நர்மதா ஏழ்மை குடும்பத்தில் பிறந்த, நல்ல குணமும்,அழகும் நிறைந்த பெண் .ஏழ்மை குடும்பத்தில் இருந்து படிக்க வந்திருந்தாலும் நர்மதாவின் நேர்மையும் , நல்ல இயல்புகளும் அனைவருக்கும் அவள் மீது மிகுந்த மதிப்பு வைக்க காரணிகளாக இருந்தது. தினமும் பள்ளி செல்வதற்கு முன்பு மாலை கட்டுவதற்கு தேவையான இலைகளை பூக்கடைகாரர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு தன் தம்பிகளுக்கும் தங்கைக்கும் தேவையானவற்றை வாங்கி தருவது நர்மதாவின் வழக்கம். பன்னிரெண்டாம் வகுப்பிற்காக அனைவரும் பக்கத்துக்கு டவுனில் உள்ள ட்யூஷனுக்கு பேருந்தில் சென்று வந்த போது பணமின்மை காரணமாக நர்மதா மட்டும் நடை பயணமாகவே சென்று வருவாள் .
நர்மதாவின் அப்பா கணேசன் சாதாரண மில் தொழிலாளி . அவளின் அம்மா காமாட்சி மன நலம் பாதிக்கப்பட்டவர் . கணேசன் மிகவும் குடிகாரராக ,குடும்பத்தை கவனிக்காதவராக இருந்ததால் நர்மதாவுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அளவிட முடியாதவை .இரண்டு தம்பிகளையும், ஒரு தங்கையையும், தன் தாயும் சேர்த்து நான்கு பேரையும் நர்மதாவே ஒரு தாயை போல கவனித்து வந்தாள் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவராக , அதற்கான எந்த மருத்துவமும் பார்க்காமல் தனக்கு வேண்டும் சமயங்களில் எல்லாம் காமாட்சியை அடித்து துன்புறுத்தி இன்பம் துய்க்கும் , இரக்கமற்ற மனநிலையில் கணேசன் இருந்தது நர்மதாவிற்கு ஆற்றொணா துயரத்தை தந்தது.
குடித்து விட்டு வேலைக்கு சென்றதால் கணேசனின் மில் வேலை பறிபோனது. பின்னர் சிற்சில சொற்ப வேலைகள் மூலம் கணேசன் ஈட்டும் வருமானம் அவருக்கு குடிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.இதனால் படிப்பை தொடர முடியாத நர்மதா கிடைத்த வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கினாள். அடுத்த இரண்டு ஆண்டுகள் நர்மதாவிற்கு சிரமம் நிறைந்ததாக அமைந்தது . குடும்பம் நடத்த மகள் படும் சிரமம் பற்றி அக்கறை கொள்ளாத கணேசன்,வீட்டில் பருவம் எய்திய மகள் இருக்கும் பிரதிக்ஞை கொஞ்சமும் இன்றி மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியை குடித்து விட்டு வந்து காமத்திற்காக அடித்து துன்புறுத்தும் அவலங்கள் நிதம் நடந்தேற துவங்கின .மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட காமாட்சி கணேசனை கண்டதும் அஞ்சி நடுங்கி நர்மதாவின் பின்னே ஒளிவது நர்மதாவிற்கு தாங்க முடியாத வேதனையை தந்தது. நர்மதாவிற்கு தெய்வங்கள் மீதான நம்பிக்கைகள் முற்றிலும் அற்று போனது.தன்னனை நம்பி வாழும் நான்கு ஜீவன்களுக்காக வாழ்ந்தாகவேண்டிய சூழலானது.
ஒருநாள் காமாட்சிக்கு உடல் நலமில்லாததால் வேலைக்கு போவதா வேண்டாமா என்று நர்மதா யோசித்துகொண்டிருந்த போது வழக்கம் போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கணேசனை கண்டதும் சரி இவர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் வேலைக்கு போய்விட்டாள்.பின்னர் வேலை செய்யும் இடத்தில நிலைமையை சொல்லி விட்டு சற்று நேரத்தில் எல்லாம் வீடு திரும்பிய நர்மதாவுக்கு , கைகள் துணியால் கட்டப்பட்டு தரையில் அலங்கோலமாக கிடந்த காமாட்சியையும், தன்னை மறந்து பிணம் பல தூங்கி கிடந்த கணேசனையும் பார்த்த பிறகு என்ன நடந்திருக்கு என்பதை யூகிக்க முடிந்தது .கைகள் விடுவிக்கப்பட்ட காமாட்சி ஒரு கோழி குஞ்சினை போல நர்மதாவின் பின்னால் ஒளிந்து கொள்ள எத்தனித்தபோது , நர்மதா உடைந்து அழுதுவிட்டாள்
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நர்மதாவிற்கு இந்த உலகமே கொடுரமானதாகவும் இறக்கமற்றதாகவும் மனதில் பட்டது. வீட்டை விட்டு வெளியே நடக்க துவங்கிய நர்மதா கால் போன போக்கில் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.இரவு ஆகியும் நர்மதா வீடு திரும்பாததால் நர்மதாவின் தம்பிகளும் தங்கையும் மிகுந்த கலக்கமுற்றனர். ஆனால் கணேசன் ,சிறிதும் வாய் கூசாமல் நர்மதா வேலை இடத்தில எவனோடோ ஏற்பட்ட காதலால் ஓடி போய் இருப்பாள், என்று இத்துணை அளவு குடும்பத்திற்காக கஷ்டப்பட்ட மகள் மீது மனசாட்சியின்றி பழிசுமத்தினார்.
இரண்டு நாட்கள் கழித்து கிணற்றில் நர்மதா பிணமாக மிதப்பதாக செய்தி பரவியதும் , ஊரார் அனைவரும் அந்த அபலை பெண்ணிற்காக மிகவும் பரிதாபப்பட்டனர். மீன்கள் கடித்து முகம் எல்லாம் சிதைந்து போயிருந்த உடலை உடனடியாக தகனம் செய்ய ஏற்பாடானது. அங்கு நர்மதாவின் தாய் காமாட்சி அழைத்து வரப்பட்டார்.அந்த மனநலம் குன்றிய தாயால் தன்னை ஒரு சேயை போல பாவித்து இத்துணை நாள் சோறூட்டி,காப்பாற்றி ,தன்னுடைய இயலாமை கண்டு மனம் பொறுக்காமல், மனமுடைந்து இறந்து போன மகளின் மரணம் பற்றி உணரவோ அல்லது ,அழுதுகொண்டிருக்கும் தன்னுடைய மற்ற பிள்ளைகளுக்கும் ஆறுதல் தரவோ இயலவில்லை.
எப்போதும் போல வெறித்த பார்வையுடன் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்த காமாட்சிக்கு இனியாவது மனிதத்தன்மையற்ற கணேசனிடமிருந்து விடிவும் ,அந்த குடும்பத்துக்கும் அவரிடமிருந்து பரிவும், பாசமும் கிடைக்கபெறுமா ?
நர்மதாவின் ஆத்மா தான் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
---சே .தரணிகுமார் .
4 comments:
கதை நல்லாயிருக்கு... இன்னும் சில மாறுதல்கள இருந்தால் நன்றாக இருக்கும் போல தெரிகின்றது.. நர்மதாவின் தற்கொலை ஏற்றுகொள்வது போல் இல்லை என்றே நினைக்கின்றேன்
நன்றி திரு. ஞானசேகரன், இப்போது தான் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இனி மேலும் சிறப்பாக எழுத முயல்வேன்.
நன்றி
thankx a lot Mr. Nishar
Post a Comment