Thursday, 21 October 2010

நாட்டில் என்ன நடக்கிறது ?



கடந்த 19.10.2010 அன்று சென்னை HDFC எழும்பூர் வங்கி கிளை ஒன்றில் நண்பர் ஒருவர் பணம் எடுத்ததில் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கலந்திருப்பது அறியாத அவர் அதனை வேறு ஒரு பண பரிவர்தனைக்காக  இன்று 21.10.2010 காட்பாடியில் உள்ள வங்கி கிளை ஒன்றில் செலுத்த முற்பட்டபோது  அது கள்ள நோட்டு என்பதை வங்கியின் காசாளர் தெரிவித்ததும், நண்பருக்கு பெரிய அதிர்சியாய் இருந்திருக்கிறது.வங்கியின் மேலாளர் அதனை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணாமல் அவருடைய தினப்படி அலுவல்களில் அதுவும் ஒன்று என்பதை போல நடந்து கொண்டது நண்பரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.மிகவும் சர்வ சாதாரணமாக அவரின் முன்பு அந்த ரூபாயை கிழித்து குப்பையில் இட்டு தன்னுடைய பொறுப்பை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் அந்த அதிகாரி.
தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையிலேயே மிக சாதாரணமாக HDFC வங்கியின் மூலமாக ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கிடைக்கப்பெற்றது, அதிர்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அனைத்து வங்கிகளிலும்  கள்ள நோட்டுக்களை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகள் மிக மிக இன்றியமையாதது.பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மக்கள் அதீதமாய் நம்புவது வங்கிகளை  மட்டும் தான்.அந்த வங்கிகளிலேயே இத்தகைய குளறுபடிகள் நடக்க ஆரம்பித்தால் மக்களின் நிலை திண்டாட்டமாய் போய்விடும்.தயவுசெய்து வங்கிகள் இதனை கட்டாயம் மனதில் கொள்ளவேண்டும்.
நண்பரிடம் பணம் இருந்ததினால் அவரால் சமாளிக்க முடிந்தது.இதுவே பணம் இல்லாத ஒருவரிடமோ அல்லது அவசர தேவை இருக்கும் ஒருவரிடமோ இத்தகைய நோட்டு  சென்று இருந்திருந்தால் அவர்களுடைய நிலை எத்தகைய பரிதாபகரமானதாக இருந்திருக்கும்?நினைக்கவே மனதிற்கு வேதனையாக இருக்கிறது.அன்றைய தினம் மட்டும் அந்த வங்கியில் நான்கு நோட்டுக்கள் இப்படியாக வந்து இருக்கிறது.இப்படி ஒரு வங்கி கிளையிலேயே இப்படி என்றால் நினைக்கவே பதற்றமாக இருக்கிறது.
அப்பாவி பொது மக்களை பாதிக்கும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் வங்கிகளும், அரசும் கட்டாயம் உரிய நடவடிக்கைகள் மூலம் இதனை உடனடியாக தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

சே.தரணிகுமார்



Thursday, 1 July 2010

  







கலைஞரே உங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏதாவது பாராட்டு விழாக்களில் கலந்துகொண்டு மற்றவர்கள் உங்களை முகத்துக்கு நேராக புகழ்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் போபியா இருக்கிறது.உங்கள் ஆவலுக்கு தீனியாய் உங்கள் கட்சியின் மண்டல மாநாடுகள் ,நன்றி அறிவிப்பு மாநாடுகள், கலைத்துறை விழாக்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம், ஆனால் இம்முறை உங்கள் போதைக்கு ஊறுகாயாக தமிழை நீங்கள் பயன்படுத்திக்கொண்டது உண்மையில் முற்றிலும் தவறானது.


செம்மொழி மாநாடு ……… ஒற்றை வரியில் சொல்வதானால் புளியாதரைக்குள் முட்டையை வைத்து அதை பிரியாணி என்று விற்ற கதை தான் நடந்தேறியுள்ளது.கவியரங்கிலும்,கருத்தரங்கிலும் பேசிய பலரும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களை பாராட்டி மகிழ்விக்க வேண்டுமே என்று படாத பாடுபட்டார்கள்.நீங்கள் காலையில் எழுவது, பல் துலக்குவது, முரசொலி அலுவலகம் போவது முதல் உங்களின் முதுகுவலி வரையிலான செய்திகளே அந்த கவிஞர்களின் கருத்தரங்க பேச்சுக்களின் கருப்பொருளாகி போனது.உச்சகட்டமாக உங்கள் வாயில் ஊறுவது உமிழ் நீரல்ல அது தமிழ் நீர் என்று உளறும் அளவுக்கு கவியரங்கம் தரம் தாழ்ந்து போனது.உங்களை புகழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தால் அவர்களால் தமிழை அந்த அளவுக்கு கண்டு கொள்ள முடியாமல் போய்விட்டது.தன்னைப்பற்றி எதோ பேசப்போகிறார்கள் என்று ஆவலாய் வந்த தமிழன்னை கட்டாயம் கண்ணீர் சிந்தி விட்டு மாநாட்டை புறக்கணித்திருப்பாள்.

மாநாட்டின் போக்கு இப்படித்தான் போகும் என்பதை கணிக்க இயலாத அயல்நாட்டு பெண்மணி ஒருவர், இந்த மாநாடு தமிழன்னைக்கு அணிவிக்கப்பட்ட ஒரு புதிய ஆபரணம் என்று அவசரத்தில் புகழ்ந்து விட்டார். ஆனால் பின்னர் தான் உணர முடிந்தது, அது அழகிய ஆபரணம் அன்று அது தமிழன்னைக்கு உறுத்தலும், வேதனையும் தரும் தேவையற்ற ஆபரணம் என்று. இல. கணேசன் சற்று மாற்றான கருத்தை வெளியிட்டு பேசியது உங்களை சங்கடப்படுத்தியிருக்கும் ஆனால் அவர் பேசியதில் உண்மை இருந்தது.எவ்வாறு சுதந்திரம் பெற்று தந்ததை காங்கிரஸ் கட்சி மட்டுமே உரிமை கொண்டாட முடியாதோ, அதை போல தமிழை செம்மொழியாக்கியதின் முழு உரிமையை கலைஞர் மட்டுமே கொண்டாடமுடியாது, பருதிமாற்கலைஞர் முதல் எண்ணற்றோரின் முயற்சிகள் அதில் அடங்கியிருக்கிறது, ஆனால் இந்த துதிபாடிகள் ஏனோ கலைஞரை மட்டுமே அதற்கு காரணம் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

கலைஞரே உங்களுக்கு என்ன எல்லா பேரப்பிள்ளைகளும் ரெட் ஜெயண்ட் மூவீஸ், நைன் க்ளொவ் மூவீஸ்,சன் பிக்சர்ஸ், என்று அழகான ஆங்கிலத்தலைப்புகளில் பட நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள் ( ஊருக்கு மட்டுமே உபதேசம் …..வீட்டில் எல்லாம் ஆங்கில தலைப்பு தான் ) , அவர்களிடம் சொல்லி பிரம்மாணமான செட் போட்டு பெரிய படமாக இதை எடுத்திருக்கலாம், வீணாக அரசு பணத்தை இதற்கு விரயம் செய்வானேன்?

கலைஞரே நீங்கள் ஒன்றும் ராஜராஜ சோழன் இல்லை,தற்போது நடப்பது மன்னர் ஆட்சியும் இல்லை. உங்கள் வெற்றியின் வீர பராக்கிரமத்தை பறை சாற்றுவதற்கு நீங்கள் படும் பாடு புரிகிறது.இதே கூட்டத்தை தமிழினம் கடந்த வருடம் இலங்கையில் அழிந்த போது கூட்டி ,அதை தடுக்க போராடியிருந்தால்,உண்மையிலேயே உங்களை ஒட்டுமொத்த தமிழினமும் தங்கள் இனத்தின் தலைவராக தலையில் வைத்து கொண்டாடி இருந்திருக்கும்.இனத்தின் துன்பத்தை கலைய தவறிய நீங்கள் எந்த வகையில் அதன் தலைவராக உங்களை நீங்களே முடி சூட்டிக்கொள்ள முடியும்?

நடந்தது செம்மொழி மாநாடு அல்ல கலைஞர் புகழ் மாநாடு.
வாழ்க தமிழ்…….வாழ்க கலைஞர்

-------------சே.தரணிகுமார்

 

Wednesday, 19 May 2010

பேனா நட்பு














பேனா நட்பு என்ற ஒன்றை பத்தாம் வகுப்பை கடக்கும் போது தெரிந்து கொண்டதும் , அதன் மீது ஒரு அதீத ஈர்ப்பு உண்டாகி போனது.முதல் பேனா நட்புக்கென்று தெரிந்தெடுத்த மூன்று விலாசங்களுக்கும் தபால் கார்டு எழுதி அனுப்பியதை உள்ளூர் நண்பர்களிடத்தில் மிக பெருமையாக பறை சாற்றிக்கொண்டிருந்த மூன்றாம் நாளுக்குள்ளாக கடிதம் அனுப்பிய இரண்டு நபர்களிடமிருந்து பதில் கடிதம் வரப்பெற்றதும் அளவில்லாத மகிழ்ச்சியாகி போனது.


வந்திருந்த இரு பதில் கடிதங்களில் ஒன்றை ஒரு கல்லூரி மாணவர் எழுதி இருந்தார்.அந்த கடிதம் முழுமையும் தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பட்டியலிட்டு , அதை படிப்பவர்களை கண் கலங்கும்படியாக செய்திருந்தார்.அடுத்த கடிதம் ஒரு கல்லூரி ஆசிரியரிடம் இருந்து வந்திருப்பதை முகவரியில் தெரிந்து கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அந்த கடிதம் மிகவும் நேர்த்தியாய்,கவிதை நயத்துடன்,மிக அழகாக எழுதப்பட்டிருந்தது, அவரை பற்றின சுயவிவர குறிப்புகள் எல்லாம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.பதினைந்து வயது சிறுவனாகிய எனக்கு என்னை விட வயது முதிர்ந்த ,ஆசிரியர் பணியில் உள்ள ஒருவர் என் கடிதத்திற்கு பதிலாக நீண்ட விளக்கமான கடிதம் எழுதி இருந்தது,பேனா நட்பின் மேல் எனக்கிருந்த ஆவலை இன்னும் அதிகரிக்க செய்தது.











நான் முதலில் வெறும் தபால் அட்டையில் நான் தங்களுடைய பேனா நட்பை விரும்புகிறேன் என்று மட்டும் எழுதி என்னுடைய முகவரியை எழுதி அனுப்பி இருந்ததால் எனக்கு கடிதம் எழுதிய இருவருக்கும் என்னை பற்றிய முழு விவரங்களுடன் நீண்டதொரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். நான்கு நாட்களுக்கு பிறகு கல்லூரி ஆசிரியரிடமிருந்து மட்டும் ஒரு பதில் கடிதம் கிடைக்கப்பெற்றது.மிக்க ஆவலாய் கடிதத்தை பிரித்து படிக்கதொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதலில் நான் அனுப்பிய தபால் அட்டையில் தரணி என்னும் என்னுடைய பெயரை ஆண்பால் பெண்பால் ஏதும் குறிப்பிடாமல் நான் அனுப்பியதால் என்னை பெண்பாலாக எண்ணி பதில் எழுதியிருந்த கல்லூரி ஆசிரியர், இரண்டாவது கடிதத்தில் என்னை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு ,தன்னுடைய வர்ணனைகள் வீணாய் போன ஆத்திரத்தில், மிகவும் சாடியிருந்தார். அடுத்த நண்பரிடமிருந்து மீண்டும் பதில் ஏதும் வரவே இல்லை.

பிறகு எப்போதாவது ஏதாவது பத்திரிக்கைகளில் பேனா நட்பிற்கான முகவரிகள் பார்க்க நேரும்போது எல்லாம் கல்லூரி ஆசிரியரின் வசவுகள் கட்டாயம் நினைவில் வந்து கொண்டே இருந்ததால் மீண்டும் பேனா நட்பிற்கென யாருக்கும் கடிதம் எழுத இயலாமலேயே போய் விட்டது.



-------------சே.தரணிகுமார்

.

Wednesday, 27 January 2010

அழகான புருஷன்















சுப்ரஜாவின் திருமணம் காலையில் முடிந்து அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.ஒரு அழகான பெண் தன்னுடைய வாழ்க்கை துணையாய் அமைந்த சந்தோஷம் விஜயராஜின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு , ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கும்போதும் அவனை புன்னகை செய்ய சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் நிரந்தர புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது .சுப்ரஜாவின் முகம் சற்றே அவள் மனநிறைவின்றி இருப்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.அதுவும் சற்று முன்பு கணவனுடன் வந்து வாழ்த்து சொல்லிய அவள் தோழி கீதா வந்த பிறகு அவள் முகவாட்டம் கொஞ்சம் கூடித்தான் போனது.விஜயராஜ் இதை கவனித்து விசாரித்தபோது லேசாக தலைவலிப்பதாக கூறி விட்டாள். ஆனால் உண்மையில் காரணம் அதுவன்று.




கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக தான் அவளின் தோழி கீதாவின் காதல் திருமணம் நடந்து முடிந்திருந்தது.கீதாவின் கணவன் மிகவும் அழகானவாக இருந்ததில் கீதாவின் முகத்தில் கர்வம் தாண்டவமாடிக்கொண்டிருந்தது. சுப்ரஜாவின் கணவன் விஜயராஜ் சுமாராக தன் இருப்பான், இது பெரியவர்களாக பேசி முடித்த திருமணம்.விஜயராஜின் குணத்தையும், தன்மையையும், அவன் குடும்பத்தையும், பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, அவனுக்கே சுப்ரஜாவை பெற்றோர்கள் பேசி முடித்தபோது அவளாள் அவளின் எதிர்ப்பை தெரிவிக்க இயலாமல் போய்விட்டது.சுப்ரஜா சிறு பிராயம் முதலே அழகை அதிகம் ஆராதிப்பவளாக இருந்திருந்தாள்.அவள் தன் தோழியருடன் பேசி செலவிட்ட நேரத்தை விட கண்ணாடி முன்பு அமர்திருந்த நேரமே கூடுதலானது.அத்தகையவளுக்கு ஒரு சுமாரானவன் , கணவனாக வாய்த்த போது,அவளால் அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள இயலாமல் மனதால் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியும், சுப்ரஜாவால் இயல்பு நிலைக்கு வர இயலவே இல்லை.விஜயராஜும் திடீரென்று பெற்றோர்களை பிரிந்து நீண்ட தூரத்தில் இருப்பதால் சுப்ரஜா எப்போதும் கவலையுடன் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்ததினால், அவன் அவளை அதன் நிமித்தம் அதிகம் விசாரிக்கவில்லை.சுப்ரஜாவின் மனநிலையின் காரணமாக அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையும் அத்துணை சோபிக்கவில்லை.சரி அவள் பெற்றோர்களுடன் சிறிது நாட்கள் இருந்து விட்டு வரட்டும் என்று விஜயராஜ் அவளை ஊருக்கு அனுப்பி வைத்தான். ஊருக்கு வந்த அன்று மாலை தன் தோழி கீதாவை வழியில் பார்த்த சுப்ரஜாவிற்கு, கீதா திருமண முறிவுக்காக காத்திருப்பது அறிந்து அதிற்சியாய் போனது.அழகாய் இருக்கிறானே என்று அவனை காதலிக்க தொடங்கிய கீதா அவனின் பின்னனி பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை.திருமணம் முடிந்த பிறகே அவன் வேறொரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவது தெரிய வந்தது.அதை பற்றி அவள் கேட்க ஆரம்பித்ததும்,குடும்பத்தில் சண்டைகள் வெடித்து கீதாவிற்கு தினமும் அடியும் உதைகளுமே மிஞ்சின.இனியும் அவனோடு வாழவே இயலாது என்று விவாகரத்திற்கு கீதா மனு செய்திருந்தாள். கீதா சுப்ரஜாவின் குடும்ப வாழ்க்கையை பற்றி விசாரித்தபோது தான் , சுப்ரஜாவிற்கு, அவள் அழகு என்னும் மாயையின் பொருட்டு, எத்துணை அன்பில்லாதவளாக, கணவனிடம் நெருக்கம் காட்டாமல், நடந்து கொண்டிருந்ததின் அவலம் புரியதொடங்கியது.தான் முரட்டு தனமாக நடந்து கொண்ட போதும் ஒருபோதும் முகம் சுளிக்காது எப்போதும் தன்னை வாஞ்சையுடன் நடத்திய அவள் கணவனை முதன் முறையாக அவளுக்கு மிக்க அழகானவனாய் உணர்ந்தாள்.

பத்து நாட்கள் இருப்பதாக சொன்ன மகள் மறுநாள் காலையிலேயே பெட்டியுடன் கிளம்புவதின் காரணத்தை சுப்ரஜாவின் பெற்றோர்களால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனால் இத்துணை நாட்கள் அழகை ஆராதித்துக்கொண்டிருந்த சுப்ரஜா , இனி அன்பை மட்டுமே ஆராதிப்பவளாக மாறி இருந்தாள்.விஜியராஜை எப்படி எல்லாம் கொஞ்சலாம் என்று யோசித்தவளாக கணவனின் ஊரை நோக்கி பயனித்துக்கொண்டிருக்கிறாள்.

-----சே.தரணிகுமார்

Monday, 18 January 2010

நேர்மை












பல்லவி பருவம் எய்தும் வயதுடைய பருவ பெண்.எப்போதும் தேனீயை போல மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும் பல்லவிக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.பல்லவியின் தாய் தந்தை இருவரும் விவசாய கூலிகளாக இருந்தனர்.பல்லவி பள்ளிக்கு செல்லும் நாட்கள் தவிர்த்து,ஏனைய விடுமுறை நாட்களில் பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்றுவருவாள். வேர்கடலை அறுவடை காலங்களில் அவளுடைய உழைப்பின் நிமித்தமாக சேரும் கடலை அந்த குடும்பத்தின் வருடாந்திர தேவைக்கு போதுமானதாக இருந்தது.அப்படியானதொரு வேர்கடலை அறுவடை காலம் ஒன்று முடிந்த தருவாயில் கிடைத்த வேர்கடலையை வெயிலில் உலர்த்தும் வேலையில் பல்லவியின் குடும்பம் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.


                                          






அவர்கள் இருக்கும் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் பிள்ளைகள் மூவரையும் காவலுக்கு வைத்துவிட்டு பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.அந்த ஊரில் எரியும் தீப்பந்தத்தை காட்டி குரங்குகளை விரட்டுவது வாடிக்கையாக இருந்ததினால் பல்லவியிடமும் ஒரு தீப்பந்தத்தை தயார் செய்து அவள் பெற்றோர் தந்து விட்டிருந்தனர். பின்மதியப்பொழுதில் சட்டென்று ஒரு பெரிய குரங்கு கூட்டம் உலர்ந்து கொண்டிருந்த வேர்கடலையை ஆக்கிரமித்து நாசம் செய்ய தொடங்கியது.பல்லவியும் அவள் தம்பியும் , தங்கையும் மூலைக்கொருவராய் ஓடி ஓடி விரட்டியும் குரங்குகள் சட்டை செய்யாததால் தீப்பந்தத்தை பற்ற வைத்து குரங்குகளை நோக்கி காட்டி விரட்டியதும் குரங்குகள் ஓட தொடங்கின.அப்போது பல்லவியின் தம்பி அவளிடமிருந்த தீப்பந்தத்தை வாங்கி கொண்டு குரங்குகளை நோக்கி மேலும் ஓட தொடங்கினான்.எதிர்பாராவிதமாக அவன் கல் இடறி விழுந்ததில் அவன் கையில் இருந்த தீப்பந்தம் தவறி அருகில் இருந்த வைக்கோல் போர் மீது விழுந்ததும் அருகில் இருந்தவர்கள் வந்து அணைப்பதற்குள் முழு வைக்கோலும் சடசடவென எரிந்து சாம்பலாகி போனது.


விவரமறிந்து அங்கு வந்த பல்லவியின் பெற்றோர் செய்வதறியாது கலங்கி பரிதவித்து போயினர். காரணம் அந்த வைக்கோல் போர் மிகவும் முரட்டுதனமான பார்வதி அம்மாளின் குடும்பத்தாருடையது.பார்வதி அம்மாளை கண்டு அந்த மொத்த ஊருமே அச்சம் கொள்ளும். அவர் வாயின் வசவு வார்தைகளுக்கு யாருமே தப்ப முடியாது.பல்லவியின் குடும்பம் பயந்தது போலவே பார்வதி அம்மாள் விவரமறிந்து உக்கிர கோலமாக தனது பரிவாரங்களுடன் பல்லவியின் வீட்டருகே வந்து சத்தம் போட தொடங்கினார்.எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவரின் வாயின் வசவு வார்த்தைகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.கடைசியாக பல்லவியின் தாய் அந்த வைக்கோல் போருக்கு இணையான பணத்தை தருவதாக ஊரார் முன்னிலையில் ஒப்புக்கொண்ட பிறகும் சிறிது நேரம் வசை பாடிவிட்டே பார்வதி அம்மாள் இடத்தை காலி செய்தார்.

இது நடந்து ஒரு வாரம் கடந்திருந்தது. பார்வதி அம்மாளின் மூத்த மகளுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.பார்வதி அம்மாள் தன்னுடைய பதினைந்து சவரன் காசு மாலையை உருக்கி மகளுக்கு வேண்டிய நகைகள் செய்ய திட்டமிட்டிருந்தார்.அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பார்வதி அம்மாளின் காசு மாலை கோவில் முற்றத்தில் அறுந்து விழுந்து விட்டது.பார்வதி அம்மாள் அதை அறிந்திருக்கவில்லை. சற்று அங்கு வந்த பல்லவியின் கையில் அது கிடைத்தது. அது யாருடையதென்று அவள் அறியாததால் நேரே சென்று தன் தாயிடம் அதை கொடுத்து விட்டாள்.அதை பல்லவியின் தாய் பார்வதி அம்மாளின் கழுத்தில் பலமுறை பார்த்திருந்ததால், அதை எடுத்துக்கொண்டு நேரே அவர் வீட்டிற்கு செல்ல தொடங்கினார்.அதற்க்குள் பார்வதி அம்மாள் பெருத்த கூக்குரலோடு நகை தொலைந்து போனதற்காய் ஒப்பாரி வைத்து அழ தொடங்கி இருந்தார்.ஊரே அவர் வீட்டருகே திரண்டிருந்தது.பல்லவியுடன் அங்கு வந்த அவளின் தாய் காசு மாலை கோவிலின் அருகே விழுந்து கிடந்த விவரத்தை சொல்லி அதை பார்வதி அம்மாளின் கையில் ஒப்புவித்தார்.பார்வதி அம்மாள் உணர்ச்சி பெருக்கோடு பல்லவியிடமும், அவள் தாயிடமும் நன்றி கூறினாள்.அப்பொழுது திரண்டிருந்த ஊரார் முன்பு, பார்வதி அம்மாளிடம், ‘’சில நூறு ரூபாய் பெருமானமுள்ள அந்த வைக்கோல் போர் எரிந்து போனதற்காக , அதற்குண்டான பணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகும் ஊரார் முன்பு என்னுடைய குடும்பத்தை இகழ்ந்து பேசி , எங்களுடைய வறுமையை ஏளனம் செய்தீர்களே, நாங்கள் வறுமையிலும் செம்மையாய் வாழ நினைப்பவர்கள்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் அற்ப புத்தி கொண்டவர்கள் அல்ல இனியாகிலும் அடுத்தர்களின் இயலாமையை ஏளனமாக பார்க்காதீர்கள் ‘’, என்று சொன்னவுடன் பார்வதி அம்மாள் வெட்கி தலை குணிந்து நின்றது, அன்று வைக்கோல் போர் எரிந்ததற்காக பார்வதி அம்மாள் வசை பாடிய போது பல்லவியின் குடும்பத்தார் அவமானத்தால் தலை குணிந்து நின்றதை விட இன்று பார்வதி அம்மாளின் நிலை ஊரார் முன்பு கேவலமாக இருந்தது.





----சே.தரணிகுமார்

LinkWithin

Related Posts with Thumbnails