பெருத்த உடலோடு கால்கள் சூம்பிய நிலையில் முகம் விகாரமாக பார்க்க அச்சம் தரக்கூடிய தோற்றத்தில் இருந்த பாபுவை அவன் தாய் புவனாவுக்கு சற்றும் பிடிப்பது இல்லை. புவனா மிகவும் அழகாக இருப்பவள். சிறு பிராயம் முதல் அவளுக்கு தன் அழகின் மீது அதீத கர்வம் இருந்தது, அந்த கர்வத்தின் வெளிப்பாடு அவளை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் தருவதாக இருந்தது. அவளுடைய அப்பா புவனாவை தன் சகோதரியின் மகனுக்கு மணமுடித்தபோது அதை புவனா கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஆனால் தந்தையின் சொல் மீறி அவளால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருவுற்ற புவனா , அந்த தாய்மையினால் சிறிதும் சந்தோசம் கொள்ளவே இல்லை. அதை ஒரு சுமையாகவே கருத தொடங்கினாள். அந்த கருவை அழிக்க அவள் எடுத்த எல்லா நடவடிக்கைகளின் விளைவு இன்று பாபுவை நிரந்தர குரூரமாய் , ஊனமாய் மாற்றி இருந்தது. தன் குழந்தையின் ஊனத்தை பற்றி அவள் சிறிதும் கவலைபட்டவள் அல்லள் . தன் தந்தை இறந்த பிறகு புவனாவின் போக்கு முற்றிலும் மாறி விட்டது. அவள் கணவனை விட்டு வேறு ஒருவருடன் இணக்கமாகி போனாள். இதனால் வெறுத்துப்போன அவள் கணவன் எங்கோ கண்காணாமல் போய்விட்டான் .
பாபுவை சிறு பிராயம் முதல் அவன் பாட்டி கமலா தான் பராமரித்து வந்தாள். பாபு அதிகமாக பசி எடுக்கும்போது மட்டுமே சிலவகையான சப்தம் எழுப்புவான். அவனுடைய பசியின் சப்தம் பாட்டியை தவிர மற்றவர்களுக்கு நாராசமான ஒலியாகவே கேட்டது. அவனுக்கு உணவு ஊட்டுவது முதல் சுத்தபடுத்துவது வரை கமலா பாட்டியை தவிர வேறு யாரும் பாபுவை அணுகியதே இல்லை. அந்த வீடு பெரிய பணக்கார தோரணையோடு இருந்தாலும் அங்கிருப்பவர்களின் மனம் மிக குறுகியதாக இருந்தது. பாட்டியை தவிர மற்றவர்கள் பாபுவை ஒரு உயிரினமாக கூட கருதவில்லை .
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் ஒருநாள் கமலா பாட்டிக்கு உயிர் பிரிந்து விட்டது. கமலா பாட்டிக்காக எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். சுவற்றின் ஓரமாக உட்கார்ந்து பாட்டியையே வெறித்து பார்த்து கொண்டிருந்த பாபுவை கண்டு, இனி யார் அவனை பராமரிக்க போகிறார்களோ என்று ஊர்மக்கள் மிகவும் கவலை பட்டனர்.அன்று மாலை கமலா பாட்டியின் அடக்கம் முடிந்து போனது. அன்றைய இரவு முதன்முறையாக புவனா பாபுவுக்கு உணவு ஊட்ட எத்தனித்தபோது பாபு பிடிவாதமாக உணவை ஏற்க மறுத்துவிட்டான் .கால்களால் தவழ்ந்து அவளிடமிருந்து விலகி தூரமாய் சென்று அமர்ந்து கொண்டான்.புவனாவுக்கு அவனுடைய செய்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. வயிறு காய்ந்து போனால் யார் ஊட்டினாலும் தின்ன தொடங்கி விடுவான் என்ற அலட்சியத்தோடு புவனா சென்று விட்டாள்.
மறுநாள் காலை பாபுவை வந்து பார்த்த புவனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாபு உயிரற்ற சடலமாக கிடந்தான். பன்னிரண்டு வருடங்கள் தன்னை காத்து வளர்த்த பாட்டியின் பிரிவை தாங்காத அந்த மனவளர்ச்சியற்ற ஊனமான குழந்தை இனியும் இந்த உலகத்தில் தனக்கென யாரும் இல்லை என்றெண்ணி வாழ பிடிக்காமல் தன் பாட்டி போன இடத்திற்கே போய் விட்டது.பாபு பேசுபவனல்ல , அவனால் எந்த உணர்வுகளையும் புரிந்து கொள்ள இயலாது என்று அவனை ஒரு ஜடப்போருளாகவே கருதிய புவனாவுக்கு , அவன் மனமும் , அதன் உணர்வுகளும் முதன்முறையாக புரிய தொடங்கியது.
பாபு போன்ற எண்ணற்ற குழந்தைகள் ஊனமாக பிறந்ததின் ஒரே காரணமாக பெற்றோர்களின் அரவணைப்பை இழந்து அநாதை ஆக்கப்படுகிறார்கள். இது அவர்கள் வேண்டி வாங்கிய வரம் அன்று. கடவுளின் மறு உருவமாக உணரப்படும் தாய்க்கு பிள்ளைகளின் ஊனம் , அவர்களை வெறுக்கும் காரணியாக அமைவது எத்துணை துரதிஷ்டவசமானது. எந்த சூழ்நிலையானாலும் நாம் பெற்ற பிள்ளைகளை பேணி காப்பது நம்முடைய கடமைதான் என்பது புவனா போன்ற பெண்களுக்கு புரிவதே இல்லை.
--சே.தரணி குமார்