Friday 6 November 2009

அரவணைப்பு











பிரபுவை  அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய  ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும்   மிகவும்  அர்த்தமுள்ளதாய்  அப்போது  தோன்றியது.  பிரபுவுக்கு  துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும்  இருந்தனர். பிரபுவுக்கும் அவன் மனைவி அமிர்தாவுக்கும் சந்தோசம் என்பது அந்த ஒரு மாத கால வாழ்க்கைதான். பதினோரு மாதங்கள் அந்த ஒரு மாதத்தின் நினைவுகளிலேயே கழிந்துவிடும். பிரபுவுக்கு அலுவலக ரீதியான அழுத்தம் அதிகம் . அமிர்தாவுக்கு குழந்தைகளையும்  , வீட்டையும் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அலைபேசி மூலமாகவே அவர்களது அந்தரங்கங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். செல்லமான சிணுங்கல்களும், சண்டைகளும், சமாதானங்களும் அலைபேசி மூலமாகவே அன்றாடம் அரங்கேறும்.

முப்பது நாட்கள் விடுப்பு பிரபுவுக்கு மிகவும் போதாமல் இருந்தது. ஊருக்கு வரும் முப்பது நாட்களில் ,முதல் பத்து நாட்கள் உறவினர்களின் நல விசாரிப்புகளிலேயே வீண் விரயம் ஆனது. இடையில் இருக்கும் பத்து நாட்களில்  மட்டுமே அவனுக்கென்று நேரம் செலவழிக்க  நேரம்   ஏதுவாகியது. அந்த பத்து நாட்களில் ஏதேனும் உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ திருமணம், விசேஷம் என்று வந்துவிட்டால் விடுப்பில் வந்தது மன நிறைவில்லாமல் போனது. கடைசி பத்து நாட்கள் வேலைக்கு திரும்பவேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் அந்த நாட்கள் அத்துணை ரசிக்கும்படியாக இருந்ததில்லை.

வெளிநாட்டிற்கு  குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில்  , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும்  குழந்தையின்  மனதை போல  கலக்கமாய்  இருக்கின்றது.  குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தங்களால் , தன் சுய உணர்வுகளை கூட வெளிக்காட்டமுடியாமல் ,மாய திரைகள் மூலம் அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு திரையிட்டு கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குடும்பத்தின் மீது பற்று கொண்ட எவருக்கும் வீட்டை விட்டு பிரிந்து செல்வது அத்துணை சுலபமான ஒன்றாக இருந்ததில்லை. கண்களின் கண்ணீரை அவர்கள் மிகுந்த சிரமங்களூடே மறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மனைவியின் கடைசி நேர தழுவல்களில் மறைந்திருக்கும் வலி மிகுந்த மன உணர்வை வார்த்தைகளில் அத்துணை சுலபமாய் வர்ணித்துவிட முடியாது. தந்தையை பிரியும் குழந்தைகளின் ஏக்கங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாய் தோன்றுவதை பார்க்கும் போது , எல்லாவற்றையும் உதறி விட்டு அவர்களுடனேயே இருந்து விட முடியாதா? என மனம் பேராவல் கொள்கிறது. ஊரிலிருந்து திரும்பி வரும்போது விமானத்தில் எடை குறைவாக அனுமதிப்பதின் காரணம் அவர்களின் மனம் மிகவும் கணமாக  இருப்பதாலா ? என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஊருக்கு கிளம்புகிற  முந்தைய நாளில் பிரபு வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை கண்ட தாய் கோழி ஒன்று விடுத்த அபய குரலை கேட்ட   கோழி குஞ்சுகள் தன் தாயின் இறகுகளின்  உள்ளே  வசதியாய் மறைந்து கொண்டன. பின்னர் அருகில் வந்த பருந்தை மூர்க்கமாக கொத்துவதர்க்காக   தாய் கோழி எத்தனித்தது. வீட்டினுள் இருந்து ஆட்கள் ஓடிவரவும் பருந்து அங்கிருந்து பறந்து விட்டது. பிரபுவின் வீட்டில் எப்போதும் நிறைய கோழிகள் இருக்கும். மின்சாரத்தால் குஞ்சுபொரிக்கப்பட்ட   கோழிகளையும் அவர்கள் வளர்த்து இருக்கிறார்கள்.  ஒருமுறை  வாங்கப்படும் குஞ்சுகளில் கால் பங்கு கூட வளர்ந்து பெரிய கோழிகள் ஆவது கடினம். அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் , தங்களை கொத்த வரும் பறவை போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும்  பக்குவம் அந்த குஞ்சுகளுக்கு தெரியாததும் இதற்க்கு  காரணமாய் இருந்தது. தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகள் எப்போதும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தன. இரை தேடி தருவது முதல்,ஆபத்து நேரங்களில் எல்லாவிதமாகவும் முயன்று தன் குஞ்சுகளை தாய் கோழி   காப்பாற்றுவதால் , அந்த குஞ்சுகள் கூடுமானவரை எல்லாமும் வளர்ந்து பெரிய கோழிகள் ஆயின. 

பருந்து சென்ற பிறகும்  நெடுநேரம் வரை இதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த பிரபுவை அவனுடைய  குழந்தைகளின் அன்பான அழைப்பு,  சிந்தனையில் இருந்து மீள வைத்து. இந்த அழகான குழந்தைகள் மின்சார  கோழி குஞ்சுகளை போல இல்லாமல் , தாய் கோழியுடன் வளரும் குஞ்சுகளை போல பாதுகாப்பாகவும், அன்புடனும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் மனோ வலிமையுடன்,  தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் வளர வேண்டும் என்று பிரபுவின் மனம் உறுதியாய் எண்ண தொடங்கியது.

பெரியவர்களிடம் ஆசி பெற்று ,மனைவியின் கரம் பற்றி ஆறுதல் சொல்லி ,குழந்தைகளை வாரி மார்போடு அணைத்து முத்தமிடும் பிரபுவை , இனி பதினோரு மதங்கள் கழித்தே காண முடியுமென்று ஒட்டுமொத்த உறவுகளும் எண்ணிக்கொண்டு அவனுக்கு மௌனமாய் விடை கொடுத்தது .  ஆனால் துபாய் சென்று,  உடனடியாக விசாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பி வர இருக்கும் பிரபுவுக்கு இந்த எண்ணம் வர காரணமாய் இருந்த அவர்கள் வீட்டு தாய் கோழி , இது பற்றி ஏதும்  அறியாது , தோட்டத்தின் மூலையில் தன் குஞ்சுகளுக்கு இரையை  சீய்த்து கொடுத்து கொண்டிருந்தது. 










--சே.தரணிகுமார்  

4 comments:

தேவன் மாயம் said...

வெளிநாட்டிற்கு குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில் , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் குழந்தையின் மனதை போல கலக்கமாய் இருக்கின்றது. ///

நல்லாச் சொல்லியிருக்கீங்க!!

யாழிசை said...

நன்றி.திரு.தேவன் மாயம்

Anonymous said...

its 200% true my frnd

கலையரசன் said...

கோழி வாழ்க!
எனகொரு கோழி வேண்டுமடா...
நானும் துபாயில் இருந்து திரும்பி வர...

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails