Wednesday, 14 October 2009

லட்சுமி பாட்டி



அந்த சிறிய கிராமத்தில் லட்சுமி பாட்டியை பற்றி தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்கவே முடியாது.அந்த ஊரில் எங்கு குழந்தை பிறப்பு என்றாலும் , எங்கு பூப்பெய்தல் நடந்தாலும் , கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும், லட்சுமி பாட்டியை முதல் ஆளாக அங்கு கட்டாயம் எதிர்பார்க்கலாம் .  ஊரின் நிகழ்வுகளை     தன் சொந்த வீட்டின் நிகழ்வினை போல எண்ணுவதோடு இயன்ற அளவிற்கு உதவும் உள்ளம் படைத்தவர்.




லட்சுமி பட்டிக்கு இரண்டு மகன்கள் .மூத்த மகன் வெளி நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதால் லட்சுமி பாட்டி தன்னுடைய இரண்டாவது மகனுடனேயே இருக்கும்படி ஆகிவிட்டது. லட்சுமி பாட்டியின் பரோபகார குணம் அவரது மகனுக்கு கொஞ்சமும் பிடிப்பது இல்லை. தன் கணவர் உயிருடன் இருந்தவரை லட்சுமி பாட்டி அவருடன் சேர்ந்து வாழவே இல்லை .ஊரில் இருக்கும் தலைமை ஆசிரியர் ஒருவருடன் லட்சுமி பாட்டிக்கு அந்த காலத்தில் தொடர்பு இருந்ததாக பெரிசுகள் அவ்வப்போது பேசி கேட்டதுண்டு .ஆனால் லட்சுமி பாட்டி அவருடன் நேரிடையாக பேசி நாங்கள் பார்த்தது இல்லை.




லட்சுமி பாட்டி இருக்கும் பெரிய வீடும், ஆறு ஏக்கர் நஞ்சை நிலமும் லட்சுமி பாட்டியின்  பெயரில் இருந்தது. வங்கியில்  தன் கையிருப்பில் இருந்த கணிசமான  தொகையில் இருந்து அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு  அவர் உதவுவதாலேயே அவருக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி பெரும் சண்டைகள் நிகழ்ந்தவன்ணமாய் இருந்தது.




ஒருநாள் லட்சுமி பாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக  ஊரில் செய்தி பரவியதும் ஊரே துக்கத்தில் ஆழ்ந்தது.
லட்சுமி பாட்டி தற்கொலை செய்து கொண்டதை எவராலும் நம்ப முடியவில்லை. சொத்து  பிரச்சனைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபட்டது.லட்சுமி பாட்டியை பார்க்க தலைமை ஆசிரியர் கட்டாயம் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கையில் , காவல் துறையினர் வந்து, லட்சுமி பட்டியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனைக்காக லட்கிமிபாட்டியின் உடலை கொன்று சென்றனர்.தலைமை ஆசிரியர் தான் அத்தகையதொரு புகாரை தந்திருப்பது தெரிய வந்தது.




லட்சுமி பாட்டியின் மகன்  பார்க்க  வேண்டியவர்களை  பார்த்து, தர வேண்டியதை  தந்ததின் விளைவாக  லட்சுமி பாட்டியின் மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனையில்  முடிவானது , காவல்துறையும் வழக்கை முடித்துக்கொண்டது.பிரேத பரிசோதனைக்கு பிறகு லட்சுமி பாட்டியின் இறுதி  ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் இரு பெரிசுகள் பேசிக்கொண்டிருந்தபோது ,''வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போலவே லட்சுமி பாட்டியின் மரணமும் நிகழ்ந்து விட்டதாக'' பேசிக்கொண்டார்கள், விசாரித்தபோது, தலைமை ஆசிரியருக்கு லட்சுமி பாட்டியுடன் ஏற்பட்ட தொடர்பை கண்டித்து பார்த்த தலைமை  ஆசிரியரின்  மனைவி,இறுதியில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் , அப்போது அவருடைய குடும்பத்தார் தந்த சாபத்தினால் ,  என்னதான் லட்சுமி பாட்டி நல்லவராக வாழ்ந்த போதும் அவரது இறுதி முடிவு இவ்வாறாக ஆனதாக பேசிக்கொண்டார்கள்.




சுயநலமின்றி, எப்போதும் புன்னகையுடன் மற்றவர்களுக்கு வழிய சென்று உதவும் லட்சுமி பாட்டியின் மரணம் அந்த ஊர் பெண்கள் முகத்தில் பெரும் சோகத்தை இழைத்திருந்தது.





---சே. தரணி  குமார்

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

சிறுகதையா.. உண்மை சம்பவமா? எதுவானாலும் எதார்த்தமாக இருக்கு? இயல்பாக உள்ள எழுத்தும் சரிதான்...

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails