Sunday 4 October 2009

கறுப்பி


அந்த ரயில்வே  காலனியில் வசிப்பவர்களில்  கறுப்பி நாயை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.அந்த அளவிற்கு கறுப்பி எல்லோருடனும் நன்கு பழகி இருந்தது.சிறு பிராயம் முதலே எல்லோருடனும் இணக்கமாகவும் அன்பாகவும் பழகியதால் கருப்பியை அனைவருக்குமே பிடிக்கும்.  கறுப்பி பகல் நேரங்களில் பெரும்பான்மையாக ரயில்வே நிலையத்திலேயே சுற்றி கொண்டிருக்கும் .மதிய நேரங்களில் ரயில்வே தொழிலாளர்கள் சாப்பிடும் போது கறுப்பிக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைத்து விடும் .இரவு சாப்பாடு எங்கள் வீட்டில் சாப்பிடும் .கறுப்பி சாப்பாட்டிற்காக  யார் வீட்டின் முன்பும் நின்றதே இல்லை .கறுப்பி பார்க்க நெகு நெகு வென்று நன்றாக வளர்ந்து இருக்கும் .தூரத்தில் பார்ப்பவர்கள் அதை ஆண் நாய் என்றே ஏமாந்து போவார்கள் .ஆனால்  கறுப்பி யாரையும் வீணாக     பயமுறிதியது   கிடையாது  .மற்றவர்களிடம் பழகுவதை விட என்னிடம் கறுப்பி சற்று அதிக அன்போடு பழகும்.கருப்பியிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நிற்காமல் செல்லும் ரயில் வரும்போது அந்த ரயிலின் வேகத்திற்கு பிளாட்பாரம் உள்ள நீளம் வரை துரத்தும் .இது எங்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும் .






கறுப்பி முதன் முதலாக சூள் கொண்டு குட்டி ஈனும் காலம் நெருங்கியதும் , அதன் குட்டிகளை எடுத்து வளர்ப்பதற்கு சிறுவர்கள் மத்தியில்  நான் நீ என்று போட்டி ஏற்பட்டது .இறுதியில் யார் வீட்டின் அருகே அது குட்டி ஈனுகிறதோ அவர்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவது என்று முடிவானது. ஒரு மழைக்கால மாலை பொழுதில் கறுப்பி இரண்டு குட்டிகளை எங்கள் வீட்டின் டிசம்பர் பூ செடியின் உள்ள ஈன்றது.  கருப்பியின்  குட்டிகளை யாருக்கு தருவது என்ற முடிவு எடுக்கும் தகுதி பெற்றதால்  மறுநாள் முதல் எங்கள் காலனி பிள்ளைகள் மத்தியில் நான் ஹீரோவாகி போனேன் .குட்டி ஈன்ற  நாய்கள் யார் அதன் அருகில் சென்றாலும் அதன் குட்டிகளை எடுக்க  வருவதாக நினைத்து கடித்து விடும் என்று எல்லோரும் பயமுறுத்தியதால் கறுப்பி இல்லாத சமயங்களிலேயே என்னால் அதன் குட்டிகளை பார்க்க முடிந்தது .




இரண்டு நாள் கழித்து எதேச்சையாக தோட்டத்தின்  உள்ளே  சென்ற  என் அப்பாவை கறுப்பி சட்டென்று கடித்து விட்டது.இந்த நிகழ்வால் யாருக்கும் கருப்பியின் மீது கோபம் வரவில்லை,மாறாக குட்டி ஈன்ற நாய் என்ற பரிவும் , மேலும் கடித்து விடுமே என்ற பயமுமே அதிகம் வந்தது .அன்று மாலை மேகம் கருத்து நன்கு மழை வர ஆயத்தம் ஆனது .சற்று நேரத்தில் எல்லாம் சட சட வென மழையும் கொட்ட ஆரம்பித்தது. வீட்டு வாசலில் உட்கார்திருந்த எங்களுக்கு மழையில் நனையும் குட்டி நாய்களின் ஓலம் மனதிற்கு வேதனை தந்தாலும் அருகே செல்ல பயமாக இருந்தது.திடீரென்று தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்த கறுப்பி என்னிடம் வந்து ஓலம் விட்டு அழுததோடு    என் சட்டையை பிடித்து இழுக்க ஆரம்பித்தது .இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களை பயமுறுத்தியதால் அவர்கள் கருப்பியை விரட்ட எத்தனித்த போது  , எனக்கு மட்டும் சட்டென்று கறுப்பி ஏன் என்னை அழைக்கிறது என்பதின் அர்த்தம் விளங்கியது.




நான் எழுந்து தோட்டத்தின் பக்கம் போக ஆரம்பித்ததும் , கறுப்பியும் என் பின்நூடே ஓடி வர ஆரம்பித்தது ,என் பெற்றோர்களின் எதிர்ப்பு குரலையும் மீறி நான் தோட்டத்தின் உள்ளே  சென்று சேற்றில் பரிதவித்த  கருப்பியின் குட்டிகளை அள்ளி எடுத்தபோது கறுப்பி அதை அமோதிப்பது போல வாலை குழைத்து அதன் நன்றியை வெளிப்படுத்தியது . நான் கருப்பியின் குட்டிகளை  துடைத்து வீட்டின் தாழ்வாரத்தின் ஓரம் விட்டதும் , கறுப்பி அதன் குட்டிகளை அரவணைத்து கதகதப்பூட்டி பால் குடுக்க ஆரம்பித்தது . இந்த நிகழ்வு அங்கு இருந்த அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.















மறுநாள் முதல் கருப்பியின் இரண்டு ஆண் வாரிசுகளும் எனக்கு நண்பர்கள் ஆகி போனார்கள் .வெளியில் இருந்து கறுப்பி வந்தாலும் குட்டிகள் என் கையில் இருந்தாலும் கறுப்பி எப்போதும் அதற்க்கு  எதிர்ப்பு காட்டியதே இல்லை .மாறாக வாலை குழைத்து சந்தோஷ பூரிப்பை வெளிப்படுத்தும்.குட்டிகள் சற்று வளர்வதுர்குள்ளாகவே ஒருநாள் வழக்கம் போல அதி வேக ரயிலை துரத்த எத்தனித்த கறுப்பி அந்த ரயிலில் சிக்கி பரிதாபமாக சிதறி போனது .வீட்டில் அதன் குட்டிகளுடன் நான் விளையாடி கொண்டு இருந்தபோது   வெளியில் இருந்து வந்த என் அப்பா கருப்பியின் முடிவை சொன்னதும் துக்கம் தாளாமல் வாய் விட்டு கதறி அழுவிட்டேன் .அன்று காலனி முழுவதுமே சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது.எல்லோரும் கருப்பியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு  இருந்தனர் .மறுநாள் முதல் கருப்பியை மறந்து அவரவர் வேளைகளில் மூழ்கி போன போது  என்னால் மட்டும் கருப்பியை மறக்க இயலவில்லை .






கருப்பியின் சாம்பல் நிற  குட்டிகள்  சற்று வளர்ந்ததும் அவைகளை வளர்க்க எல்லோரும் பிரியபட்டனர் , ஆனால் நான் யாருக்கும் அவைகளை தர மறுத்து நானே வளர்ப்பதாக சொன்ன போது  என் வீட்டில் இதை மறுத்து சொல்ல யாருக்கும் மனம் வரவில்லை.கறுப்பி என்னை நம்பித்தான் அதன் குட்டிகளை விட்டு விட்டு போயிருப்பதாக எப்போதும் எண்ணி கொள்வேன் .கருப்பியின் குட்டிகளை கண்ணுக் கருத்துமாக வளர்த்து வருகிறேன் , எப்போதும்  அவைகளை ரயில் நிலையம் பக்கம் மட்டும் அழைத்து போவதே இல்லை.நான் இல்லாத நேரங்களில் தப்பி தவறி கருப்பியின் குட்டிகளை ரயில் நிலையத்தின் பக்கம் பார்த்தால் தயவு செய்து   அவைகளை என் வீட்டின் அருகே கொண்டு வந்து விட்டு விடுங்கள் .இதை  நீங்கள் கருப்பிக்காக  செய்யும் உபகாரமாக எண்ணி கொள்ளுங்கள் .





- சே .தரணி குமார்

3 comments:

Unknown said...

நல்லா இருக்கு........
இன்னும் நிறைய எழுதுங்க.........

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நல்லா எழுதியிருக்கிறீங்க அண்ணா தொடருங்கோ, கருப்பி உங்களை மட்டிலுமே பாசம் காட்டினது எதனாலண்ணா. ஏதாச்சும் மார்க்கமிருந்தாச் சொல்லுங்கோண்ணா நானும் ஒரு நாய் பிடிக்கணுமுங்கோ..............

யாழிசை said...

நாய்கள் சிறு பிராயத்தில் அதன் மீது அன்பு செலுத்துபவர்களிடம் எப்போதும் அதீத அன்போடு பழகும் ----- முயற்சி செய்யவும்.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails