கடந்த 19.10.2010 அன்று சென்னை HDFC எழும்பூர் வங்கி கிளை ஒன்றில் நண்பர் ஒருவர் பணம் எடுத்ததில் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கலந்திருப்பது அறியாத அவர் அதனை வேறு ஒரு பண பரிவர்தனைக்காக இன்று 21.10.2010 காட்பாடியில் உள்ள வங்கி கிளை ஒன்றில் செலுத்த முற்பட்டபோது அது கள்ள நோட்டு என்பதை வங்கியின் காசாளர் தெரிவித்ததும், நண்பருக்கு பெரிய அதிர்சியாய் இருந்திருக்கிறது.வங்கியின் மேலாளர் அதனை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணாமல் அவருடைய தினப்படி அலுவல்களில் அதுவும் ஒன்று என்பதை போல நடந்து கொண்டது நண்பரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.மிகவும் சர்வ சாதாரணமாக அவரின் முன்பு அந்த ரூபாயை கிழித்து குப்பையில் இட்டு தன்னுடைய பொறுப்பை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் அந்த அதிகாரி.
தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையிலேயே மிக சாதாரணமாக HDFC வங்கியின் மூலமாக ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கிடைக்கப்பெற்றது, அதிர்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அனைத்து வங்கிகளிலும் கள்ள நோட்டுக்களை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகள் மிக மிக இன்றியமையாதது.பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மக்கள் அதீதமாய் நம்புவது வங்கிகளை மட்டும் தான்.அந்த வங்கிகளிலேயே இத்தகைய குளறுபடிகள் நடக்க ஆரம்பித்தால் மக்களின் நிலை திண்டாட்டமாய் போய்விடும்.தயவுசெய்து வங்கிகள் இதனை கட்டாயம் மனதில் கொள்ளவேண்டும்.
நண்பரிடம் பணம் இருந்ததினால் அவரால் சமாளிக்க முடிந்தது.இதுவே பணம் இல்லாத ஒருவரிடமோ அல்லது அவசர தேவை இருக்கும் ஒருவரிடமோ இத்தகைய நோட்டு சென்று இருந்திருந்தால் அவர்களுடைய நிலை எத்தகைய பரிதாபகரமானதாக இருந்திருக்கும்?நினைக்கவே மனதிற்கு வேதனையாக இருக்கிறது.அன்றைய தினம் மட்டும் அந்த வங்கியில் நான்கு நோட்டுக்கள் இப்படியாக வந்து இருக்கிறது.இப்படி ஒரு வங்கி கிளையிலேயே இப்படி என்றால் நினைக்கவே பதற்றமாக இருக்கிறது.
அப்பாவி பொது மக்களை பாதிக்கும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் வங்கிகளும், அரசும் கட்டாயம் உரிய நடவடிக்கைகள் மூலம் இதனை உடனடியாக தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
சே.தரணிகுமார்