நாங்கள் வசித்த அந்த அரசு அலுவலர் குடியிருப்பு எப்போதும் அசாத்திய சூழ்நிலையுடன் மிகவும் ரம்மியமாக இருக்கும்.அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் உயர்தட்டு அரசு அலுவலர்களாக இருந்ததினால் அங்கு எந்த பிரச்னையும் எப்போதும் வந்ததில்லை.அந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு நண்பர்கள் வட்டங்கள் இருந்தாலும் எங்கள் நல்லபண்புகளால் அந்த குடியிருப்பினர் எங்கள் நட்பு வட்டத்தை பற்றி உயர்வாக பேசிக்கொண்டார்கள்.எங்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டி ஒரு பஞ்சாலையின் குடியிருப்பு ஒன்று இருந்தது.அதன் அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த மோகன் எங்களுடன் பழகலானான் . பின்னர் அவனுடைய ஒத்த பண்புகளாலும் , நல்ல இயல்புகளாலும் மிக விரைவிலேயே எங்கள் நட்பு வட்டத்தில் நெருங்கிய நண்பனாக மாறிவிட்டான்.
மோகன் குடும்பம் மிக ஏழ்மையானது .அவனுடைய அப்பா பஞ்சாலையில் நிரந்தரமில்லாத தினக்கூலி வேலை செய்து வந்தார்.குடும்ப சூழ்நிலையால் மோகன் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவன் ஒரு மின் இணைப்பு வேலை செய்பவரிடம் உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து ,மூன்று வருடங்களில் சொந்தமாக சிறு மின் வேலைகளை எடுத்து செய்து வரலானான் .எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரிடத்தும் இரு சக்கர வாகங்கள் இருந்த போதிலும் ,நாங்கள் பலமுறை வற்புறுத்தியபோதும் மோகன் ஒருபோதும் எங்கள் வாகனங்களை வாங்கி சென்றதே இல்லை.அவனுக்கு என்று சொந்தமாக ஒரு சைக்கிள் கூட அவனிடம் இருந்ததில்லை. தொலைதூர வேலை என்றால் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்று விடுவான்.
நீண்ட காலமாக மோகனுக்கு சுயமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதை பற்றிஅவன் நிறைய கனவுகள் கொண்டிருந்தான்.எங்களிடம் அதனை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான். தன் உழைப்பில் வீட்டு செலவுகளுக்கு தந்தது போக மீதம் இருக்கும் பணத்தை மிக சிரமப்பட்டு சைக்கிள் வாங்க வேண்டி சேமித்து வைத்து கொண்டிருந்தான். நாங்கள் பலமுறை அவனுக்கு சைக்கிள் வாங்க பண உதவி செய்ய முற்பட்டோதும் , சுயமான உழைப்பினாலேயே தன்னுடைய லட்சியத்தை அடைய நினைப்பதாக இனிமையாக கூறி எங்கள் பண உதவிகளை மறுத்து விடுவான் .
ஒருமுறை,நண்பனுடைய அண்ணனின் திருமணத்திற்காக நாங்கள் அனைவரும் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தோம் .இரவு நெடுநேரம் வரை நாங்கள் அனைவரும் தூங்காமல்பேசிக்கொண்டிருந்தோம்.மோகன் மிக இனிமையாக பாடக்கூடியவன் . அன்றைய தினம் மோகன் மிக இனிமையான பாடல்களாக பாடி மிகவும் உற்சாகமாய் இருந்தான்.காரணம் கேட்டபோது தான் வேலை செய்து கொண்டிருக்கும் வீட்டின் மின் இணைப்பு வேலைகள் நாளையுடன் முடிவடைவதாகவும் ,அவர்கள் தரப்போகும் மீத பணம் கொண்டு தன்னுடைய நீண்ட நாள் கனவான சைக்கிளை வாங்க போவதாகவும், அந்த தருணத்தில் நாங்கள் அவனுடன் இருக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக்கொண்டதை எங்களால் மறுக்க முடியவில்லை.அவன் சைக்கிள் வாங்க போவது அவனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் திருமணம் முடிந்து நாங்கள் அன்றைய தினம் வெளியான ஒரு புது திரைப்படத்திற்கு செல்வதென்று முடிவானது. எவ்வளவோ வற்புறுத்தியும் மோகன் வேலையை காரணம் காட்டி எங்களுடன் வர மறுத்துவிட்டான். மாலையில் அவன் சைக்கிள் வாங்க செல்லும்போது எல்லோரும் சேர்ந்து செல்வதென முடிவு செய்துக்கொண்டு மோகனை தவிர்த்து நாங்கள் மட்டும் திரைப்படத்திற்கு சென்று விட்டோம். திரைப்படம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.மின்சார இணைப்பு கொடுக்க போன இடத்தில , துரதிர்ஷ்டவசமாக மின்சாரத்தில் சிக்கி மோகன் உயரிழந்து விட்டிருந்தான். காலைவரை எங்களுடன் இனிமையாக பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பனை உயிரற்ற சடலமாக பார்த்தபோது எங்களால் அதை சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எங்களின் நெஞ்சில் நிறைந்த இனிய நண்பன் ,எங்களின் தோள்கள் மீது பயணித்து தன்னுடைய இறுதி ஊர்வலத்தை முடித்துக்கொண்டு மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டான். அந்த ஏழை குடும்பத்து தன்மான இளைஞனது சைக்கிள் கனவு பகல் கனவாக நிறைவேறாமலேயே போய்விட்டது. இப்போது நாங்கள் அனைவரும் படித்து முடித்து நல்ல வேலையில் நிறைவாக இருந்தபோதும்,வசதியான கார்களில் பவணி வந்தபோதும் எங்கேயாவது புது சைக்கிள் கடைகளில் விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை பார்க்கும் போது மோகனின் நினைவுகளால் மனது கணமாகிவிடுகிறது.
----சே.தரணி குமார்
6 comments:
Arumaiyana Kadhai, Manathai neruti vittadhu.
K. Saravanan.
நன்றி திரு .சரவணன்
:)
நன்றி
idhayam urugiyathu ..
thank you Mr. Nishar.
thank you Anonymous
Post a Comment