகளை கூறி தன்னை முரளியுடன் சேர்த்து வைக்கும்படி மன்றாடினாள். முரளியின் தந்தை பெரியசாமிக்கு ஜாதி மற்றும் ,அந்தஸ்து பேதங்கள் அந்த ஏழை பெண்ணின் கோரிக்கையை ஏற்க பெரும் தடையாக இருந்தது. திரண்டிருந்த ஊராரின் முன்னிலையில் முரளி ''சுகுணாவுடன் சாதாரண நட்பாக மட்டுமே பேசியதாகவும், காதலிப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை என்றும், அவளுடன் உறவுகொண்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது'' என்று அவன் கூறியபோது ,அவன் சொல்வது பொய் என்பதை உணர்ந்திருந்தும் , பெரியசாமியின் பணம் மற்றும் அதிகார செல்வாக்குக்கு பயந்த ஊர் மக்கள் அந்த அபலை பெண்ணிற்க்காக யாரும் பரிந்து பேச முன் வரவில்லை. பணக்காரவீட்டு பிள்ளையை வீண்பழி சுமத்தி தான் நினைக்கும் வாழ்க்கையை அமைக்க நினைத்தவளாகவே அவளை முரளியின் குடும்பத்தார் வசை பாடினர்.அறிவியல் முன்னேற்றமற்ற அந்த காலத்தில் சுகுணாவிற்கு தன் கூற்றை நிரூபிக்க எந்த வசதியும் இல்லாமல் போனது. தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்த இடத்தை விட்டு நகரபோவதில்லை என்று உறுதி கூரியவளாய் சுகுணா முரளியின்  வீட்டின் முன்பு அமர்ந்து போராட துவங்கினாள்.  அடுத்த இரண்டு நாட்கள் அன்ன ஆகாரமின்றி அந்த பேதை பெண் நடத்திய சத்தியாகிரகம் அந்த கல்மனம் கொண்ட பணக்கார வர்கத்தினரின் முன்பு எடுபடாமல் போனது. ''முரளி என்னும் கயவன்  காமப்பசிக்காக காதலை ஆயுதமாக கொண்டு தன்னுடைய கற்பை சூறையாடி விட்டானே'' என்ற சுகுணாவின் மன குமுறலை பிரதிபலிக்கும் விதமாக வானமும் , இடி மின்னலுடன் தன் பேய்மழையை   கொட்டி தீர்க்க ஆரம்பித்தது.







அதுவரை நடந்த நிகழ்வுகளால் மிகவும் மனமுடைந்து மகளின் மேல்  கோபமாயிருந்த  சுகுணாவின் பெற்றோர்கள் , கொட்டும் மழையில் இறக்கமற்றவர்களின் வீட்டின் முன்பு பரிதவிக்கும் மகளின் நிலையை கண்டு மனம் இறங்கி , வாழ்க்கை போனால் போகிறது , இறுதிவரை தங்களுக்கு மகளாகவே மட்டும் இருந்தால் போதும் என்று கூறி அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.



அதன்பின்னர் முரளிக்கு பெரிய வசதியான இடத்தில்   விமரிசையாக திருமணம் நடந்தது. காலங்கள் கடந்தன. முரளியின் பிள்ளைகள் இப்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்கள். தன் தாய் தந்தையின் மறைவுக்கு பிறகு சுகுணா தனிமரமாக உழைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்று வாழ்க்கை ஏதும் அமையவே இல்லை .தன் கற்பை சூறையாடி தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டானே என்று முரளியை நினைத்து வெதும்பும் சுகுணாவின் முகத்தில், எப்போதும் தான் எமாற்றப்பட்டுவிட்டோமே என்ற இயலாமை

குடிகொண்டிருக்கிறது. அவளை காணும் ஊர்மக்களின் முகத்தில், ''இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே'' என்னும் ஆதங்கம் தோன்றுகிறது.ஆனால் இன்றுவரை ஒரு ஏழை பெண்ணை ஏமாற்றி தன் காதல் நாடகத்தின் மூலம் அவளின் கற்பை களங்கப்படுத்தி ,ஏற்றுக்கொள்ள அவள் மன்றாடியபோதும், இரக்கமற்று , அவளை வஞ்சித்த ,குற்றஉணர்வின் சாயல் மட்டும் முரளியின்முகத்தில் இன்றளவும் தோன்றவே இல்லை. முரளி போன்றோர்கள் ஊரில் நிறைய தோன்ற ஆரம்பித்து விட்டார்கள் எனவே சுகுணா போன்றோர்கள் தான் இனி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் .






   ----சே. தரணிகுமார்




3 comments:

புலவன் புலிகேசி said...

//'இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு
நேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே//

ஊர் எப்பவுமே இப்பிடித்தான் தல.......

Unknown said...

என்ன தரணி வெறும் சிறுகதை மட்டும் தானா.

நிலாமதி said...

அவசர முடிவு எடுக்காமல் வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற மன உறுதி பாராட்ட தக்கது. அவள் மென் மேலும் முனேரவேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும்.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails