Monday 19 October 2009

உயிர்மூச்சு





எழுபது வயதை கடந்த சரஸ்வதி பாட்டிக்கு கண்பார்வை மிகவும் மங்கி போயிருந்தது. காதுகளின் கேட்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. அவருடைய சொந்த பந்தங்களிலேயே சரஸ்வதி பாட்டி தான் வயதில் மூத்தவர். இறந்து போன மூத்த மகனோடு சேர்த்து  சரஸ்வதி பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்திருந்தது. இளைத்த உருவத்துடன் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க கூடியவரான சரஸ்வதி பாட்டி கடந்த நான்கு மாதங்கள் முன்புவரை எல்லோரையும் போல வயல்வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்தான். அவருக்கு வந்த காய்ச்சல் ஒரு மாதம் நீடித்ததில் மிகவும் வாடிப்போன சரஸ்வதி பாட்டி ,இருமுறை தவறி விழுந்ததில்,கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாகி ,நான்கு நாட்களாக மிகுந்த கவலைக்கிடமாக மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்.

சரஸ்வதி பாட்டிக்கு முற்றிலும் பேச இயலாமல் போயிருந்தது. கடந்த நான்கு நாட்களாக தன் உறவுகள் எல்லாம் கூடி தன்னுடைய மரணத்தை பற்றி இடையறாது பேசிக்கொண்டிருந்தது சரஸ்வதி பாட்டிக்கு நன்கு கேட்டுக்கொண்டிருந்தது.இது அவருக்கு தாங்க முடியாத மன வேதனையை உண்டாகி இருந்தது. மரணம், எப்போதும் எவருக்கும் எதிர்பார்க்ககூடிய ஒன்றாக இருந்ததில்லை.  மரணம் நேருமே என்ற நினைவே பலருக்கும் பெரும் வேதனையை தரக்கூடியதாக இருக்கிறது.முற்றிலும்  இயலாமல் போய்விட்ட காலத்திலும் கூட  எவருக்கும் துணிந்து மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் அத்துணை சுலபமாய்  வந்து விடுவதில்லை.

திடீரென்று மரணமடையும் ஒருவருக்காக மிகவும் பரிதாபப்படுபவர்கள் , நீண்ட நாட்களாக நோயுற்றிருந்து மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்து இறந்து போகிறவர்களுக்காக அத்துணை பரிதாபம் கொள்வதே இல்லை .உறவுகளுக்கு  கூட ஒருவித சலிப்பு வந்து விடுகிறது. எல்லாமே பண்டமாற்றாகிபோன வணிக உலகில் மனங்களுக்கு இடையேயான இடைவெளிகள் அதிகரித்து ,உறவுகளை பேணுவதும் அரிதான காரியமாகிவிட்டது.

சரஸ்வதி பாட்டியை பார்க்க வந்திருந்த உறவினர்கள் அவரின் உயிர் பிரிய வேண்டி ஆளுக்கொரு உபாயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு விருப்பமானவர்களை விட்டு வாயில் பாலூற்ற சொல்லிவிட்டு, ஒழுங்கீனமாய் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவருடைய மார்புகூட்டின் சுவாசம் நின்று போனதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.இதேபோல உயிருக்கு இழுத்துக்கொண்டிருந்த தன் பாட்டிக்கு தங்கத்தை உரசி தண்ணீரோடு புகட்டியபின் உயிர் பிரிந்ததாக , ஒரு உயிரை வதைத்து கொன்ற பாவத்தை சற்றும் உணராதவராக, நான்காவது வீட்டு ஆறுமுகம் சொன்னபோது,அதையும் செயல்படுத்தி பார்த்து விட்டார்கள்.மறுநாளும் உயிர் பிரியாது வாழ எத்தனித்துக்கொண்டிருந்த  சரஸ்வதி பாட்டியை கண்டு அவருடைய மருமகள்கள் முகம் சுளித்து தங்கள் விரக்தியை வெளிக்காட்டினர்.அந்த வீட்டின் குழந்தைகள் மட்டும் உயிர்வதை பட்டுக்கொண்டிருந்த பாட்டியை எட்டத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரம் என்றும் , உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு அன்றைய தினத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று ஊரில் பரவலாக பேசிக்கொண்டார்கள்.ஆனால் பாவம் என்ன காரணத்தினாலோ , சரஸ்வதி பாட்டியின் ஜீவனற்ற எலும்புகூடு தேகத்தில் உயிர் எங்கேயோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.அதற்க்கு அடுத்த நாள் வேறொருவர் தந்த யோசனைப்படி சரஸ்வதி பட்டியின் உயிர் பிரிய வேண்டி , அவரை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி சிறிது நேரம் வெயிலில் கிடத்தி இருந்தார்கள்.  சரஸ்வதி பாட்டியின் மனதில் ஒரு அசாத்திய வெறுமை பரவிகிடந்தது. கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை இறந்து போன தனது கணவரையும் , மூத்த மகனையும் பற்றி சிந்திக்க முடிந்த சரஸ்வதி பாட்டிக்கு இப்போது அதுவும் இயலாததாகிவிட்டது.

மரணம் தன்னை நெருங்காதா என்ற சரஸ்வதி பாட்டியின் ஏக்கம் , அவர் மரணத்திற்காக எதிர்பார்த்திருக்கும் உறவுகளின் ஏக்கத்தை விட சற்று அதிகமானதாக இருந்தது.பாட்டியின் மரணத்திற்காக மேற்கொள்ளப்பட பலவித முயற்சிகளும் பலிதமாகாமல் போனதால் உறவுகள் சலித்து கொள்ள  தொடங்கி இருந்தது.வெளியூரில் இருந்து வந்திருந்தவர்கள் அவரவர் வேலையை பார்க்க நாளை ஊர் திரும்பலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த இரவில் தேய்பிறை நிலவு  மங்கிய வெளிச்சத்தோடு மேகங்களின் ஊடே மறைந்து கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிழ்ந்த அந்த நடு நிசியில் யாருமற்ற தனிமையில் கிடத்தப்பட்டிருந்த சரஸ்வதி பாட்டிக்கு இரண்டு முறை பெரிய விக்கல் வந்தது.தண்ணீருக்காக அவர்  மனம் ஏங்கியது . மூன்றாவது விக்கல் வர எத்தனித்தபோது சப்தமின்றி சரஸ்வதி பாட்டியின் உயிர்மூச்சு அடங்கி போனது.

மறுநாள் காலையில் கோழிகளை விரட்டிக்கொண்டு வந்த அந்த வீட்டு குழந்தைகள் சரஸ்வதி பாட்டியை எறும்புகள் மொய்திருப்பதை கண்டு சொன்னபிறகே உறவுகளுக்கு சரஸ்வதி பாட்டி இறந்து போனது தெரிய வந்தது. அதுவரை இறந்துபோக மாட்டாரா என்று எண்ணற்ற வழிகளை யோசித்தவர்கள் , ஒரு பொய்யான அழுகுரலோடு அவரின் மரணத்திற்கு துக்கம்  அனுஷ்ட்டிக்க தொடங்கினர்.            

வயது முதிர்ந்து,  நோயுற்று ,மரணத்தை தழுவும் எல்லோருக்கும் இறுதி வரை தன்னுடைய உறவுகளின் அன்பான கவனிப்பு கிடைத்து விடுவதில்லை. அவர்களின்  மரணம்  உறவுகளால் மிகவும் எதிர்பார்க்கபடுகிற நிகழ்வாக  அமைந்து விடுகிறது.மரணமுறுகிறவர்களின் மனதின்   வலிகளை நெருங்கிய உறவுகள் கூட உதாசீனப்படுத்தி விடுகின்றன.யாருமற்ற இரவில் தனிமையில் நடந்து போகும் குழந்தையின் மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இயலாமையுடன் அவர்கள் விடும் மூச்சு காற்றின் சப்தம் அவர்களுக்கே மிக கொடூரமாய் கேட்க தொடங்கி விடுகிறது.மரணத்தை இருகரம் கூப்பி அவர்கள் அழைத்து கொண்டே இருந்தாலும் , அது அவர்களுக்கு ஒளிந்து கண்ணாமூச்சி  விளையாடும் குழந்தையாய் அவர்கள் முன்பு கண் சிமிட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.


--சே. தரணி குமார்

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

அருமையான சிதறல்கள்....

saran said...

"எல்லாமே பண்டமாற்றாகிபோன வணிக உலகில் மனங்களுக்கு இடையேயான இடைவெளிகள் அதிகரித்து ,உறவுகளை பேணுவதும் அரிதான காரியமாகிவிட்டது"

நிதர்சனமான உண்மைகள், வாழ்கையில் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு பாரமாகி போவதை இந்த கலியுகத்தில் இல்லாமல் வேறு எங்கும் காண இயலாது.

--

Endrum Ninaivudan...

K. Saravanan

What is the Secret of SUCCESS.... ? "RIGHT DECISIONS"

How do you make Right Decisions... ? "EXPERIENCE"

How do you get Experience.. . ? "WRONG DECISIONS

யாழிசை said...

நன்றி திரு. ஞானசேகரன் .

யாழிசை said...

நன்றி திரு.சரவணன்.

அகநாழிகை said...

அருமையான பகிர்வு.

- பொன்.வாசுதேவன்

யாழிசை said...

நன்றி, திரு.பொன் வாசுதேவன்

நிலாமதி said...

வாழ்க்கையின் இறுதியை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள் பதிவுக்கு நன்றி

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails