Friday 13 November 2009

தியாகம்

  








சூரியன் மலை முகடுகளை முத்தமிடும் ரம்மியமான மாலை பொழுது ஒன்றில் சரவணன் தனது காதலை யாமினியிடம் வெளிப்படுத்தினான். சரவணனும் யாமினியும் சிறு வயதில் ஒன்றாக பயின்றவர்கள். பின்னர் சரவணன் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டாலும் அவன் யாமினியுடனான தனது நட்பு சிதையாமல் கவனமுடன் பார்த்துக்கொண்டான். முதன்முதலாய் யாமினியை பார்த்த நிமிடம் முதல் அவனுள் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு அவள் மீது ஏற்பட்டிருந்தது. யாமினியின் தந்தை புத்தகப்பிரியர் என்பதால் அதையே காரணமாக கொண்டு , தன வீட்டிற்கு வரும் வார, மாத பத்திரிக்கைகளை எல்லாம் அவருக்கு தருவதை வழக்கமாக வைத்து,அதன்மூலம் யாமினியுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி கொண்டான்.


சரவணன் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், தனது காதலை யாமினியிடம் முதன் முதலாய் வெளிப்படுத்தினான். அந்த காதலை யாமினியும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவுடன் சரவணன் சிறகுகள் முளைத்து வானில் பறப்பதை போன்று அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். காதல் உணர்வு அவன் மனமெங்கும் நிறைந்து இருந்ததால் யாமினியுடன் இருக்கும் தருணங்களில் அவனுக்கு இந்த உலகமே வசப்பட்டு விட்டதை போன்று மட்டில்லாத மகிழ்ச்சியில் திளைத்தான். அவர்கள் காதலை அவர்களன்றி வேறொருவரும் அறியா வண்ணம் இருவரும் மிக கவனமுடன் பார்த்துக்கொண்டார்கள்.பலநேரம் கண்களாலேயே அவர்களின் மனங்களை பரிமாறிக்கொண்டார்கள். காதலில் கண்களால் பேச தொடங்கி விட்டால் வார்த்தைகள் செயலற்றதாகி விடுகிறது. ஆழமான உணர்வுகளை கூட கண்கள் மிக எளிதாக பிரியமானவர்களுக்கு எடுத்துச்சொல்லி விடுகிறது.

சரவணன் கல்லூரியில் மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த   சமயத்தில் சற்றும் எதிர்பாராவிதமாக யாமினியின் தாய் இறந்து போனபோது, யாமினியின் நிலையை கண்டு சரவணன் மிகவும் பரிதவித்து போனான். அவளின் தாயுடைய மரணம் அவளின் வாழ்வையே திசை மாற்ற காரணமாகி விட்டது. நடந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து யாமினி மீளும்முன்பே,அவளுடைய தந்தை மிகவும் உடல்நிலை பாதிப்புள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது யாமினி அனலிடை புழுவாக துடிதுடித்து போனாள். அந்த தருணத்தில் உறவுகளால் சூழப்பட்டிருந்த யாமினியிடம் ஆறுதல் சொல்லி தேற்றவும் சரவணனால் இயலாமல் போனது. மருத்துவர்கள் யாமினியின் தந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

நெடுநாட்களாக யாமினியை தன்னுடைய உதவாக்கரை தம்பிக்கு மணமுடிக்க ஆவல் கொண்டிருந்த,அவளுடையஅக்கா மிருதுளாவின் கணவன், இதையே சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு , தன் தம்பிக்கும் , யாமினிக்குமான திருமணத்திற்கு நிர்பந்தபடுத்த தொடங்கினான். ஒருவேளை இது நடைபெறாவிட்டால் மிருதுளாவை நிரந்தரமாக விலக்கி வைத்து விடுவேன் என்று அவன் விடுத்த மிரட்டலால் யாமினியின் உறவுகள் அரண்டு போயின. இந்த பேச்சுக்கள் யாமினியின் தந்தையின் காதுகளை எட்டியபோது , அவருக்கு தன் உடல் நிலை இருக்கும் நிலையில், மகளின் திருமணம் என்ற கேள்விக்குறிக்கு விடை கிடைத்த சந்தோஷத்தில், தனது செல்ல மகளின் ஆழமான காதலை சற்றும் அறியாதவராதலால் உடனே இதற்க்கு சம்மதித்து உறுதி கூறிவிட்டார். அடுத்த வாரமே திருமணம் நடத்துவது என்று முடிவாகி போனது.


 சரவணனை தனிமையில் சந்தித்து நடந்த  நிகழ்வுகளை கூறி கண்ணீர் சிந்திய யாமினியை கண்டு சரவணன் செய்வதறியாமல் கலங்கி நின்றான். அவன் மனமெங்கும் யாமினியே நிறைந்திருந்ததால் , அவள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவது என்ற உறுதியோடு இருந்தான். யாமினி சரவணனை  காட்டிலும் மிக தெளிவானவள். எல்லா சூழலிலும் யாமினி எடுக்கும் முடிவுகளே இதுவரை சரியாக அமைந்திருந்தது. மறுநாள் அதே இடத்தில் தன்னை சந்திக்கும்படி சொல்லிவிட்டு யாமினி சென்று விட்டாள்.
 
அன்றைய இரவு சரவணனுக்கு மிகவும் நீண்டதாக  தோன்றி  அவனை மிகவும் துன்புறுத்தியது. சுவர்க்கோழிகளின் சாதாரணமான  சத்தம் கூட அவனுக்கு   மிக பூதாகரமாக கேட்டது. அவனுள் கவிதை பொங்க வைக்கும் நிலவின் ஒளி அன்றைய தினம் அவனுக்கு வெம்மையாய் சுட்டது. யாமினியுடன் நட்பும் காதலுமாய் நகர்ந்த நாட்களின் நினைவுகள் அவன் மனத்திரையில் காட்சிகளாய் விரிந்து கொண்டே இருந்தது. காலையில் அம்மாவின் குரலை கேட்ட பிறகே தான் இரவு முழுதும் உறங்காமலேயே இருந்து விட்டதை சரவணன் உணர்ந்தான்.


 
யாமினி வருவதற்கு நெடுநேரம் முன்பே அவள் சொன்ன இடத்தில் அவளுக்காக  காத்திருந்த  சரவணனின் மனதில் குழப்பங்களே அதிகம் அணிவகுத்திருந்தன. ஆனால் யாமினியின் சொல்லுக்கு  முழுமையாக  கட்டுப்படுவது என்பதில் மட்டும் அவன்  தெளிவாக இருந்தான். யாமினியற்ற வாழ்க்கை  என்பது அவனுக்கு இருள் சூழ்ந்ததாகவே  மனதிற்கு பயம் தந்தது. எப்போதும்  புன்னகையுடன் சரவணனை  எதிர்கொள்ளும்  யாமினியின்  முகம் அன்று மிகவும் இறுக்கமாக இருந்தது. இரவு முழுமையும் அவளும் உறங்காமலேயே இருந்திருப்பாள் என்பதை அவள் விழிகள் சொல்லின. நெடுநேரம் வரை  பேச்சற்றவர்களாக  ஒருவரை ஒருவர் இயலாமையுடன்   பார்த்துக்கொண்டிருந்தனர்.   உணர்வுகளின் பெருக்கால் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
 
யாமினி தான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நம்புகிறாயா? என்று சரவணனை கேட்ட போது அவன் அதை மவுனமாய்   ஆமோதித்தான் .யாமினி தற்போதைய சூழலில் அவர்கள் பிரிவது ஒன்றே அனைவருக்கும் நன்மை பயக்கும்  என்பதால்  திருமணத்திற்கு இசைவு தெரிவிக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தாள்.  ஒருவேளை இதை தவிர்த்து சரவணனை கரம் பிடித்தால், அவர்களால் அந்த ஊரில் உறவுகளை எதிர்த்து வாழ இயலாமல் போகும், அந்த நிலையில் சரவணனது  பொறியாளர்  ஆகும்   கனவு நிச்சயம் தகர்ந்து போகும்.எங்கோ ஒரு ஊரில் எதோ ஒரு வேலை செய்து கொண்டு வாழ்வை நிலை நிறுத்தி கொள்ள போரடவேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இவர்கள் இப்படி முடிவு எடுப்பார்களேயானால் ,மருத்துவமனையில் இருக்கும் யாமினின் தந்தைக்கு நிச்சயம் ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும். அவளுடைய அக்கா மிருதுளா, கணவனால் கை விடப்பட்டு வீட்டிற்கு வந்து விடும் சூழல் வரும் .பல்வேறு தரப்பிலும் குடும்பத்தினரது வெறுப்பையும், சாபத்தையும் பெற்று தொடங்கும், புது வாழ்வு எந்த வகையிலும் மன நிறைவானதாக இருக்காது என்பதை சரவணனுக்கு யாமினி முழுமையாய் உணர்த்தினாள். இதை எல்லாவற்றையும் விட சரவணன் வாழ்வில் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்ற எண்ணமே யாமினிக்கு மேலோங்கி இருந்ததால் தன்னுடைய ஆசைகளை பலி கொடுக்கும் முடிவுக்கு அவள் வந்து விட்டிருந்தாள். 
 
அவளின் மன உணர்வுகளை  முழுமையாய் உணர்ந்த சரவணனுக்கு அவளின் முடிவை எதிர்த்து பேச நா எழவில்லை.அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆதங்கமே அவனின் மனதை ஆட்கொண்டிருந்தது.  பெண்கள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களின் மன உணர்வுகளுக்கு சமாதி கட்டிவிட்டு , குடும்பதினர்களுக்காக சிலுவை சுமக்க தயாராகி விடுகிறார்கள் . இந்த பரந்த உலகை பெண்களின் அர்பணிப்பும் , தியாகமுமே தாங்கி  நிற்கிறது.  அவர்கள் எளிதாக மற்றவர்களுக்காக விட்டு கொடுக்க முன்வருகிறார்கள் . ஆயினும் பெண்மையின் மேன்மையை சமுதாயம் இன்றளவும் அரைகுறையாகவே புரிந்து கொண்டிருக்கிறது.



விரைவாக யாமினியின் திருமணம் நடந்து முடிந்தது. அவள் மனமெங்கும் உணர்வுகளின்   சூறாவளி  வீசிக்கொண்டிருந்ததால் அவளின் முகம் புன்னகையற்று போய் விட்டது. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு படிக்காத மாப்பிள்ளையை கல்யாணம் செய்து , அக்காவின் வாழ்வையும்  காப்பாற்றி  விட்டதாக உறவுகள் அவளை கொண்டாடின.சரவணனுக்கும், தந்தைக்கும், அக்காவிற்கும் ஒருசேர  தன்னுடைய இந்த முடிவால் நன்மை ஏற்பட்டதால் யாமினி சிறிதளவு ஆறுதல் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.பல வருடங்களுக்கு பிறகு சரவணன் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருக்கிறான். திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்த சரவணனை யாமினியின் சொல் தான் இறுதியில் பணிய வைத்தது.  இன்று அவனுக்கு அன்பான மனைவியும் அழகான குழந்தைகளுமாய் நல்ல சூழலில் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யாமினிக்கு தான் வாழ்க்கை அத்துணை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவளின் கணவனின் சரியற்ற போக்கால் அவள் மிகுந்த சிரமங்களிநூடே தனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறாள் . சரவணனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருப்பதே அவளுக்கு ஒரே மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. தனக்கு நல்ல வாழ்வு அமைய காரனாக இருந்த யாமினியின் தற்போதைய நிலை தான் பல நேரங்கள் சரவணனது சந்தோஷங்களை ஊனமாக்கி விடுகிறது.
.

வாழ்க்கை எத்துணை புதிரானது? அது பல்வேறு கால கட்டங்களில் மனதிற்கு பிடித்தவர்களை சேர்ப்பதும், பிரிப்பதுமாய் தன்னுடைய கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டே இருக்கிறது. வெகு சிலருக்கு மட்டுமே அது அவர்களின் வசப்பட்டதாய் அமைந்து விடுகிறது.  எண்ணிலடங்காத பேர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வாழ்நாள் முழுமையும் அவர்களை வருத்தம் கொள்ள வைத்து விடுகிறது.








--சே.தரணிகுமார் 

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்குங்க

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails