Wednesday, 28 October 2009

சேவை





நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு கண்சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் , அதை நடத்துவது குறித்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கல்லூரியின்  என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களில் விருப்பமானவர்களை கொண்டு ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் அறுபது மாணவர்களும் மாணவிகளும் சேவை செய்ய
முன்வந்தனர்.             

குறிப்பிட்ட தினத்தில் கண்சிகிச்சை முகம் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது .வயது முதிர்ந்தவர்கள் கண்புரை நீக்கவேண்டி அதிகம் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில்   
இருநூற்றி முற்பது நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவானது. வந்திருந்தவர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்கள் முகாமை விட்டு போகாதவன்னம் பார்த்துக்கொள்வது மிகுந்த சிரமமாய் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக தங்கபோகும் விஷயத்தை தங்கள் பிள்ளைகளுக்கு தெரிவிக்க அவர்கள் மிகவும் முனைந்தனர். ஆனால் அப்படி தகவல் தெரிந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே உறவினர்கள் துணைக்கு வந்தனர். பெரும்பான்மையினருக்கு உதவ யாரும் வரவே இல்லை .


அன்றைய மறுநாள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை நடந்தேறியது. அடுத்த மூன்று நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி தையல் பிரித்தவுடன் வீடு திரும்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே மாணவர்களில் பாதி பேர் முதியவர்களுக்கு சேவை செய்வதை விரும்பாமல் , அதை சிரமமாக எண்ணி விலகி கொண்டனர். மீதமுள்ள நாங்கள் முப்பது நபர்கள் மட்டும் அடுத்த இரண்டு நாட்கள் இரவு பகலாக சிறிதும் உறக்கம் ஒய்வு இன்றி  அந்த முதியவர்களுக்கு கண் கட்டு பிரிக்கும்வரை  எங்களால் இயன்ற சேவைகளை செய்து கொண்டிருந்தோம். கடைசி நாள் அவர்கள் அவர்கள் கண் கட்டுகள் பிரிக்கப்பட்டு அவர்கள் பார்வை சீரானதும் அவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டானது.


இறுதி நாளில் எங்கள் கல்லூரியின் சார்பில் எளிய பிரிவு உபசார விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய எங்கள் கல்லூரி முதல்வர் எங்களை சுட்டி காட்டி , ''இதோ இங்கிருக்கும் இந்த முப்பது பிள்ளைகளும் உங்கள் உறவுகளுக்கு நிகராக மிக்க கனிவோடு உங்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்திருக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு என்று தருவதற்கு உங்களிடம் பணமோ , பொருளோ இல்லாமல் இருக்கலாம் ஆனால், இந்த பிள்ளைகள் தங்கள் பிற்கால வாழ்வில் நல்ல வேலையும், குடும்பமும் அமைந்து சிறப்பாக வாழ வேண்டும் என்று மனதார  வாழ்த்தும் மனம் உங்களிடம் இருக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன்'' என்று கூறியவுடன் அத்துணை பேரும் எழுந்து நின்று எங்களுக்காக கை கூப்பி மனமுருக பிரார்த்தித்தனர். அந்த நிகழ்வு எங்களுக்கு பெரும் சந்தோசத்தையும் மனநிறைவையும் தந்தது. 

இன்று நல்ல வேலை, நல்ல குடும்ப சூழல் என மனநிறைவான வாழ்க்கை  எங்களுக்கு அமைய  எங்கள் படிப்பும் , குடும்பமும்  இன்ன பிற எண்ணற்ற காரணங்களும் இருந்தாலும் , அன்று எங்கள் சேவையின் காரணமாக எங்கள் வாழ்க்கை வளம்பெற வாழ்த்திய அந்த முதியவர்களின் கூட்டு பிரார்த்தனையும்  எங்களின் வளர்ச்சிக்கு  ஒரு மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது என்பதை என்மனம் ஆழமாக நம்புகிறது.



----சே. தரணிகுமார்
  

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே,,, நல்ல பகிர்வு

யாழிசை said...

நன்றி திரு.ஞானசேகரன்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails